ஜோதிட ரகசியங்கள்

ஜாதகம் ஏன் பார்க்க வேண்டும்? எப்போது பார்க்க வேண்டும்?

இரண்டு மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் என்னைச் சந்திக்க வந்தார். அவர் ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருப்பதாகவும், ஜோதிட சம்பந்தமான அந்தக் கட்டுரைக்கு சில தகவல்கள் வேண்டும் என்றும் என்னைக் கேட்டார். நான் ‘‘உங்களுக்கு ஜோதிடம் தெரியுமா?’’ என்று கேட்டேன். ‘‘தெரியாது. ஆனால் என்னுடைய நண்பர் ஒருவர் ஒரு ஜோதிட புத்தகத்தை வாங்கித் தந்தார். ஆனால், அதை படித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் உங்களிடம் வந்தேன்’’ என்றார். நான் அவருக்கு ஜோதிடத்தின் அடிப்படையை குறித்து ஒரு மணி நேரம் சில விஷயங்களைச் சொன்னேன். அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. காரணம், ஒரு சில ஜோதிட புத்தகத்தைப் படித்தால், ரொம்ப எளிதாக ஜோதிடத்தைப் புரிந்து கொண்டுவிடலாம்.

அடுத்தவர்களுக்கும் சொல்லிவிடலாம் என்று தோன்றும். ஆனால், அது அத்தனை எளிதானதல்ல. 12 கட்டங்கள், 9 கிரகங்கள். இது ஏதோ ஒரு அமைப்பில் ஒவ்வொரு ஜாதகத்திலும் இருக்கும். சில ஜாதகங்களில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். ஆனாலும், பலன்கள் வெவ்வேறு மாதிரியாக இருக்கும்.இவற்றைப் புரிந்து கொண்டு பலன் சொல்வது என்பது மிகப் பெரிய பயிற்சியினாலும், முயற்சியினாலும், தெய்வ அனுக்கிரகத்தினாலும் மட்டும்தான் முடியும். ஜோதிடம் சொல்பவர்களை நம்முடைய முன்னோர்கள் சாதாரணமாக நினைக்கவில்லை. எதிர்காலத்தை பற்றி சொல்லும் அவர்களை, “தெய்வக்ஞர்’’ என்றே அழைத்தார்கள். தெய்வ அனுக்கிரகத்தின் வழியாக கிரகங்கள் உணர்த்துவதை, வெறும் கட்டங்களைப் பார்த்து எளிதாகப் பலன் சொல்லிவிட முடியாது. அப்படிச் சொன்னால், அது தவறாகவே இருக்கும்.“ஜோதிடம் சொல்வதில் தெய்வ ஆற்றல் எதுவும் இல்லை; இது ஒரு சாதாரண கணித அறிவியல் போல்தான்” என்று பலரும் சொல்லுகின்றார்கள். “முறையான வானியல் கணித அறிவியல் தெரிந்திருந்தால் ஜோதிடத்தைச் சொல்லிவிடலாம்” என்று சொல்வது, என்னைப் பொறுத்தவரை அனுபவத்தில் சரியாக இருக்காது. இதைத்தான் அடியேன் வேறு விதமாகச் சொல்லுவேன்.

உலகத்தில் எந்த மூலையில் போய், அடிப்படைக் கணிதம் தெரிந்த யாரிடம் கேட்டாலும், எட்டையும் எட்டையும் கூட்டினால் 16 வரும் என்று ஒரே விடையைத் தான் சொல்வார்கள். ஆனால், சிறந்த பெயர் வாங்கிய மூன்று ஜோதிடர்களிடம், நீங்கள் ஒரு ஜாதகத்தைக் காட்டி, பலன் சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்லும் பலன் நிச்சயம் மூன்று விதமாகத்தான் இருக்கும். அபூர்வமாக எப்பொழுதாவது ஒருமுறை ஒன்றாக இருக்கலாம். அப்படி இருந்தாலும், ஒருவர் உறுதியாகச் சொல்லுவார். ஒருவர் சந்தேகமாகச் சொல்லுவார்.நன்கு பயிற்சி பெற்று, பல ஜாதகங்களைப் பார்த்து, அனுபவம் மிக்க அவர்களே இப்படிச் சொல்லும் பொழுது, பயிற்சி இல்லாதவர்களால் எப்படி கிரக இயக்கங்களையும், அது என்ன பலனைத் தரும் என்கின்ற கணிப்பையும் மிகச் சரியாக வெளிப்படுத்த இயலும்?இதையெல்லாம் மௌனமாக கேட்டுக் கொண்ட அந்த பேராசிரியர், கடைசியில் ஜோதிடம் குறித்து எளிமையாகத் தெரிந்து கொள்ளலாம் என்கின்ற ஆசையை விட்டுவிட்டு கேள்வியை வேறு மாதிரியாகக் கேட்டார். அவர் கேட்ட கேள்வி இப்படி இருந்தது.‘‘ஐயா, நான் ஜோதிடத்தைப் பற்றி கட்டுரை எழுதப் போவதில்லை. ஆனால் அதற்கு பதிலாக, இப்படி அந்த கட்டுரையை அமைத்துக் கொள்ளலாம் என்று இருக்கின்றேன்.

ஜோதிடம் பார்ப்பது அவசியமா? ஏன் பார்க்க வேண்டும்? எப்போது பார்க்க வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலாக என்னுடைய கட்டுரையை அமைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். இதற்கு மட்டும் நீங்கள் தகவல் கொடுத்தால் போதும் என்றார். அதில் முதல் கேள்வி ‘‘ஜோதிடம் பார்க்க வேண்டுமா?’’ நான் சொன்னேன். ‘‘பார்க்க வேண்டுமா, பார்க்கக் கூடாதா என்பது அவரவர்கள் விருப்பத்தைப் பொறுத்தது. இரண்டாவதாக அவரவர்கள் நம்பிக்கையை பொறுத்தது. ஆனால், தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்து என்னவென்று சொன்னால், எடுத்ததற்கெல்லாம் ஜாதகத்தைப் பார்க்க வேண்டியது இல்லை’’.‘‘காரணம் என்ன?’’ என்று கேட்டார். நான் சொன்னேன்.‘‘ஜாதகம் என்பது பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களின் விளைவு. ஜனனி ஜன்ம சௌக்யானாம், வர்தனி குல சம்பதாம். பதவி பூர்வ புண்யானாம், லிக்யதே ஜன்ம பத்திரிகா’’ என்று எழுதிவிட்டுதான் ஜாதகம் எழுதுவார்கள். தொடர் பிறவிகளின் அடிப்படையில், முற்பிறவி வினைகளின் விளைவே இப்பிறவியின் ஜாதகம் என்பதால், பெரும்பாலும் அந்த விளைவுகளை நாம் எதிர் கொள்ள வேண்டுமே தவிர, அதை மாற்றிவிட முடியாது.

அதனால், அடிக்கடி ஜாதகம் பார்க்க வேண்டியது இல்லை. ‘‘அப்படியானால் எப்பொழுதெல்லாம் பார்க்கலாம்?’’ என்றார். நான் சொன்னேன். ‘‘இப்பொழுது ஒரு குழந்தை படித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு ஏதேனும் ஒரு துறையில் விருப்பம் இருக்கிறது. அந்தத் துறையில் நல்ல எதிர்காலம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காக ஜாதகத்தைப் பார்க்கலாம். அதைப் போலவே நமக்கு வேலையிலோ படிப்பிலோ இரண்டு வாய்ப்புகள் இருந்து முடிவு எடுக்க முடியாத போது, ஒரு குறிப்பு, ஜாதகத்தை வைத்துப் பார்க்கலாம். திருமணம் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது, இரண்டு மூன்று வரன்கள் இருந்தால், அத்தகைய குழப்பமான நிலையில், எந்த வாய்ப்பு நமக்கு ஜாதகரீதியாக சாதகமாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகப் பார்க்கலாம். நம்முடைய முயற்சிகள் எந்த திசையை நோக்கிப் போனால் வெற்றி அடைய முடியும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அந்த முயற்சிகளை அதே திசையில் முழு கவனத்தோடு செலுத்துவதற்கு, முக்கியமான சமயங்களில் ஓரிருமுறை பார்த்துக் கொள்ளலாம்.” அவர் இன்னும் சில விளக்கங்களைக் கேட்டார். அது குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்.

பராசரன்

The post ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.

Related Stories: