வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீதம் கொள்ளிடத்தில் இருந்து 3 நாள் கடலில் கலந்து வீணான உபரி நீர்-மதகுடன் கூடிய தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை

தா.பழூர் : மேட்டூர் அணை நிரம்பியதன் காரணமாக காவிரியில் திறக்கப்பட்ட நீர் முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் திறக்கப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் அரியலூர் மாவட்டம் 30 வது மைல் கல்லில் செம்பியக்குடியில் தொடங்கி 67 வது மைல் கல் அணைக்கரையில் உள்ள கீழணையில் முடிவடைகிறது.அதாவது 37 மைல் கல் மாவட்டத்தில் பயணம் செய்கிறது. கீழணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் கொள்ளிடம் ஆற்றில் கடலுக்கு மூன்று நாட்களில் சுமார் மூன்று லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் வேதனை அளிக்கும் செய்தியாக உள்ளது. ஏனெனில் கொள்ளிடம் ஆற்றில் அவ்வப்போது வரும் வெள்ள நீர் சேமித்து வைக்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றில் இரண்டு இடங்களில் கதவுடன் கூடிய தடுப்பனை கட்ட வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் சூழ்நிலையில் அதனை தமிழக அரசு செவி சாய்க்காமல் உள்ளது.இது குறித்து தென்னிந்திய விவசாயிகள் சங்க உறுப்பினர் அண்ணாதுரை கூறுகையில் கொள்ளிடம் ஆற்றை நம்பி நிலத்தடி நீரை வைத்து மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் நெல்,கரும்பு, பருத்தி ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இது போன்ற நீர் அதிக அளவில் வீணாக கடலில் கலப்பதை தடுப்பதற்கு அரியலூர் மாவட்டத்தில் தூத்தூர் என்ற இடத்தில் கதவணை வேண்டும் என்பது விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கையாக உள்ளது என கூறினார்.அதேபோல் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தின் மாவட்ட தலைவர் எஸ் எம் பாண்டியன் கூறுகையில் இந்த கோரிக்கையை ஏற்று கடந்த அதிமுக ஆட்சியில் தஞ்சை மாவட்டம் வாழ்க்கை – அரியலூர் மாவட்டம் தூத்தூர் இடையே கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட 22 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வு பணி நடைபெற்றது.ஆனால் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி திட்டம் கிடப்பில் உள்ளது.எனவே தமிழக அரசு உடனடியாக கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்தால் கடலில் நீர் அதிகமாக வீணாக கலக்காமல் தடுக்கப்படும். மேலும் குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டிக்கு பெரும் உதவியாக இருக்கும் என கோரிக்கை வைத்துள்ளனர்….

The post வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீதம் கொள்ளிடத்தில் இருந்து 3 நாள் கடலில் கலந்து வீணான உபரி நீர்-மதகுடன் கூடிய தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: