பாது காவலனாய் வருவான் மதுரை வீரன்

நம்ம ஊரு சாமிகள்

வாரணாசி பாளையம் பதியை ஆண்டு வந்த மன்னன்  காசிராஜனுக்கும் அவரது மனைவி செண்பகவல்லிக்கும் பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. குழந்தைப்பேறு வேண்டி சிவபெருமானையும், பார்வதி தேவியையும் பூஜித்து வந்தான் காசிராஜன். ஒரு நாள் இரவு மன்னன் கனவில்  தோன்றிய சிவபெருமான், உனக்கு அஷ்ட  வீரர்கள் ஒன்று சேர்ந்த ரூபமாக ஒரு குழந்தை பிறக்கும் என்று அருளினார். அதன்படி  காசிராஜன் மனைவி செண்பகவல்லி அழகான ஆண் குழந்தையை  பெற்றெடுத்தாள். அரண்மனை ஜோதிடர், கொடி சுற்றி குழந்தை  பிறந்துள்ளது. இது கோட்டைக்கு ஆகாது,  இது குடிமக்களுக்கும் ஆகாது என்றுரைத்தார்.இதனால் மன்னர் அரண்மனை காவலர்களை அழைத்து  குழந்தையை காவேரி கரையோரம் தொட்டியம் பகுதி காட்டில் கொண்டு விடுங்கள்  என்றார். மன்னரின் கட்டளையை ஏற்று காவலர்கள் குழந்தையை காட்டில் கொண்டு  விட்டனர்.

அந்த குழந்தையை கோனேரிப்பட்டினத்தை  (தற்போது கோனேரிப்பாளையம் பெரம்பலூர் அருகில் உள்ளது) ஆண்டு வந்த மன்னன்  பொம்மன நாயக்கர் அரண்மனை பணியாளர் சின்னானும் அவனது மனைவி சின்னாத்தியும் எடுத்துச் சென்று வீரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். வீரன்,  விளையாட்டு, கல்வி, வீரம் அனைத்திலும் சிறந்து விளங்கினான். மன்னர் பொம்மன நாயக்கர் மகள் பொம்மியுடன் காதல் கொண்ட வீரன். அமைச்சர் மூலம் இதையறிந்த மன்னர் சின்னான் சின்னாத்தியை அரண்மனைக்கு அழைத்து என் மகளை பார்க்க வீரன் எண்ணினால் உன் மகனுக்கு மரணம் அந்த நேரமே நிகழும் என்று எச்சரித்தார். அரசனின் வார்த்தைகளால் அஞ்சிய சின்னானும், சின்னாத்தியும் வீரனை கண்டித்தனர். இதனிடையே பொம்மிக்கு மணமுடிக்கும் ஏற்பாடுகளில் பொம்மன நாயக்கர் இறங்கினார். சிற்றரசர்களில் சிறந்தவரை தேடி பார்த்து வந்தார். இதை தோழியர் மூலம் அறிந்த பொம்மி, வீரனுக்கு தகவல் கூறினாள். மறுநாள் மாலைப்பொழுதில் வீரன் குதிரையில் வந்து கோட்டைக்குள் புகுந்து பொம்மியைத் தூக்கிச் சென்றான்.

கோனேரிப்பட்டினத்திலிருந்து தெற்கு நோக்கிப் புறப்பட்ட அந்த குதிரை. காவிரி ஆற்றின் கரையில் உள்ள ஆமுர் மடுவு கருங்கல் பகுதியில் வந்து  நின்றது. காதலர் இருவரும் அவ்விடமே தங்கினர். குதிரை காணாமல் போனதும் பொம்மி மாயமானதும் தாமதமாகவே அரண்மனை காவலர்களுக்குத் தெரிந்தது. உடனே அரசருக்குத் தெரிவித்ததும் தேடுதல் வேட்டை தொடங்கியது. எதிர்த்தவர்களுடன் போராடி திருச்சி நகரில் நுழைந்தான் வீரன். அங்குள்ள வீரர்களும் அந்நியன் ஒருவன் உள்ளே நுழைந்திருக்கிறான் என்று பிடித்து விசாரிக்க, வீரன் நடந்தவற்றை கூறினான்.அவனது நேர்மையும், அவனது தோற்றமும் அரசனை வெகுவாகக் கவர்ந்ததால் தனது நாட்டிற்கு தளபதியாக்கி அவர்களின் திருமணத்தையும் சிறப்பாக நடத்தி முடித்தான்.

‘‘மதுரையில் கள்வர் பயம் தலைதூக்கியிருக்கிறது. கொலை, கொள்ளை, கட்டுக்கடங்காமலிருக்கிறது, கள்வர்களை ஒழிக்க படை தந்து உதவ வேண்டும்’’ என்று திருச்சி மன்னர் விஜயரங்கருக்கு ஓலை எழுதினார். மதுரை மன்னர்.உடனே விஜயரங்கர் ‘‘வீரா, நீதான் படைகளுடன் மதுரைக்கு புறப்பட வேண்டும்’’ என்று ஆணையிட்டார். வீரனும் ‘‘வெற்றியுடன் திரும்புவேன்’’ என்று சூளுரைத்து மதுரைக்குப் புறப்பட்டான். அங்கு அவனுக்கு, தனக்கு இணையான ஆசனம் கொடுத்து கௌரவித்தார் மன்னர். உடனே தனது பணியை கவனிக்க ஆயத்தமானான் வீரன். அழகர்கோயில் பக்கம் திருமணக் கோஷ்டியினரைப் போல் வேடமணிந்து தனது படைகளும் சென்றான். இதனையறியாத கொள்ளையர்கள் வழக்கம் போல் தங்கள் கைவரிசையை காண்பிக்க, சுற்றி முற்றுகையிட்ட வீரனின் படைகள் அனைவரையும் எதிர்த்து போராடியது.

இதில் பல கள்வர்கள் கொல்லப்பட, மீதமுள்ள திருடர்களை கைது செய்து மதுரை மாநகர வீதிகளில் அழைத்து வந்தான் வீரன்.கூடிநின்ற ஜனங்கள் ‘மதுரைவீரன், மதுரைவீரன்’ என்று ஆர்ப்பரித்து வாழ்த்தினர். அவனது வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார் மன்னர். வீரனை ஆரத்தழுவி நெற்றியில் திலகமிட்டு வாழ்த்து தெரிவித்தார். அங்கு அரண்மனை நாட்டிய தாரகை வெள்ளையம்மாள் நடனம் ஆடினாள். வெள்ளையம்மாளின் நடனத்தின் மீது மட்டுமல்லாமல் அவளது அழகிலும் மயங்கினான் வீரன். வீரனுக்கும், வெள்ளையம்மாளுக்கும் நட்பு மலர்ந்தது. அதுவே நாளடைவில் காதலாகியது. வெள்ளையம்மாளின் நடனத்திற்கு பரிசாக மன்னர் பொன் நகை பரிசளித்தார். வீரனுக்கு மதுரை மீனாட்சி அம்மன் மீதும் பக்தி ஏற்பட்டது. மீனாட்சி அம்மனை நினையாமல் எந்த காரியத்திலும் வீரன் இறங்குவதில்லை. தான் புரியும் செயல்கள் அனைத்தும் மீனாட்சி அம்மனின் அருளே என்பதில் உறுதியாக இருந்தான். மதுரையிலேயே சிலகாலம் தங்கலாம் என்று எண்ணம் கொண்டான். அவ்வாறு ஒரு எண்ணம் வீரனுக்குள் வந்ததற்கு வெள்ளையம்மாளும் ஒரு காரணம்.

இதனிடையே வீரனின் வீரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடிய கள்வர்கள் மீண்டும் மதுரைக்கு வந்து வெள்ளையம்மாளுக்கு மன்னர் கொடுத்த நகையை அபகரிக்கும் பொருட்டு, வெள்ளையம்மாள் வீட்டிற்கு கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்தனர். இதை அறிந்த அமைச்சர் ஒருவர் மன்னரிடம் கூற, மன்னர் வீரனை வெள்ளையம்மாள் வீட்டிற்கு அன்றிரவு காவலுக்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்ற வீரன், கொள்ளை நடக்க இருந்ததை முறியடித்ததோடு அன்றே வெள்ளையம்மாளை தனது உடைமையாக்கிக் கொண்டான். இதனிடையே கள்வர் தப்பித்து சென்றதால் மீண்டும் மீண்டும் நாட்டு மக்களுக்கு கள்வர் பயம் இருந்து கொண்டுதான் இருக்கும்.

அதனால் பத்து நாட்களுக்குள் தப்பியோடிய அனைத்து கள்வர்களையும் பிடித்துவர வேண்டும் என்று மதுரை மன்னர், வீரனுக்கு உத்தரவிட்டார். வீரனும் உடனே புறப்பட்டான். கள்வர்களிடமிருந்து பறிமுதல் செய்து அனைத்துப் பொருட்களையும் மொத்தமாக அரசனிடம் ஒப்படைக்கலாம் என்று எண்ணிய வீரன், கள்வர்களிடமிருந்து அவ்வப்போது பறிமுதல் செய்யப்படும் பொருட்களை தான் தங்கியிருந்த வீட்டில் வைத்திருந்தான். இதை அறிந்த கொண்ட தளபதி சாமந்தன், மன்னரிடம் சென்று கள்வர் கூட்டத்துக்கும் வீரனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதனால் தான் அவர்களிடமிருந்து மீட்ட பொருட்களை ஒப்படைக்காமல் இருப்பதாகவும் மன்னரிடம் திரித்துக் கூறினான்.

நாயக்க மன்னர், உடனே வீரனை கைது செய்து கழுவிலேற்றி மாறுகை, மாறுகால் வாங்க உத்தரவிட்டார். மறுநாள் அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த வீரனை போர்வைத்துணியால் மூடி கள்வனை கைது செய்வது போல் பிடித்து சங்கலியால் வீரனின் கைகளை பின்புறமாக வைத்து இணைத்துக்கட்டி வீதி வழியே நடத்தியே மரண மேடைக்கு அழைத்துச் சென்றனர். மன்னரை பார்க்க வேண்டும் என்ற வீரனின் பேச்சுக்கு மன்னர் உனது முகத்தை பார்க்க விரும்பவில்லை என்ற வார்த்தையை பதிலாக உரைத்தான் வஞ்சக அமைச்சன். வீரனுக்கு விதித்த தண்டனையும், அவனை கைது செய்து அழைத்து செல்வதையும் கேட்டு ஓடிவந்த வெள்ளையம்மாளும், பொம்மியும் மன்னனிடம் சென்று கதறியும் எந்த பலனும் இல்லை.

மரண மேடையில் வீரனின் இடது கையும், வலது காலும் வெட்டி வீழ்த்தப்பட்டன.

உயிர் இழந்த நிலையில் துடிதுடித்து இறந்தான் வீரன். பொம்மியும், வெள்ளைம்மாளும் அதே இடத்தில்  உயிர் நீத்தனர். உண்மை தெரியவந்ததும் நிலை தடுமாறிப்போன மன்னர் நாயக்கர், சரியாக விசாரிக்காமல் தீர்ப்பளித்து உண்மையான ஒரு வீரனின் சாவுக்கு காரணமாகி விட்டேனே என்று அழுது மீனாட்சியம்மனிடம் பரிகாரம் வேண்டி நின்றார். அப்போது மீனாட்சியம்மன், அசரீரியாக, ‘‘பக்தனே, எது நடக்க வேண்டுமோ அதுவே நடந்திருக்கிறது. விதியை யாராலும் வெல்ல முடியாது. நீ எவ்வாறு என்னுடைய பக்தனோ, அப்படித்தான் வீரனும் என்னுடைய பரம பக்தன். அவன் என்றென்றும் எனக்கு காவலாக இருப்பதற்குத்தான் என்னைத் தேடி வந்துள்ளான். அதனால் என் ஆலயத்திற்கு முன்பாக அவனுக்கு ஒரு ஆலயம் எழுப்பு. அதில் மதுரை வீரனையும் பொம்மி, வெள்ளையம்மாள் சிலையையும் நிறுவு. அவன் எனக்கு காவல் தெய்வமாக இருப்பான்’’ என ஆணையிட்டாள்.

அவ்வாரே பொம்மி, வெள்ளையம்மாள் இருபுறமிருக்குமாறு வீரனுக்கு சிலை அமைத்து கோயில் கட்டினான் மதுரை மன்னன். மதுரைவீரன் மாவீரனாக காவல் தெய்வமாக மதுரையில் கோயில் கொண்டுள்ளார். நெற்றியில் சந்தனப் பொட்டு, முறுக்கிய மீசை, ஓங்கிய கை என்று கம்பீரமாக காட்சிதரும் மதுரைவீரனுக்கு மதுரை, அழகர்கோயில், அலங்காநல்லூர், பழங்காநத்தம், காளவாசல், என்.புதூர், திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் என பல பகுதிகளில் கோயில் உள்ளது. அப்பகுதி மக்களுக்கு குலதெய்வமாகவும் மதுரை வீரன் விளங்கி வருகிறார். பல காரணங்களுக்காக மதுரை வீரனிடம் நேர்ந்து கொள்கின்றனர். இன்றளவும் பல குடும்பங்களில் மதுரை வீரனை வணங்கிய பிறகே எந்தவொரு செயல்பாட்டையும் தொடங்குவது வழக்கத்தில் இருந்து வருகிறது.ஆடி மாத கடைசி செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விழா எடுக்கப்படுகிறது. இந்த விழாவில் வீரனை குலதெய்வமாக கொண்டுள்ளவர்கள் குடும்ப சகிதமாக வந்து படையல் போட்டு வழிபடுகின்றனர். வீரனுக்கு சாமி ஆடும் நபர்கள்  கூறும் வாக்கு அப்படியே பலிக்கும் என்று பக்தர்கள் பலர் நம்புகின்றனர்.

படங்கள்: ச.சுடலை ரத்தினம்

சு.இளம் கலைமாறன்

Related Stories: