சீதையாக நடிக்க சாய் பல்லவிக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு

சென்னை: ரன்பீர் கபூர், சன்னி தியோல், பாபி தியோல் நடிக்கும் பான் இந்தியா படம் ‘ராமாயணம்’. இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி நடித்து வருகிறார்கள். அவர் சீதை வேடத்தில் நடிக்கக் கூடாது என இந்து அமைப்பினர் சிலர் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.இதற்கு காரணம், 2022ம் ஆண்டு சாய் பல்லவி அளித்த ஒரு பேட்டிதான். அந்த பேட்டி வீடியோவை சமூக வலைத்தளத்தில் வலதுசாரி அமைப்புகள் பரப்பி வருகிறார்கள். அதில் சாய் பல்லவி பேசியதாவது:

பாகிஸ்தான் மக்கள் நமது இராணுவத்தினரைப் பயங்கரவாதிகளாகப் பார்க்கிறார்கள். இங்கு நம்மைப் பொறுத்த அளவில் அவர்களின் இராணுவம் பயங்கரவாதிகள். இப்படி கண்ணோட்டம் மாறுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. எனக்கு வன்முறையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சில தினங்களுக்கு முன்கூட காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வந்தது இல்லையா.. அதில், கடந்த காலங்களில் காஷ்மீர் பண்டிட்கள் என்ன இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதையெல்லாம் காட்டினார்கள்.

மதம் சார்ந்த பிரச்னைகள் என எடுத்துக்கொண்டால், கொரோனா காலக்கட்டத்தில் கூட, வாகனத்தில் பசுக்களை ஏற்றிச் சென்றனர்.வாகனத்தை இயக்கியவர் இஸ்லாமியராக இருந்தார். அவரை அடித்து ஜெய் ஸ்ரீராம் என சொல்லச் சொன்னார்கள். அப்போது நடந்ததற்கும் இப்போது நடப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. நாம் மனிதர்களாக இருக்க வேண்டும். நாம் மனிதர்களாக இருந்தால் பிறரைத் துன்புறுத்த மாட்டோம் என பேசியுள்ளார். இந்த மதத்துக்கு சாய் பல்லவி எதிரானவர். அதனால் அவர் சீதையாக நடிக்கக் கூடாது என இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ராமாயணம் படப்பிடிப்பு நடந்தால் பிரச்னை வெடிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: