அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 280 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள்; தேர்ச்சி விகிதம் பாதிப்பு: காலியான பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகேயுள்ள மணமை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 280 மாணவ, மாணவியருக்கு  2 ஆசிரியர்கள் மட்டுமே பாடம் நடத்தும் அவலநிலை காணப்படுகிறது. இதனால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.மாமல்லபுரம் அடுத்த மணமை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 280 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.  இப்பள்ளியில், கடந்த 2014ம் ஆண்டு  6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தலைமை ஆசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், கடந்த மாதம் வரை தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணி செய்தனர். இதில், தலைமை ஆசிரியர் மாலதி கடந்த மாதம் 30ம் தேதி பணி ஓய்வு பெற்ற நிலையில்,  தற்போது  2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இங்கு, இரவு காவலர், அலுவலக பணியாளர்கள், எழுத்தர், துப்புரவு பணியாளர் என ஒரு பணியிடம் கூட கடந்த 2014ம் ஆண்டு முதல்   இப்பள்ளியில் நியமிக்கப்படவில்லை.இப்பள்ளியில், கணினி இயக்குபவர் இல்லாததால் ஏற்கனவே உள்ள 2 ஆசிரியர்கள் கூடுதல் சுமையுடன் அலுவலக பணிகளையும், மாணவர்கள் பற்றி தகவல்களை கணினியில் பதிவேற்றவும், பள்ளிக்கு இ – மெயில் மூலம் வரும் தகவல்களை சேகரிக்கும் பணிகளையும் கவனித்து வருகின்றனர். வகுப்புகளில், பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் தினமும் பள்ளிக்கு வந்து 4 சுவர்களுக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள். அந்தந்த, வகுப்பு நேரங்களில் வெறும் புத்தகத்தை வைத்து படித்தாலும் கூட, பாட சம்மந்தமாக சந்தேகம் கேட்க கூட ஆசிரியர் துணை இல்லை.ஒரு சில, மாணவர்கள் தங்கள் வகுப்புக்கு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் புத்தகப்பையும் எடுத்து வருவதில்லை. இங்கு, இருக்கும் 2 ஆசிரியர்களால் 6 முதல் 12ம் வகுப்பு வரை பாடம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பல முறை ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளை சந்தித்து இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை ஆசிரியர்களை நியமிக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இதனால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுவதோடு, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளிகளை தேடிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், நல மேல்நிலைப் பள்ளி என்பதால் அதிகாரிகள் சிலர் ஒருதலை பட்சமாக பார்த்து அலட்சியப்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து, கடந்த வாரம் மணமை ஊராட்சி மன்ற தலைவர் செங்கேணி, துணை தலைவர் பூர்ணிமா சண்முகம் ஆகியோர்  திருப்போரூர் எம்எல்ஏ எஸ்எஸ் பாலாஜியை சந்தித்து ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை கடிதம் கொடுத்தனர். எனவே, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்து, போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 280 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள்; தேர்ச்சி விகிதம் பாதிப்பு: காலியான பணியிடங்களை நிரப்ப கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: