மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசி தேரோட்டம் : காய்கறி, பழம், நாணயங்களை வீசி பக்தர்கள் சிறப்பு வழிபாடு

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது காய்கறிகள், பழங்கள், நாணயங்களை வாரியிறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் இந்தாண்டு மாசி திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2வது நாளாக மயானக்கொள்ளை விழாவும், இரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதி உலாவும், 4ம் நாள் திருவிழாவாக அம்மன் தங்க நிற பல்லக்கில் வீதி உலாவும், ஐந்தாம் நாளாக தீமிதி விழாவும், ஏழாவது நாளாக நேற்று தேரோட்டம் நடந்தது.

இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோயில் கருவறையில் இருந்து பல்லக்கில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து தேரில் வைத்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், நாணயங்கள் ஆகியவற்றை தேரின் மீது வாரி இறைத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். பின்னர் தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது.

Related Stories: