இந்த வார விசேஷங்கள்

சிவகாசி விஸ்வநாதர் தேரோட்டம் 18.5.2024 – சனி

சிவகாசியில் புகழ்பெற்ற விஸ்வநாத ஸ்வாமி விசாலாட்சி அம்மன் திருக்கோயில் உள்ளது. 16-ஆம் நூற்றாண்டில் பாண்டிய ஆட்சியாளர் அரிகேசரி பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட கோயில் பின்னால், மதுரை நாயக்க மன்னர்கள் திருப்பணி செய்தனர். இத்திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற வைகாசிப் பெருவிழாவில் இன்று தேரோட்டம். நேற்று திருக்கல்யாணம். தேரில் சுவாமி விசாலாட்சியம்மாள் பிரியாவிடை உடன் காட்சி தருவார்.

திருவிடைமருதூர் திருக்கல்யாணம் 18.5.2024 – சனி

கும்பகோணம் அருகே புகழ்பெற்ற திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. எத்தகைய சாபத்தையும் தீர்க்கும் சாபதோஷ நிவர்த்தித் திருத்தலமாக இத்திருத்தலம் விளங்குகின்றது. 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பெரும் கோயில். இத்தலத்து இறைவன் ஸ்ரீ மகாலிங்கப் பெருமான். மருதமரத்தை தலவிருட்சமாக கொண்ட மூன்று தலங்களில் இந்த தலம் நடுவில் அமைந்ததால், இடைமருதூர் என்று ஆனது. இறைவனுக்கு மருதவாணன் என்கிற பெயரும் உண்டு. அதிக தேவாரப் பாடல்கள் பெற்ற திருத்தலம் இது. (திருவையாறும் அதிக பாடல் பெற்ற தலம்) ஞானக்கூத்த சிவப்பிரகாச தேசிகர் இத்தலத்தின் சிறப்பை மூவாயிரம் பாடல்களில் பாடி இருக்கின்றார். சம்பந்தப் பெருமான் இந்தத் திருத் தலத்துக்கு வந்த போது, வழியெல்லாம் சிவலிங்கமாக இருந்தது. எனவே, தரையில் கால் பதிக்க அஞ்சினார். அப்பொழுது சிவன் “நம் குழந்தையை அழைத்து வா” என, அம்பிகை சம்பந்தரை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு வந்ததாகச் செய்தி உண்டு. பெரும்பாலான கோயில்களில் சென்ற வழியே வெளியே வந்து விடலாம். ஆனால் இங்கே சென்ற வழியே திரும்பக்கூடாது. வேறு வாசல் வழியாக திரும்ப வேண்டும் என்பது விதி. காசிக்கு நிகரான இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவத் திருவிழாவில் இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

மோகினி ஏகாதசி 19.5.2024 – ஞாயிறு

இன்றைய தினம் வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி. கங்கையை விட புனிதமான நதி இல்லை என்பது போல் ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்று சொல்வார்கள். தசமி (18.5.2024) மதியம் ஆரம்பித்து, ஏகாதசி உபவாசம் இருந்து, துவாதசி அதிகாலை பாரணை செய்தால் திருமாலின் திருவருளைப் பெறலாம் என்பது சாஸ்திரம். இந்த ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்று பெயர். இதை கடைப்பிடித்தால் எத்தகைய பாவ விளைவுகளில் இருந்தும் விடுபட்டு விட முடியும்.வசிஷ்டர் ராமருக்கு சொன்ன ஏகாதசி மோகினி ஏகாதசி. சீதையைப் பிரிந்த ராமரிடம் வசிஷ்டர், ‘‘ராமா! வருகின்ற வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி விரதம் இருந்தால், உன்னுடைய எண்ணம் நிறைவேறும். பிரிந்த சீதை உன்னிடம் வந்து சேருவாள்’’ என்று கூற, சாட்சாத் விஷ்ணுவான ஸ்ரீ ராமபிரானே, முறையாக, ஏகாதசி விரதம் இருந்தார் என்ற சிறப்பு இந்த ஏகாதசிக்கு உண்டு. ஏகாதசி விரதத்தில் அரிசி முதலிய தானியங்களை உண்ணக்கூடாது. முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், கஞ்சி, பால், பழம் அல்லது உடைக்கப்பட்ட அரிசியினால் செய்யப்பட்ட உப்புமா போன்றவற்றை உட்கொண்டு, எம்பெருமானுடைய திவ்ய நாம சங்கீர்த்தனத்தைப் பாடலாம். மிக முக்கியமாக துவாதசி பாரணையின்போது வாழையிலை, வாழைக்காய் போன்றவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். அதற்குப் பதிலாக நெல்லிக்காயைப் பயன்படுத்தலாம்.

சூரியனார் கோயில் மகா அபிஷேகம்19.5.2024 – ஞாயிறு

சூரியனார் கோயில் தமிழகத்தில் கும்பகோணத்திற்கு அருகே சூரியனுக்கு என்று அமைந்த திருத்தலம். நவகிரகங்களில் சூரியன்தான் தலைமைக் கிரகம். ஆத்ம காரகன், பிதுர் காரகன் என்று சொல்லப்படுகின்ற கிரகம். மற்ற கிரகங்களுக்கு ஒளி கொடுக்கும் கிரகம் என்பதால், ஒரு ஜாதகத்தில் சூரியன் நன்றாக அமைய வேண்டும். சூரியன் உஷா தேவி சாயாதேவி என்ற இருவருடன் காட்சியளிக்கும் திருத்தலம் சூரியனார் கோயில். இத்திருக்கோயிலில் இன்று சூரிய பகவானுக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறும். அதற்கு முன் சிறப்பு ஹோமம் நடந்து உஷா தேவி சாயாதேவி உடனாய சூரியபெருமானுக்கு அபிஷேகங்கள் நடக்கும். பின், வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு புஷ்ப அலங்காரம் தீபாராதனை நடைபெறும். சூரிய தோஷம் உள்ளவர்களும், சூரிய தசை நடப்பவர்களும், சூரிய நட்சத்திரமான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் முதலிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் இந்தப் பூஜைகளில் கலந்துகொள்வது விசேஷ பலனைத் தரும். மற்றவர்களுக்கும் சூரியனுடைய அருள் கிடைக்கும் என்பதால் எல்லோருமே கலந்து கொள்ளலாம்.

மயிலாடுதுறையில் திருக்கல்யாணம் 19.5.2024 – ஞாயிறு

மயிலாடுதுறையில் அமைந்துள்ள சிறப்புமிக்க ஆலயம் மயூரநாதர் ஆலயம். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற மிகப் பழமை வாய்ந்த ஆலயம். இங்கே அம்பாள் மயிலாக இறைவனை பூஜித்ததால், சிவனும் மயிலாக வந்து, பார்வதி தேவியுடன் சேர்ந்து மயூரதாண்டவம் ஆடினார். இவ்வாலயத்தில் வைகாசித் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. மயூரநாதர் அபயாம்பிகையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி திருக்கல்யாணம் மேற்கொள்வார். பெண்கள் சீர்வரிசை எடுத்து வருவார்கள். ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். பிறகு சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெறும்.

அரியக்குடி ஸ்ரீ நிவாச பெருமாள் திருக்கல்யாணம், பிரதோஷம்20.5.2024 – திங்கள்

அரியக்குடி என்பது சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பக்கத்தில் உள்ள ஊர். இங்கே திருவேங்கடமுடையான் திருக்கோயில் மிகச் சிறப்பான கோயில். தென் திருப்பதி என்று அழைப்பார்கள். இக்கோயிலின் மூலவர் திருவேங்கடமுடையான். தாயார் அலர்மேல் மங்கை. உற்சவர் நிவாச பெருமாள். மற்றும் தாயார் ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி. மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களையும் நினைவூட்டும் “தசாவதாரம் மண்டபம்’’ உள்ள கோயில். இங்கே வைகாசி பிரம்மோற்சவம் மிகக் கோலாகலமாக நடந்து வருகின்றது. அதில் இன்று ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகின்றது. அதோடு இந்த நாள், பிரதோஷ நாள். சோமவார பிரதோஷம் என்பதால், பிரதோஷ விரதம் இருந்து மாலை 5:30 மணி முதல் 6:30 மணிக்குள் சிவாலயம் சென்று நந்தி அபிஷேகம் காண்பது நல்லது. இது பிற தோஷங்களை விலக்கும். பிரதோஷ வேளையில் ஸ்ரீ நரசிம்மரின் ஸ்தோத்திரங்களையும் பாராயணம் செய்யலாம்.

பழனி ஸ்ரீ ஆண்டவர் திருக்கல்யாணம் இரவு வள்ளி திருமணம் 21.5.2024 – செவ்வாய்

இன்று பழனி ஆண்டவர் திருக்கல்யாண உற்சவம். திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உபகோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில், வைகாசிப் பெருவிழா உற்சவம் நடைபெற்று வருகின்றது. வள்ளி தெய்வானையுடன் சுவாமி பல்வேறு வாகனங்களில் உலா வந்தனர். இன்று திருக்கல்யாண உற்சவம் மிகவும் கோலாகலமாக நடைபெறுகின்றது.

நள்ளிரவு சின்ன மஸ்தா ஜெயந்தி

தசமஹாவித்யாக்களில் ஐந்தாவது வித்யா வடிவம், சின்னமஸ்தா. இதன் நேரடி பொருள் – துண்டிக்கப்பட்ட தலை. அவள் இடது கையில் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் முதுகுத்தண்டு வழியாக மூன்று ரத்த ஓட்டங்களுடன் மிகவும் பயங்கரமான வடிவத்தில் தோன்றுகிறாள். காமதேவன் மற்றும் ரதியின் உடல்களில் நிற்பது போல் சித்தரிக்கப்படுகிறாள், துண்டிக்கப்பட்ட தலை அனைத்து ஈகோ மற்றும் இணைப்புகளை அகற்றுவதைக் குறிக்கிறது. மூன்று இரத்த ஓட்டங்கள், மூன்று நாடிகளைக் குறிக்கின்றன. சின்னமஸ்தா ஜெயந்தி என்று அழைக்கப்படும் அவரது மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள், பக்திக் கீர்த்தனைகள் அல்லது குண்டலினி தியானம் அவள் அவதரித்த நாளில், பன்மடங்கு பலன்களைப் பெற நமக்கு உதவும்.

நரசிம்மர் ஜெயந்தி 22.5.2024 – புதன்

இன்று நரசிம்ம ஜெயந்தி. ‘‘நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை’’ என்பார்கள். “இன்றே இப்பொழுதே எனக் கேட்பதை தருகின்ற வள்ளல் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி’’. ஆழ்வார்கள் அனைவரும் நரசிம்மனை ‘‘அழகியவா, அக்காரக்கனி, அழகிய சிங்கா, தேவாதி தேவா, நரஹரி என்று அனுபவித்து இருக்கின்றார்கள். நல்லவை எல்லாம் அருளுபவர் நரசிம்மப் பெருமாள். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த நட்சத்திரம் சுவாதி நட்சத்திரம். ராகுவின் நட்சத்திரம். ஸ்வாதி நட்சத்திரத்தில் பிரதோஷ வேளையில் பகவான் தோன்றினார். அந்த அவதார தினமான இன்று நரசிம்ம ஜெயந்தியை எளிமையாகக் கொண்டாடலாம். வீட்டில், மாலையில் விளக்கேற்றி வைத்து, நரசிம்ம மூர்த்திக்கு துளசி மாலை சாத்தி, பானகம், நீர்மோர், பருப்பு வடை, சர்க்கரைப் பொங்கல், பாயசம், என இயன்றளவு நிவேதனம் செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபித்தால், சகல சங்கடங்களும் விலகும். நினைத்தது நடக்கும்.

“உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்’’

அன்று உபவாசம் இருப்பது சிறப்பு. ஆதிசங்கரர் எழுதிய கராவலம்பம், ரிண விமோசன ஸ்தோத்திரம், ஸ்ரீ ராஜபத ஸ்தோத்திரம் முதலிய ஸ்தோத்திரங்களைச் சொல்லலாம். ஆழ்வார்கள் பாசுரங்களைப் பாடலாம். இதன் மூலமாக மனபயம், பகை பயம், நோய் பயம் முதலிய பாதிப்புகள் நீங்கும். சகல செல்வங்களும் வந்து சேரும்.

வைகாசி விசாகம் 22.5.2024 – புதன்

விசாகம் என்பது எல்லா சமய தேவதைகளுக்கும் ஏற்ற தினம். சைவத்தில் முருகனுக்கும், வைணவத்தில் நம்மாழ்வாருக்கும் பிர தானமான தினம். ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் உற்சவம் இந்த வைகாசி விசாகத்தை ஒட்டி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அதைப்போலவே எல்லா முருகன் ஆலயங்களிலும் வைகாசி விசாகம் அன்று முருகனுக்கு விரதம் இருந்து காவடி எடுத்து சிறப்பு வழிபாடுகள் நடத்துவார்கள். அன்றைக்கு அபிஷேக ஆராதனைகளும் அலங்காரங்களும் உண்டு. சுவாமி வீதி உலா உண்டு. இது தவிர வைகாசி விசாகத்தில் அவதரித்தவர் திருவாய் மொழி பிள்ளை என்கின்ற ஆசாரியர். இவர் வைணவ தென்கலை மரபின் நிறைவு ஆச்சாரியாரான மணவாள மாமுனிகளுக்கு குருவாக அமைந்தவர். திருமலையாழ்வார் என்ற திருநாமத்துடன் அவதரித்தார், அவருக்கு சைலேசர் மற்றும் சடகோபதாஸர் என்ற திருநாமமும் உண்டு. இவருக்கு ஆழ்வார் மீதும், ஆழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி மீதும், இருந்த பற்றினாலும் அவர் திருவாய்மொழியைப் பரப்பின விதத்தினாலும் இவருக்கு திருவாய்மொழிப் பிள்ளை என்ற திருநாமமே நிலைத்தது. இவர் அவதார ஸ்தலம்: குந்தீநகரம் (கொந்தகை). பரமபதித்த இடம்: ஆழ்வார் திருநகரி. அவருடைய அவதார வைபவம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

22.5.2024 – புதன் – காஞ்சிபுரம் கருட சேவை.
22.5.2024 – புதன் – சிதம்பரம் தேவாதி தேவன் கருட சேவை.
22.5.2024 – புதன் – திருவிடை மருதூர் தெப்பம்.
23.5.2024 – வியாழன் – சம்பத் கௌரி விரதம்.
23.5.2024 – வியாழன் – புத்த பூர்ணிமா.
23.5.2024 – வியாழன் – திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜபெருமாள் தேரோட்டம்.
24.5.2024 – வெள்ளி – மதுரை ஸ்ரீகூடலழகர் பெருமாள் திருத்தேரோட்டம்.

விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: