நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

நெல்லை: நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை திரளானோர் தரிசித்தனர். சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் நவம்பர் 4ம் தேதி ஆயிரங்கால் மண்டபத்தில் நடக்கிறது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் வெகுசிறப்பாக நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் 4 ரதவீதிகளிலும் உலா வந்தார்.

பின்னர் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். திருவிழா தொடர்ந்து நவம்பர் 7ம்தேதி வரை நடக்கிறது. திருவிழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு வழிபாடு, ரதவீதி உலா நடக்கிறது. நவ.2ம் தேதி நள்ளிரவு காந்திமதி அம்பாள் தங்க சப்பரத்தில் புறப்பட்டு கீழ மற்றும் தெற்கு ரதவீதி வழியாக சென்று அதிகாலை கம்பா நதி காமாட்சி அம்மன் கோயிலில் தவக்கோலத்தில் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. மறுநாள் (3ம்தேதி) காலை சுவாமி நெல்லையப்பர், ரிஷப வாகனத்தில் டவுன் காட்சி மண்டபம் எழுந்தருளுகிறார்.

பின்னர் அங்கு முற்பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் காட்சி மண்டபத்தில் நடக்கிறது. இதைத் தொடர்ந்து விழாவின் முத்தாய்ப்பான சுவாமி  அம்பாள் திருக்கல்யாண வைபவம் நெல்லையப்பர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நவம்பர் 4ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள்ளாக நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாள் நெல்லை நகர் ரதவீதியில் பட்டினப் பிரவேசம் நடைபெறும். தொடர்ந்து 6ம் தேதிவரை ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 7ம் தேதி சுவாமி, அம்மன் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டின பிரவேச வீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: