முகமே மனிதரின் மன ஓவியம்!

குறளின் குரல் - 89

Advertising
Advertising

அன்னைத் தமிழுக்கு முகம் கொடுத்தவர் திருவள்ளுவர்தான் என்றும் அவராலேயே உலக மொழிகளிடையே தமிழ்மொழி கம்பீரமாகத் தன் முகம் காட்டி நிற்கிறதென்றும் சொல்வதுண்டு. ஒருவரது முகம் எண்ணங்களை வெளிப்படுத்துகிற மாதிரி, ஒருவர் எழுதும் கடிதமும் அவரது எண்ணங்களையே வெளிப்படுத்துகிறது. அதனால்தான் கடிதத்தைத் திருமுகம் என்கிறோம். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் முகம் என்ற சொல் பல இடங்களில் முகம் காட்டுகின்றது!

'அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.’(குறள் எண் 84)

முகமலர்ச்சியுடன் விருந்தினர்களை உபசரிக்கும் இல்லத்தில் லட்சுமிதேவி அகமகிழ்ந்து தங்குவாள்.

'மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.’ (குறள் எண் 90)

அனிச்சம் முகர்ந்து பார்த்தாலே வாடி விடும். அதுபோல் விருந்தினரைக் கண்டவுடன் வேண்டா வெறுப்பாய் மாறுபட்டு நோக்கினாலே விருந்தினர் மனம்

வாடிவிடுவார்கள்.

'அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.’ (குறள் எண் 92)

 

மனம் மகிழ்ந்து செய்யப்படும் பொருளுதவியைக் காட்டிலும் கூட, முகமலர்ச்சியோடு இனிமையான வார்த்தைகளைப் பேசுவது நல்ல பண்பாடாகும்.

'முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்

இன்சொல் இனிதே அறம்!’ (குறள் எண் 93)

 

பார்த்த உடனேயே முக மலர்ச்சியோடு வரவேற்று அகம் குளிருமாறு இனிய சொற்களைப் பேசுவதுதான் அறமாகும்.

'கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.’  (குறள் எண் 393)

 

கற்றறிந்தவர்களே கண்ணுடையவர்களாகக் கொள்ளப்படுவர். அல்லாதோரின் கண்கள் புண்களுக்குச் சமமானவை.

'அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்.’ (குறள் எண் 706)

முகம் ஒரு கண்ணாடி போல உள்ளத்து உணர்ச்சிகளைக் காட்டிக் கொடுத்துவிடும்.

'முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்

காயினும் தான்முந் துறும்.’ (குறள் எண் 707)

 

மகிழ்ச்சியையோ கோபத்தையோ வெளிப்படுத்திக் காட்டுகின்ற வகையில் முகத்தைப் போல் பேரறிவு கொண்டது வேறொன்றுமில்லை.

'முகம் நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி

உற்ற துணர்வார்ப் பெறின்.’ (குறள் எண் 708)

ஒருவரது முகத்தைப் பார்த்தே அவர் அகத்தில் என்னென்ன சிந்தனைகள் ஓடுகின்றன என்பதை அறிந்துவிடலாம்.

'முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு.’ (குறள் எண் 786)

வெறுமே முகத்தில் மகிழ்ச்சிக் குறியைக் காட்டி நட்புக் கொள்வது நட்பல்ல. அகத்தில் மகிழ்ச்சி தோன்றுமாறு நட்பு கொள்வதே நட்பாகும்.

'முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப் படும்.’(குறள் எண் 824)

 

முகத்தில் புன்முறுவலோடும் அகத்தில் வஞ்சனையோடும் பேசும் மனிதர்களுடைய தொடர்பினை அடியோடு விட்டுவிடுதலே நலம்.

'பகைநட்பு ஆம்காலம் வரும்கால் முகநட்டு

அகநட்பு ஒரீஇ விடல்.’ (குறள் எண் 830)

பகைவர்கள் நண்பர்களைப் போல் நடிக்கும் காலம் வருமானால் முகத்தில் நட்புக்குறியைக் காட்டி அகத்தில் வெறுத்து அவர்களிடமிருந்து விலகி விடவேண்டும்.

'மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி.’ (குறள் எண் 1118)

'என் காதலியைப் போல் நீ ஒளிவிட இயலுமானால் உனக்கும் என் காதல் உரியது, நிலவே நீ வாழ்வாயாக!’ என தன் காதலியின் முகத்தை நிலவோடு ஒப்பிட்டுப் புகழ்கிறான் தலைவன். நான்முகன் என்று பிரம்மனைப் போற்றுகிறோம். பிரம்மனுக்கு நான்கு முகங்கள் தோன்றியது எப்படி? நாராயண பட்டதிரி பக்தியில் கரைந்து உருகி குருவாயூரப்பனையே முன்னிலைப் படுத்தி அவரிடம் சொல்வதாகவே எழுதிய நாராயணீயம் என்ற அற்புதமான சம்ஸ்க்ருதக் காப்பியம் பிரம்மனுக்கு நான்கு முகங்கள் தோன்றிய சூழலை விவரிக்கிறது.

திருமாலின் உந்திச் சுழியிலிருந்து பூத்த தாமரையில் தோன்றினார் பிரம்மன். அதனால்தான் பத்ம ஜன்மன் என்பது பிரம்மனின் இன்னொரு பெயராயிற்று. எங்கிருந்து தோன்றினோம், நம்மைத் தோற்றுவித்தவர் யார் என்றறிய தாமரைத் தண்டின் உள்ளே செல்லுமளவு மெல்லிய உருவெடுத்து அதனுள் போய்ப்பார்த்தார். எவ்வளவு தூரம் தேடியும் தன்னைத் தோற்றுவித்த அந்த மூலப் பரம்பொருளை அவரால் கண்டறிய இயலவில்லை.

மீண்டும் தாமரையின் மேல் வந்தமர்ந்து இந்த மாபெரும் சமுத்திரத்தில் இந்தத் தாமரை எங்கிருந்து எப்படி உதித்தது என்று நான்கு திசைகளிலும் மாறிமாறிப் பார்த்தார். அப்படிப் பார்த்தபோதுதான் அவருக்கு நான்கு முகங்கள் தோன்றி அவர் நான்முகன் ஆனார் என்கிறது நாராயணீயம். ராமாயணத்தில் ராவணன் பத்து முகங்கள் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். அவனை தசமுகன் என அழைக்கிறது அந்த இதிகாசம்.

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே

  ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே

கூறுமடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே

 குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே

 வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்றே

ஆறுமுகமானபொருள் நீயருளல் வேண்டும்

 ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே!

 

 - என்ற அருணகிரிநாதரின் புகழ்பெற்ற பாடல், திருவண்ணாமலை ஆறுமுகப் பெருமாளின் ஒவ்வொரு முகத்தின் பண்பையும் அழகுபடப் பேசுகிறது. சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாய்த் தோன்றியவன் முருகன். பின் அன்னை பராசக்தியால் அரவணைக்கப்பட்டு ஆறுமுகங்களோடும், பன்னிரண்டு கரங்களோடும் ஒரே வடிவானவன்.

அறுமுகக் கடவுளை ஒருமுகமாய் வணங்கினால் எல்லா மங்கலங்களையும் அடையலாம் என்கிறது முருகனை வழிபடும் கெளமார நெறி. கந்தன் கருணை திரைப்படத்தில் அருணகிரிநாதர் பாணியைப் பின்பற்றி ஒரு பாடல் எழுதினார் கவியரசர் கண்ணதாசன். கே.வி. மகாதேவன் இசையமைப்பில் அந்தப் பாடல் எஸ். ஜானகி, ராஜலட்சுமி ஆகியோரால் பாடப்பட்டது.

'ஆறுமுகமான பொருள் வான்மகிழ வந்தான்

அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்

காலமகள் பெற்ற மகன் கோல முகம் வாழ்க!

கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க!

தாமரையில் பூத்துவந்த தங்க முகம் ஒன்று!

  தண்நிலவின் சாறெடுத்து வார்த்த முகம் ஒன்று!

பால்மணமும் பூமணமும் படிந்த முகம் ஒன்று!

  பாவலர்க்குப் பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று!

வேல்வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று!

  வெள்ளிரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று!’

 

தோற்றத்தில் முதலில் முதுமையைக் காட்டுவது முகம் தான். ஒருவரது முகத்தைப் பார்த்தால் ஏறக்குறைய அவருக்கு என்ன வயதிருக்கும் என்பதைக் கண்டுபிடித்து விடலாம். முருகன் எத்தனை எத்தனையோ யுகங்களாக இருந்து கொண்டிருக்கிறான். ஆனாலும் அவன் என்றும் இளையவன் தான். அவனுக்கு ஒருபோதும் வயதாவதில்லை. வள்ளிக் குறத்தியை மணம்புரிந்து கொள்ள ஒரு முதியவனாக அவன் வேடம் தாங்கி வந்து வம்பு செய்தானே தவிர,

மற்றபடி முருகனை வயதானவனாய் பக்தர்கள் யாரும் கருதுவதில்லை. அப்படிப்பட்ட வடிவில் அவனைக் கும்பிடுவதுமில்லை. அதனால்தான் அவன் குமரன் எனப் போற்றப்படுகிறான். கந்தன் கருணை திரைப்படத்திலேயே 'சொல்லச் சொல்ல இனிக்குதடா!’ என்ற இன்னொரு பாடல் முருகனின் முகம் முதுமையே அடையாதது எனப் புகழ்கிறது. புகழ்பவர் கவியரசர் கண்ணதாசன். பாடலைப் பாடியவர் பி.சுசீலா.

'உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்!

  மழலை கூறும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்!

  யுகங்கள் எல்லாம் மாறிமாறி சந்திக்கும்போது உன்

  முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது கந்தா முதுமை வராது!’

இராமபிரான் எப்போதும் ஒன்றுபோல மலர்ந்த முகத்தோடு இருப்பவன். அவன் மனத்தை இன்பமோ துன்பமோ எதுவும் பாதிப்பதில்லை. ‘மெய்த்திருப் பதம் மேவென்ற போதினும் இத்திருத் துறந்து ஏகென்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும் முகம்’ அவன் முகம் என அந்தத் திருமுகத்தை நினைந்து நினைந்து சீதாதேவி அசோகவனத்தில் பிரிவாற்றாமையால் வருந்துகிறாள் எனப் பாடுகிறார் கம்பர். முகநூல் என்ற அமைப்பு நவீன விஞ்ஞானம் தகவல் தொழில் நுட்பத் துறைக்குக் கொடுத்துள்ள அரிய கொடை. விஞ்ஞானம் நன்றாய்த்தான் இருக்கிறது.

ஆனால் அதைப் பயன்படுத்துவோர் சரிவரப் பயன்படுத்தாவிட்டால், பாவம் விஞ்ஞானம் அதற்கு என்ன செய்யும்? யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதிப் பகிர்ந்து கொள்ளலாம் என்பது முகநூலில் உள்ள செளகரியம். ஒரு பத்திரிகையைச் சார்ந்து யாரும் இயங்க வேண்டியதில்லை. முகநூல் மூலம் தம் கருத்தை நண்பர்களுக்கெல்லாம் அறிவிக்கலாம். இந்த செளகரியத்தில் ஒரு மாபெரும் அபாயமும் இருக்கிறது. பத்திரிகைகளில் ஆசிரியர் என்றொருவர் இருப்பார். அவர் சமூக விரோதமான கருத்துகளை நீக்கிவிடுவார்.

செம்மைப்படுத்தப் பட்ட படைப்புத் தான் பத்திரிகைகளில் இடம்பெறும். முகநூலில் அவரவரே ஆசிரியராக இயங்கவேண்டும். அவரவரே சமூக விரோதக் கருத்து இருந்தால் அதை நீக்கிவிட்டு மற்ற பகுதியைத்தான் முகநூலில் வெளியிட வேண்டும். இந்த நாகரிகம் இன்று முகநூலைப் பயன்படுத்தும் பலருக்கு இல்லை. அதனால் மதத் துவேஷக் கருத்துகளும் ஜாதித் துவேஷக் கருத்துகளும் தனிமனிதக் காழ்ப்புகளும் முகநூலில் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு செய்தியின் நம்பகத் தன்மை, நடுநிலைத்தன்மை இரண்டுமே முகநூலைப் பொறுத்தவரை கேள்விக்குள்ளாகி விட்டன.

முகநூலில் பொய்க்கணக்குகளைத் தொடங்கி ஒருவர் தமக்குப் பிடிக்காதவர் பற்றி என்ன அவதூறை வேண்டுமானாலும் பரப்பலாம் என்பதுதான் இன்றுள்ள நிலை. நடுநிலைச் சிந்தனையாளர்களிடையே முகநூல் மதிப்பிழந்து விட்டது முகநூல் 2004ம் ஆண்டு பிப்ரவரி நான்காம் நாள் தொடங்கப் பட்டது. தொடங்கியவர் மார்க் ஸ்லக்கர் பெர்க் என்பவர். மிகுந்த ஆவலோடு சமுதாய நன்மைக்காக முகநூலைத் தொடங்கிய அவர், இப்போதுள்ளதுபோல் முகநூல் சமுதாய ஒற்றுமையைக் கெடுக்கும் தளமாக மாறக்கூடும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

முகத்தில் முகம் பார்க்கலாம், விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்’ என்ற புகழ்பெற்ற திரைப்பாடல் சிவாஜி கணேசனும் பத்மினியும் நடித்த `தங்கப் பதுமை’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது. எம்.எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைப்பில், டி.எம். செளந்தரராஜனும், பி. லீலாவும் பாடிய அந்தப் பாடலை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். முகத்தைக் கண்ணாடிக்கு ஒப்பிடும் கவிஞர், அதை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்வதுதான் இந்தக் கவிதையின் சிறப்பு. முகத்தில் முகம் பார்க்கலாம் என்றால் முகம் சுருக்கமே இல்லாமல் பளபளப்பாக கண்ணாடிபோல் இருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

 

'படித்த மனைவி’ என்ற திரைப்படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதி, கே.வி மகாதேவன் இசையமைத்த ஒரு பாடல் உண்டு. டி.எம். செளந்தரராஜனும், பி. சுசீலாவும் பாடிய அந்தப் பாடல்:

'அந்த முகமா இந்த முகம் இதில்

எந்த முகம்தான் சொந்த முகம்?.....

நிலவும் மலரும் சிரிப்பும் இருந்தது

அந்த முகத்தினிலே - பெரும்

நெருப்பும் கொதிப்பும் புயலும் இருக்குது

இந்த முகத்தினிலே!

 

மனத்தின் உள்ளே உறைந்திருக்கும் உணர்ச்சிகளையெல்லாம் உள்ளபடி எடுத்துக் காட்டக் கூடியது முகம் என்ற உண்மை இத்திரைப்பாடலில் உணர்த்தப்பட்டுள்ளது. ஒருவர் தன் முகத்தை இன்னொவருக்குப் பரிச்சயப்படுத்திக் கொள்ளும்போது 'அவருக்கு என்னை அறிமுகம் செய்துகொண்டேன்,’ என்கிறார். ஒருவரை நேரில் கண்டு பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி நேர்முகம் எனப்படுகிறது. ஒருவர் தன் நண்பரைக் கண்டும் காணாமலும் இருந்தால் அவர் பாராமுகமாக இருந்தார் என்கிறோம்.

நவரசங்களையும் காண்பிக்கும் நடன மணிகளும், நடிகர்களும், நடிகையர்களும் தங்கள் உணர்ச்சிகளை முக பாவங்களில்தான் புலப்படுத்துகிறார்கள். நடிகை சாரதா நடிப்பதற்கு ஏற்ற முக அமைப்பு இல்லை என்று தொடக்கத்தில் இயக்குநர் ஸ்ரீதரால் நிராகரிக்கப்பட்டார். ஆனால் பின்னாளில் அவர் நடிப்பு பெருவெற்றி பெற்றது. துலாபார நடிப்பு அவருக்கு ஊர்வசி விருதையே பெற்றுத் தந்தது. யாரையும் நாம் பார்க்கும்போது இன்முகம் காட்டுவதுதான் பண்பாடு. முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளக் கூடாது.

நமக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்பதற்காக முகத்தைத் திருப்பிக் கொண்டு போகவும் கூடாது. முகத்தைப் பொறுத்தவரை இப்படி நம் வாழ்வியலில் அனுசரிக்கத் தக்க எத்தனையோ நாகரிகங்கள் சொல்லப்பட்டுள்ளன. சிலர் தங்கள் உணர்ச்சிகளை ஒருசிறிதும் முகத்தில் காட்டாமல் தங்கள் முகத்தையே தங்களின் முகமூடியாக வைத்துக் கொள்கிறார்கள். அத்தகையவர்கள் பெருகிவிட்ட காலம் இது. திருக்குறளைப் பயின்றால் எப்போதும் மலர்ந்த முகத்தோடு திகழலாம்.

- திருப்பூர் கிருஷ்ணன்

(குறள் உரைக்கும்)

Related Stories: