திருமலைவாசன் திருப்பம் அளிப்பார்!

நான் கணவரை இழந்து மூன்று வருடம் ஆகிறது.எனக்கு ஒரு பெண், ஒரு ஆண் பிள்ளை இருக்கிறார்கள். இருவருமே சரியாக படிப்பதில்லை. சொல்பேச்சும் கேட்பதில்லை. வீட்டில் இருக்கும் போது கீரியும், பாம்பும் போல் நடந்து கொள்கிறார்கள். பிரச்னைமேல் பிரச்னையாக உள்ளது. வீட்டில் நிம்மதி இல்லை. பரிகாரம் கூறுங்கள். சங்கீதா, மல்லப்பள்ளி.

Advertising
Advertising

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. இளம் வயதில் கணவரை இழந்த நிலையில் பிள்ளைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டுமே என்ற பயமும் கவலையும் உங்கள் மனதை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. 15 வயது பெண்ணும், 12 வயது பிள்ளையும் பொதுவாக எல்லோர் வீட்டிலும் என்ன செய்து கொண்டிருப்பார்களோ, அதுவே உங்கள் இல்லத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. சிறுபிள்ளைகள் சண்டை போட்டுக் கொள்வது இயற்கை. திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசியில்

பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகம் வெகு சிறப்பாக உள்ளது.

19.03.2019 முதல் துவங்க உள்ள குரு தசை அவரது மனநிலையில் மாற்றத்தை உருவாக்கும். 11ம் வகுப்பிலிருந்து நன்றாகப் படிக்கத் துவங்குவார். உலக வாழ்க்கை என்றால் என்ன என்பது இனிமேல்தான் புரியத் துவங்கும். உயர்ந்த உத்யோகத்திற்குச் செல்லும் வாய்ப்பும் அவரது ஜாதகத்தில் பிரகாசமாக உள்ளது. ஒரு தகப்பனுக்கு உரிய கடமையோடு அவர் தனது தம்பியைப் பார்த்துக் கொள்வார். அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மகன் சற்று பிடிவாத குணத்துடன் நடந்து கொண்டாலும் அக்காவின் அன்புக்கு கட்டுப்பட்டு நடப்பார். பிரதி ஞாயிறுதோறும் ராகுகால வேளையில் துர்கையின் சந்நதியில் விளக்கேற்றி வைத்து வணங்கி வாருங்கள். பிரச்னைகள் குறைந்து நிம்மதி கிடைக்கக் காண்பீர்கள்.

நான் கடன் பிரச்னையால் தவித்துக் கொண்டிருக்கிறேன். கடனைத் திருப்பித்தர வழியில்லாமல் திணறுகிறேன். நான் நடத்தி வரும் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடையையும் திறக்க இயலவில்லை. சாப்பாட்டிற்கு வழியில்லாத நிலையில் டிரைவர் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். வாழ்வில் நல்ல நிலைக்கு வர தீர்வு சொல்லுங்கள். யுவராஜா, திருவண்ணாமலை.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் 12ம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், ராகு ஆகிய நான்கு கிரகங்கள் ஒன்றாக இணைந்து சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி ஓரிடத்தில் அமர்ந்து செய்யும் வியாபாரம் என்பது சரியாக வராது. மேலும், உள்ளூரில் உங்களுக்கான தொழிலும் அமையாது. உங்கள் சொந்த ஊரை விட்டு இடம் பெயருவது நல்லது. மலை சார்ந்த பகுதியாக உள்ள ஊர் உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு உகந்ததாக அமையும். தற்போது பார்த்து வரும் ஓட்டுநர் தொழிலும் கைகொடுக்கும்.

2019ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நேரம் மாறுவதால் வரும் வருடத்திலிருந்து வெளியூரில் உங்கள் தொழிலைஅமைத்துக் கொள்ள திட்டமிட்டு செயல்படுங்கள். குடும்பத்தையும் உங்களுடன் அழைத்துச் செல்லலாம். தற்போது உங்களுக்கு இருந்து வரும் கடன் பிரச்னை வரும் வருடத்தில் தீர்ந்து விடும். கடன் பிரச்னை முழுவதுமாக தீர்ந்தவுடன் திருமலை திருப்பதிக்குச் சென்று முடிகாணிக்கை செலுத்தி ஏழுமலையானை வணங்குவதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வருவதை உங்கள் வாழ்நாள் முழுவதும் வழக்கத்தில் வைத்திருங்கள். திருமலைவாசனின் அருளால் திருப்பம் காண்பீர்கள்.

திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. திருமணமானவுடன் கரு உண்டாகி 40 நாளில் கலைந்து விட்டது. நாடி ஜோதிடம் பார்த்ததில் 22வது வருடத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று வந்தது. அதற்கு தகுந்தாற்போல் 2017 டிசம்பரில் கரு உருவாகி 40 நாளில்தானே கலைந்து விட்டது. பிள்ளைப்பேறு கிடைக்க உரிய பரிகாரம் சொல்லுங்கள். அனந்தலட்சுமி, திருப்பூர்.

ஐம்பதாவது வயதினை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னமும் நமக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து விடும் என்ற உங்கள் நம்பிக்கைக்கு நிச்சயமாக பலன் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் சனி புக்தி நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதியும், புத்திரகாரகனுமாகிய குரு பகவான் ஏழாம் வீட்டினில் கேதுவுடன் இணைந்திருக்கிறார். என்றாலும் புத்திரஸ்தானாதிபதியான சந்திரன் இரண்டாம் வீட்டில் சுக்கிரனுடன் இணைந்திருப்பது நல்ல நிலையே. சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் சனிபகவான் ஏழாம் வீட்டில் கேதுவுடன் இணைந்திருக்கிறார்.

என்றாலும் புத்ர ஸ்தானாதிபதி செவ்வாய் இரண்டில் அமர்ந்திருப்பது சாதகமான அம்சமே ஆகும். இருவரின் ஜாதகத்திலும் கேதுவினால் சந்தான ப்ராப்தி என்பது தடைபட்டு வருகிறது. சாஸ்திரம் அறிந்த உங்கள் தந்தையாரிடம் சந்தான கணபதி மந்திரத்தை உபதேசம் பெற்று அதனை தினந்தோறும் ஜபித்து வாருங்கள். சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து மாலையில் சந்தான கணபதி மந்திரத்தால் ஹோமம் செய்து வழிபட்டு வருவதும் நல்லது. தற்போது வரவுள்ள மஹாசங்கடஹர சதுர்த்தியில் (30.08.2019) துவங்கி தொடர்ந்து ஏழு மாதங்களுக்கு சங்கடஹர சதுர்த்தி நாளில் சந்தான கணபதி ஹோமம் செய்வதோடு அன்றைய நாளில் ஒரு பிரம்மச்சாரி சிறுவனுக்கு வஸ்திரம், போஜனம், தாம்பூலம் அளித்து நமஸ்கரியுங்கள். பிள்ளையாரின் திருவருளால் உங்கள் மடியில் ஒரு பிள்ளை தவழும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

என் மகன் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தான். இரண்டு வருடங்களுக்கு முன் பதவி பறிபோய்விட்டது. வேறு ஏதேதோ வேலைக்கு முயன்று வருகிறான். ஆசிரியர் பணி பிடிக்கவில்லை என்று அதற்கு முயற்சிக்க மறுக்கிறான். ஏதாவது சுயமாக தொழில் செய்கிறேன் என்று கூறுகிறான். குடும்பப் பொருளாதாரநிலை மோசமாக உள்ளது. அவனுடைய எதிர்காலத்திற்கு ஒரு நல்லவழி சொல்லுங்கள். ஷண்முகம், சேலம்.

உத்திராடம் நட்சத்திரம், தனுசு ராசி (மகர ராசி என்று குறிப்பிட்டுள்ளீர்கள்), தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. பொதுவாக தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு ஏற்றவர்களே. அந்த விதிக்கு ஏற்றார் போல் உங்கள் மகனும் ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார். இடையில் உண்டான தடையினால் பதவி பறிபோய் உள்ளது. ஓரிடத்தில் பதவி பறிபோய் விட்டதால் அந்த தொழிலே வேண்டாம் என நினைப்பது தவறு என்பதை உங்கள் மகனுக்குச் சொல்லிப் புரிய வையுங்கள்.

அவருடைய ஜாதகபலத்தின்படி உத்யோக ஸ்தானாதிபதி புதன் ஐந்தாம் வீட்டில் சூரியன்  ராகுவுடன் இணைந்திருப்பது நல்ல நிலையே. லக்னாதிபதி குரு நீசம் பெற்றிருந்தாலும் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். கிராமப்புற மாணவர்கள் அதிகமாகப் படிக்கும் கல்லூரியில் வேலைக்கு முயற்சி செய்யச் சொல்லுங்கள். தற்போதைய சூழலில் தற்காலிக வேலை கிடைத்தாலும் 12.06.2019 முதல் நல்ல நேரம் என்பது துவங்குவதால் வேலை நிரந்தரமாகிவிடும். சுயதொழில் என்பது அத்தனை சிறப்பாக இல்லை. சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள ஆஞ்சநேயர் ஆலயத்திற்குச் சென்று கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி 11 முறை சந்நதியை வலம்வந்து வணங்கி வரச் சொல்லுங்கள். குழப்பம் அகன்று மனத் தெளிவு காண்பார்.

“மனோஜவம் மாருத துல்ய வேகம்

ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்

வாதாத்மஜம் வானரயூத முக்யம்

ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி.”

ஆசிரியர் பயிற்சி முடித்து 20 ஆண்டுகள் ஆகிறது. எவ்வளவோ முயற்சித்தும் வேலை கிடைக்கவில்லை. கணவருக்கும் நிரந்தர தொழில் இல்லை. மணமாகி 22 ஆண்டுகளாக நிரந்தர வருமானமின்றி கடன் தொல்லையுடன் வாழ்க்கையை நடத்தி வருகிறோம். சிறிய அளவில் டிபன் கடை நடத்தியும் கடன் தொல்லையால் சரியாக செயல்பட முடியவில்லை. சமையல் வேலையே நிரந்தரமாக இருந்தால் போதுமென்று இரவும், பகலுமாக உழைக்கிறேன். என் பிள்ளைகளின் எதிர்காலமாவது சிறப்பாக அமையுமா? நல்ல பதிலைத் தாருங்கள். விஜயலட்சுமி, வேலூர்.

உங்கள் உழைப்பிற்கான பலன் நிச்சயமாக ஒருநாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வாருங்கள். மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் கணவர் மற்றும் இரு பிள்ளைகளின் ஜாதகங்களையும் ஆராய்ந்ததில் பரம்பரையில் ஒரு சுமங்கலிப் பெண்ணின் சாபம் உள்ளதாகப் புலப்படுகிறது. உங்கள் கணவர் அல்லது குடும்பத்திலுள்ள பெரியவர்களை அணுகி அதன் விவரம் அறிந்து அந்த சாபத்தினைத் தீர்க்க முயற்சியுங்கள். அந்த சாபத்திற்கு ஒரு விமோசனம் தேடும்வரை சாண் ஏறினால் முழம் சறுக்கத்தான் செய்யும். இத்தனை சிரமத்திற்கு மத்தியிலும், இந்த குடும்பத்தின் பாரத்தினை சுமக்கும் வலிமையை இறைவன் உங்களுக்குத் தந்திருப்பதை எண்ணி திருப்தி காணுங்கள்.

உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சபலம் பெற்றிருப்பதால் பரம்பரையில் இருந்து வரும் சாபத்திற்கு உங்களால் விமோசனம் தேட இயலும். வெள்ளிக்கிழமை தோறும் வீடு தேடி வரும் சுமங்கலிப் பெண்களுக்கு உங்களால் இயன்ற தாம்பூலத்தினை அளித்து நமஸ்கரியுங்கள். மஹாளய அமாவாசைக்கு முன்னால் வருகின்ற வெள்ளிக்கிழமை நாளில் (05.10.2018) மூன்று சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து உங்களால் இயன்ற பொருட் செலவில் சேலை  ரவிக்கை தாம்பூலத்துடன் அவர்களுக்கு போஜனம் அளித்து நமஸ்கரியுங்கள். பரம்பரையில் உள்ள சாபத்தின் வீரியம் குறைவதோடு வாழ்வியல் நிலையில் முன்னேற்றமும் உண்டாகக் காண்பீர்கள்.

காதல் திருமணம் செய்து கொண்ட எனக்கு இரண்டு குழந்தைகள். சில பிரச்னையால் விவாகரத்து ஆகிவிட்டது. எட்டு வருட காலம் தனியாக இருந்து வாழ்க்கையை பார்த்துக் கொண்டேன். இப்படி இருக்க இன்னொருவர் எனக்கு வாழ்க்கை கொடுத்தார். மூன்று வருடம் ஆகிறது. அவருடைய முதல் தாரத்துப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள என்னைத் திருமணம் செய்திருக்கிறார். கொத்தடிமையாக வாழ்கிறேன். என் முதல் கணவருடனோ அல்லது பிள்ளைகளுடனோ சென்று சேர்ந்து வாழ இயலுமா? எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள். உஷா.

கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சனிதசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் வாழ்க்கைத்துணையைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு 12ல் அமர்ந்திருப்பதும், லக்னாதிபதி புதன் வக்ரம் பெற்றிருப்பதும் மண வாழ்வில் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. அடிக்கடி மாறும் மனநிலையைக் கொண்ட உங்களைப் புரிந்து கொள்ள உங்கள் கணவரால் இயலவில்லை. உங்களுடைய முதல் கணவர் மீண்டும் உங்களை ஏற்றுக் கொள்வது கேள்விக்குறியே. அதேபோன்று இரண்டாவது கணவருடனான தற்போதைய உங்களது வாழ்வும் நிலையாக அமையாது. உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் வைத்திருக்கும் தொடர்பு நீடிக்கும்.

உங்களது ஜாதக பலத்தைப் பொறுத்தவரை நீங்கள் தனியாக வசிப்பதே நல்லது. உங்கள் உடலில் பலம் இருக்கும் வரை எங்காவது வேலை செய்து கொண்டு உங்கள் ஜீவனத்தை கழித்து வாருங்கள். சம்பளத்தை சேமித்து வைப்பது எதிர்காலத்திற்குப் பயன் தரும். இனிமேலாவது மனதை அலைபாய விடாமல் தர்ம காரியங்களில் ஈடுபடுங்கள். ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று உங்களால் இயன்ற பணிவிடையை அவர்களுக்குச் செய்து வாருங்கள். இந்த தசையில் தேடும் புண்ணியம் அடுத்த பிறவியில் உங்களுக்கு நல்வாழ்வினை உண்டாக்கித் தரும்.

ஓய்வு பெற ஆறுமாதம் இருந்த நிலையில் என்னை டிஸ்மிஸ் செய்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வங்கியில் பணிபுரியும் என் மூத்த மகன் காதல் தோல்வியால் மனம் நொந்து போய் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறான். நல்ல பொது அறிவும், திறமையும் உள்ள என் இரண்டாவது மகன் எந்த வேலைக்கும் போகாமல் சுயமாக சம்பாதிக்க சிங்கப்பூர் செல்கிறேன் என்கிறான். எங்கள் பிரச்னை தீர வழிகாட்டுங்கள். தேவதாஸ், முசிறி.

உங்கள் மூவரின் பிரச்னைகளையும் தனித்தனி கடிதங்களாக எழுதியுள்ளீர்கள். அஸ்வினி நட்சத்திரம், மேஷராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குருதசையில் குரு புக்தி நடந்து வருகிறது. நீங்கள் பணியிலிருக்கும் காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ ஏழை அந்தணர் ஒருவரின் சாபத்தினைப் பெற்றிருக்கிறீர்கள். அதன் விளைவாக நீதிமன்றத்தில் எத்தனையோ முறை உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தும் உங்களால் பணியில் இருந்ததற்கான முழுப் பயனையும் அடைய முடியவில்லை. திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று அங்கு செய்யப்படும் தோஷ பரிகாரத்தினை செய்து முடியுங்கள். பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மூத்த மகனின் ஜாதக பலத்தின்படி அவரது திருமணம் 01.09.2018க்குமேல் 28.08.2019க்குள் நடந்து விடும்.

ஸ்ரீரங்கம் திருத்தலத்திற்கு உங்கள் மூத்த மகனை அழைத்துச் சென்று காவிரியில் ஸ்நானம் செய்து ரங்கநாதப் பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அவர் மனம் மாறி திருமணம் செய்து கொள்வார். பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள இளைய மகனின் ஜாதகப்படி தற்போது செவ்வாய்தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. வீடியோ, டெலிஃபிலிம், எடிட்டிங் முதலான கலைத்துறை சார்ந்த தொழில்கள் அவருக்கு நன்றாகவே கைகொடுக்கும். அவரது போக்கில் செல்ல அனுமதியுங்கள். 12.02.2019க்குள் தனக்கான உத்யோகத்தை அவர் தேடிக் கொள்வார். வயலூர் முருகன் ஆலயத்திற்கு அவரைஅழைத்துச் சென்று மனமுருகி வேண்டிக் கொள்ளச் சொல்லுங்கள். அவர் எதிர்காலத்திற்கான நுழைவுவாயில் திறந்து விடும். 2019ம் வருடத்தில் உங்கள் குடும்பப் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து விடும். கவலை வேண்டாம்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

Related Stories: