நல்ல நேரம் துவங்கிவிட்டது

என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குடும்பத்தில் கவலையும், பண இழப்பும், சங்கடங்களும் உண்டாகியுள்ளது.அவரது ஆயுள் எவ்வாறு உள்ளது? மகளின் திருமண நிகழ்வை கண்டுகளிக்க இயலுமா? எனது மனைவியும் தற்போது மாற்று மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.  இதுவும் எனக்கு மன வருத்தத்தைத் தருகிறது. நல்லதொரு தீர்வினைச் சொல்லுங்கள். நடராஜன், தூத்துக்குடி.

Advertising
Advertising

ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மனைவி தனது உடலுறுப்புகளில் ஒன்று மாற்றி ஒன்றாக புற்றுநோய் கட்டிகள் தாக்கி அவதிப்படுவதாக எழுதியுள்ளீர்கள். அவருடைய ஜாதகக் கணிதத்தின்படி தற்போது சூரிய தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. சூரிய தசையின் துவக்கத்திலிருந்தே அவர் நோயினால் சிரமப்பட்டு வருகிறார். 27.01.2019 வரை நேரம் நன்றாக இல்லை என்பதால் அவரது உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குடும்பத்தில் எல்லோரும் கலங்கிப்போய் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். பணம் அதிகமாக செலவானாலும் அதனை சமாளிக்கும் அளவிற்கு ஆண்டவன் அரசுப் பணியை வழங்கியுள்ளதை எண்ணி திருப்தி கொள்ளுங்கள்.

பகவான் ஸ்ரீரமணர்கூட புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனும்போது சாதாரண மனிதர்களாகிய நாம் எம்மாத்திரம்? இறைவனின் செயலில் ஏதாவது காரணம் இருக்கும், எல்லாம் நன்மைக்கே, உலகில் வாழும் வரை நம் கடமையை தவறாது செய்வோம் என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். அவருடைய உடல் உபாதை அவருடைய மனதை மாற்றியிருக்கிறது. மாற்றுமத வழிபாடுகளை கடைபிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. எம்மதமாய் இருந்தாலும், கடவுளை நம்பியிருந்தால் போதுமானது. அவருடைய கடவுள் நம்பிக்கையை சிதைக்க வேண்டாம். பிரதி ஞாயிறு தோறும் அருகில் உள்ள நரசிம்மர் கோயிலுக்குச் சென்று எட்டு முறை வலம் வந்து கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வணங்கி வரச் சொல்லுங்கள். அவர் செல்ல மறுத்தால் அவருக்கு பதிலாக அவருடைய கணவராகிய நீங்கள் சென்று வணங்கி வாருங்கள். வலியைத் தாங்கும் வலிமை வந்து சேரும்.

“க்ரூர க்ரஹை: பீடிதாநாம் பக்தானாம் அபயப்ரதம்

ஸ்ரீ ந்ருசிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.”

புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்த நாளில் எனது மனைவியின் முந்தானையில் தீ பற்றிக் கொண்டது. அதன்பிறகு தற்போது அமாவாசை விரதம் இருந்தபோது லட்சுமி விளக்கில் இருந்து முந்தானையில் மீண்டும் தீ பிடித்துள்ளது. எதனால் இதுபோல் நடக்கிறது. வீடு சரியில்லையா? ஜாதகம் பார்த்ததில் தோஷம் எதுவும் இல்லை என்கிறார்கள். உரிய பரிகாரம் கூறவும். கோவிந்தசாமி, சமயபுரம்.

நீங்கள் வீடு கட்டியிருக்கும் மனையில் ஏதேனும் குறையிருந்தால் இவ்வாறு நடக்க வாய்ப்பு உண்டு. யாரிடம் இருந்து அந்த இடத்தினை வாங்கினீர்கள், அவர்கள் வீட்டில் ஏதேனும் துர்நிகழ்வு நடந்திருக்கிறதா என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இரண்டாவதாக உங்கள் மனைவி புதிதாக வைரக்கல்லில் ஏதேனும் ஆபரணம் அணிந்திருக்கிறாரா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மூக்குத்தி, தோடு, மோதிரம் எதில் வைரம் பதித்திருந்தாலும் அந்த வைரம் நமக்கு ஏற்புடையதாக இல்லை என்றால் இதுபோன்ற தீ விபத்துக்களை உருவாக்கி நமக்கு அடையாளம் காண்பித்து விடும்.

அதுபோல் இருந்தால் உடனடியாக அந்த வைரத்தை திருப்பிக் கொடுத்து விடுங்கள். எது எப்படி இருந்தாலும், வருகின்ற ஆடி அமாவாசை நாளில் நான்கு வெள்ளைப் பூசணிக்காய்களை வாங்கி அவற்றை சரிபாதியாக வெட்டி அதன் மீது மஞ்சள் குங்குமம் தடவி வீட்டைச் சுற்றி எட்டு மூலைகளிலும் வைத்து விடுங்கள். அதே போல எட்டு எலுமிச்சம்பழங்களை நறுக்கி எட்டு மூலைகளிலும் பிழிந்து விடுங்கள். சமயபுரம் மாரியம்மனுக்கு கண்மலர் காணிக்கை செலுத்தி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் குறை தீரும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக மளிகைக்கடை நடத்தி வருகிறேன். வியாபாரம் சரியாக இல்லாமல் கடன்பட்டுள்ளேன்.வியாபாரம் சரியாக நடக்கவும், கடனில்லாமல் வாழவும் பரிகாரம் கூறுங்கள். மனோகரன், துறையூர்.

நாற்பத்தி மூன்றாவது வயதில் இருக்கும் நீங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மளிகைக்கடை நடத்தி வருவதாக எழுதியுள்ளீர்கள். இதற்கு முன் என்ன தொழில் செய்து வந்தீர்கள் என்பதைக் குறிப்பிடவில்லை. நீங்கள் இதற்கு முன்னர் செய்து வந்த தொழிலும் உங்களுக்கு கைகொடுக்கும். பழைய உத்யோகம் சார்ந்த  வியாபாரத்தையும் செய்ய முயற்சிக்கலாம். சித்திரை நட்சத்திரம், துலாம் ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானாதிபதி புதன் உச்சம் பெற்ற நிலையில் சூரியன், சந்திரனுடன் இணைந்து ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருப்பது சிறப்பான நன்மையைத் தரும். வியாபார நுணுக்கத்தினை நன்றாக அறிந்திருப்பீர்கள். உங்கள் ஜாதகக் கணிதத்தின்படி தற்போது சனிதசையில் புதன் புக்தி நடந்து வருகிறது.

இதுவும் நல்ல நேரமே. ஹோட்டல் போன்ற சாப்பாட்டுத் தொழிலும் உங்களுக்கு நன்றாக கைகொடுக்கும். பார்ட்னர்ஷிப்பிலும் தொழிலை அபிவிருத்தி செய்ய இயலும். உங்கள் ஜாதகம் கடனில் மூழ்கும் ஜாதகம் அல்ல. நல்ல நேரத்தினை பயன்படுத்திக் கொண்டு முழுமூச்சுடன் உழைத்து வந்தீர்களேயானால் வெற்றிஉறுதி. தினமும் காலையில் அருகில் உள்ள ஈஸ்வரன் கோயிலை மூன்று முறை வலம் வந்தபிறகு கடையைத் திறப்பதை வழக்கத்தில் கொள்ளுங்கள். ஞாயிறு தோறும் இறைவனின் அபிஷேகத்திற்கு பன்னீர் வாங்கித் தாருங்கள். உங்களுக்கான நேரம் துவங்கிவிட்டது.

முப்பத்தோரு வயதாகும் எங்கள் மூத்த பெண்ணிற்கு கடந்த ஒன்றரை வருடங்களாக முதுகுத்தண்டில் பிரச்னை உண்டாகி அவதிப்படுகிறாள். எப்போது பூரண குணம் அடைவாள்? கடந்த ஆறு வருடங்களாக திருமணத்திற்கு முயற்சி செய்தும் நடக்கவில்லை. எப்போது திருமணம் நடக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? விஸ்வநாதன், சென்னை.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகளின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி புதன் வக்ரம் பெற்றநிலையில் 12ம் வீட்டில் மறைந்திருப்பதும் திருமணத்தை தடை செய்து வருகின்றன. என்றாலும் அவரது ஜாதகபலத்தின்படி 2011ம் ஆண்டில் திருமண யோகம் கூடி வந்திருக்கிறது. அந்த நேரத்தினை தவற விட்டதன் விளைவு தற்போது தாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. முதுகுத் தண்டு பிரச்னைக்காக மாத்திரைகளை சாப்பிட வேண்டிய அவசியம்

அவருக்கு உண்டாகாது. மருத்துவர்கள் சொல்லும் பிசியோதெரபி சிகிச்சையை தவறாது மேற்கொள்ளச் சொல்லுங்கள்.

அவர்கள் கற்றுத்தரும் உடற்பயிற்சியை எந்தவிதமான சோம்பல் தன்மையும் இன்றி சரிவர செய்து வரச் சொல்லுங்கள். அதோடு நில்லாமல் காலை வேளையில் சூரிய ஒளி முதுகுத் தண்டில் விழுவது போல மேற்கு நோக்கிஅமர்ந்து பத்து நிமிடம் தியானம் செய்து வரச் சொல்லுங்கள்.முதுகுத்தண்டு பிரச்னை காணாமல் போகும். வருகின்ற மஹாசங்கடஹர சதுர்த்தி (30.08.2018) நாளில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று கீழேயுள்ள ஸ்லோகத்தினை 108 முறை ஜபம் செய்து உங்கள் மகளை பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். அன்றைய தினம் உங்களால் இயன்ற அன்னதானம் செய்வதும் நல்லது. 04.02.2019ற்குள் திருமணம் கைகூடும்.

“ப்ருச்னிச்ருங்காயாஜிதாய க்ஷிப்ராபீஷ்டார்த்த தாயிநே

ஸித்தி புத்தி ப்ரமோதாய ஸ்ரீ கணேசாயமங்களம்.”

நான் என் மனைவியைப் பிரிந்து ஐந்து வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு மறுவாழ்வு கிடைக்குமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? ஜெயக்குமார், வேதாரண்யம்.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் தற்போது ராகுதசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், ராகு ஆகிய ஐந்து கிரஹங்களின் இணைவு பிரச்னையைத் தோற்றுவித்திருக்கிறது. நீங்கள் மனைவியைப் பிரிந்து வாழ்வதற்கான காரணத்தை நீங்களே நன்கு அறிவீர்கள். தேவையற்ற வீணான தொடர்புகளும், நட்பு வட்டமும் உங்கள் குடும்ப வாழ்வில் பிரச்னையைத் தந்து கொண்டிருக்கிறது. நீங்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

உங்கள் குருமார்கள் சொல்லும் கோட்பாடுகளையும் நீங்கள் சரியாக கடைபிடிப்பது இல்லை. ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் கேது உங்கள் மனதை அலைபாய வைத்துக் கொண்டிருக்கிறார். அலைபாயும் மனதினை அடக்கினால் மட்டுமே வாழ்வு சிறப்பாக அமையும். உங்கள் ஜாதக பலத்தின்படி 15.09.2019க்குமேல் 03.10.2020க்குள் நடக்கின்ற சம்பவம் உங்கள் மனதினை பக்குவப்படுத்தும். உங்கள் சந்தேகங்களை தீர்த்து வைக்கின்ற குரு ஒருவரை வெகுவிரைவில் சந்திப்பீர்கள். அவர் மூலமாக மனதில் தெளிவு பிறப்பதோடு ஞானமும் கிட்டும்.

நான் ஓய்வு பெற்ற ஆசிரியர். 20 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்பட பல உடல் உபாதைகள் உள்ளன. என் மனைவி எனக்குத் தெரியாமல் பலரிடம் கடன்பட்டு தனியாரிடம் முதலீடு செய்து பெரும்தொகை இழந்து விட்டார். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பெருங் கடனாளி ஆகிவிட்டார். என்னால் முடிந்தவரை கடனை அடைத்து வருகிறேன். இருப்பினும் முழுமையாக அடைக்க இயலவில்லை. நான் படும் துன்பம் அளவில்லாதது. என் துன்பம் தீர வழி சொல்லுங்கள். திருப்பூர் மாவட்ட வாசகர்.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சனி புக்தி நடந்து  வருகிறது. சித்திரை நட்சத்திரம், கன்னிராசி, மேஷலக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மனைவியின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்கள் இருவரின் ஜாதகத்திலும் சனிபகவான் வக்ரம் பெற்ற நிலையில் அமர்ந்திருக்கிறார். உங்களுக்கு மனைவியைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியாகவும், உங்கள் மனைவியின் ஜாதகத்தில் கணவரைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிலேயும் சனிஅமர்ந்திருக்கிறார். பரஸ்பரம் உங்கள் இருவரின் ஜாதகத்திலும் வக்ரம் பெற்றசனியின் தொடர்பு ஏழாம் பாவகத்தோடு இணைந்துள்ளது.

நீங்கள் அடைந்து வரும் இந்த துன்பத்திற்கு உங்கள் மனைவியை மட்டும் காரணமாகச் சொல்ல இயலாது. உங்களுடைய விதியும் சேர்ந்துதான் அவரை இதுபோன்றதொரு சிக்கலில் சிக்க வைத்துள்ளது. உங்களுடைய ஜாதகபலத்தின்படி தற்போது நடந்து வரும் நேரம் அத்தனை சிலாக்கியமாக இல்லை. என்றாலும் உங்கள் மனைவியின் ஜாதகப்படி தற்போது நடந்து வரும் நேரம் சற்று சாதகமாக உள்ளது. அவரது ஜாதகபலத்தின்படி 07.09.2018க்குப் பின் கடன் சுமை குறையத் தொடங்கிவிடும்.நீங்கள்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அருள்வாக்கு அம்மா சொன்னது போல் தொடர்ந்து கருவறை தீபம் ஏற்றிவாருங்கள். எந்தவிதமான சாபமும் உங்களைத் தாக்காது. மனநிம்மதி காண்பீர்கள்.

எனக்குத் திருமணமாகி 11 வருடங்கள் ஆகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. வேலையும் சரியாக அமையவில்லை. தகுந்த பரிகாரம் கூறுங்கள். வெற்றிவேல், தூத்துக்குடி.

உத்திராடம் நட்சத்திரம், தனுசு ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. நீங்கள் எழுதியிருக்கும் கடிதத்தில் உங்கள் மனைவி மிருகசீரிஷம் நட்சத்திரம், விருச்சிக ராசியில் பிறந்திருப்பதாக எழுதியுள்ளீர்கள். மிருகசீரிஷம் நட்சத்திரம் என்பது விருச்சிக ராசிக்குள் வரவே வராது. மேலும் நீங்கள் கொடுத்துள்ள அவரது பிறந்த தேதி, நேரத்துடன் மிருகசீரிஷம் நட்சத்திரமோ அல்லது விருச்சிக ராசியோ எதுவும் பொருந்தி வரவில்லை. உங்களுடைய ஜாதக பலத்தின்படி உத்யோகஸ்தானம் என்பது நன்றாக உள்ளது. உங்கள் சொந்த ஊரில் உத்யோகத்தைத் தேடுவதைவிட வடக்கு திசையில் உள்ள ஊரில் உத்யோகத்தைத் தேடுவது நல்லது.

09.11.2018க்குப் பின் உங்களுக்கு நிலையான உத்யோகம் என்பது அமைந்து விடும். உங்கள் மனைவியின் பிறந்த தேதி நேரம் ஆகிய விபரத்தை நீங்கள்சரியாக குறிப்பிடாததால் பிள்ளைப்பேறு குறித்த கேள்விக்கு துல்லியமானபதிலைத் தெரிவிக்க இயலவில்லை. என்றாலும் உங்களுடைய ஜாதகபலத்தின்படி குருதசை துவங்கும் நேரத்தில் அதாவது 2020ம் ஆண்டின் பிற்பாதியில் பிள்ளையை மடியில் ஏந்தும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. திருச்செந்தூர் முருகப் பெருமானிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் வாரிசுக்கு செந்தில் முருகனின் பெயரையே சூட்டுவதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். ஆறுமுகத்தோனின் அருளால் மழலையின் குரல் ஒலிக்கும் போது உங்கள் வாழ்வும் ஏறுமுகம் பெறும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

Related Stories: