லவ்வர் விமர்சனம்

ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் திவ்யா (ஸ்ரீகவுரி பிரியா), படிப்புக்கேற்ற வேலை தேடும் அருணை (மணிகண்டன்) தீவிரமாக காதலிக்கிறார். நிஜமான காதலர்களுக்கு நடுவே சந்தேகம் என்ற பேய் குடிகொண்டால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி படம் சொல்கிறது. அலுவலக நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பிரதேசத்துக்கு செல்லும் திவ்யாவின் வீடியோவை கண்ணா ரவியின் இன்ஸ்டாகிராமில் பார்த்து கொதிக்கும் அருண், மீண்டும் திவ்யாவிடம் கோப்படுகிறார்.

இப்படியே அவர்கள் கடுமையாக மோதிக்கொள்வதும், பிறகு திவ்யாவிடம் மன்னிப்பு கேட்டு அருண் கெஞ்சுவதும், இதையடுத்து திவ்யா மனமிரங்கி அருணை மன்னித்து ஏற்றுக்கொள்வதுமாக, படத்தின் இடைவேளை நெருங்கும்போது, அருணை பிரேக்அப் செய்கிறார் திவ்யா. 6 வருட காதலை ஒரே நொடியில் முறித்துக்கொள் என்றால், எந்தக் காதலனாவது தாங்குவானா? மீண்டும் திவ்யாவின் மீது தன் முரட்டுத்தனமான காதலை வெளிப்படுத்தும் அருண், ‘இனி நீ விரும்பியபடி நடந்துகொள்கிறேன். என்னை மன்னித்துவிடு’ என்று கெஞ்சுகிறார்.

முடிந்த உறவு இனி மலர வாய்ப்பு இல்லை என்று சொல்லும் திவ்யா, மீண்டும் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் கடற்கரைப் பிரதேசத்துக்கு செல்லும்போது, அவர்களுடன் அருணும் செல்கிறார். அப்போது கண்ணா ரவியையும், திவ்யாவையும் இணைத்துப் பேசி குழம்பும் அருண், தற்கொலை செய்துகொள்ள கடலில் குதிக்கிறார். பிறகு என்ன நடக்கிறது? அருண், திவ்யா மீண்டும் இணைந்தார்களா என்பது கதை. சுயமாக இருக்க விரும்பும் இளம் பெண்ணுக்கும், அவளையே உலகம் என்று நினைத்து உருகும் இளைஞனுக்கும் இடையே ஏற்படும் காதல், மோதலுக்குப் பிறகு வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா என்பது திரைக்கதை.

இன்றைய இளம் சமூகத்தினரின் நட்பையும், காதலையும், லைஃப் ஸ்டைலையும் எந்தவித பாசாங்கும் இல்லாமல் இயல்பாகப் பதிவு செய்துள்ள இயக்குனர் பிரபுராம் வியாஸ், கோலிவுட்டுக்கு நம்பிக்கைக்குரிய வரவு. அருணாக ‘குட்நைட்’ மணிகண்டன், திவ்யாவாக ஸ்ரீகவுரி பிரியா இருவரும், தங்கள் கேரக்டர்களை யதார்த்தமான நடிப்பின் மூலம் மெருகேற்றியுள்ளனர். அவர்களின் பெட்ரூம் கெமிஸ்ட்ரி, இளசுகளை சூடேற்றும். மணிகண்டனின் பெற்றோராக வரும் சரவணன், கீதா கைலாசம் அப்படியே நடுத்தரக் குடும்பத்தைப் பிரதிபலிக்கின்றனர்.

கண்ணா ரவியை வில்லனாக நினைக்க வைப்பது திரைக்கதை யுக்தி. ஸ்ரீகவுரி பிரியாவின் தோழிகளாக வருபவர்கள் மது, புகை என்று ரொம்ப மாடர்னாக துணிச்சலுடன் நடித்துள்ளனர்.காதல் கதைக்கு தேவையான லைட்டிங்குடன், கடற்கரை விடுதியின் தன்மையை மாற்றாமல் ஒளிப்பதிவு செய்து, கதை நகர ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா பேருதவி செய்துள்ளது. ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். அவரது பின்னணி இசை, படத்துக்கு மிகப்பெரிய தூண். இந்த லவ்வரை அனைவருக்கும் பிடிக்கும்.

The post லவ்வர் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: