கும்பாரி: விமர்சனம்

கேபிள் டி.வி ஆபரேட்டர் விஜய் விஷ்வாவும், மீன்பிடி தொழில் செய்யும் நலீப் ஜியாவும் நெருங்கிய நண்பர்கள். பெற்றோர்கள் இல்லாத அவர்கள், ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஒருநாள் மஹானா சஞ்சீவியை ரவுடிகள் துரத்திக்கொ ண்டு ஓடுவதைப் பார்த்த விஜய் விஷ்வா, ரவுடிகளை அடித்து துவம்சம் செய்கிறார். ஆனால், அது மஹானா சஞ்சீவி நடத்தும் யூடியூப் சேனலுக்காகப் படமாக்கப்படும் ஃபிராங் வீடியோ என்ற விஷயம் தெரிந்ததும், மஹானா சஞ்சீவியின் கன்னத்தில் விஜய் விஷ்வா பளாரென்று அறைகிறார். அந்த ஃபிராங் வீடியோ வைரலாகிறது.

விஜய் விஷ்வாவின் துணிச்சலும், நல்ல குணமும் மஹானா சஞ்சீவியின் மனதில் காதலை விதைக்கிறது. பிறகு அவர்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய முற்படும்போது, பெண்ணுக்கு திருமண வயது 21 ஆக வேண்டும் என்று சொல்லி, மஹானா சஞ்சீவியை இன்னும் 7 நாட்கள் காத்திருக்கச் சொல்கின்றனர். தன்னை உயிராக மதிக்கும் பாசக்கார அண்ணன் ஜான் விஜய்யை ஏமாற்றி வீட்டை விட்டு வெளியேறும் மஹானா சஞ்சீவி, இறுதியில் விஜய் விஷ்வாவைக் கரம்பிடித்தாரா? ஜான் விஜய்யின் சதி திட்டம் காதலர்களைப் பிரித்ததா என்பது மீதி கதை.

நட்பு, இளம் ஜோடியின் காதல் மற்றும் அண்ணன், தங்கை பாசத்துடன் படம் உருவாகியுள்ளது. ஜான் விஜய்க்கு தங்கை மீது பாசம் என்பது ஓவராக இருக்கிறது. விஜய் விஷ்வா, அவரது நண்பர் நலீப் ஜியா தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர். நடிகை கவுசல்யாவின் சாயலில் இருக்கும் மஹானா சஞ்சீவி, விஜய் விஷ்வாவுடன் காதல் காட்சிகளில் முத்தம் கொடுத்து புகுந்து விளையாடி இருக்கிறார். காதலர்களை சேர்த்து வைக்கும் மதுமிதா, ஆங்காங்கே காமெடி செய்திருக்கிறார். ‘பருத்திவீரன்’ சரவணனை வீணடித்துவிட்டனர்.

ஜான் விஜய்யின் அல்லக்கை சாம்ஸ், சந்திரபாபு ஸ்டைலில் நடித்து சிரிக்க வைக்கிறார். ஒல்லியான குடிகாரன் ராயன் கிச்சுகிச்சு மூட்டுகிறார். பிரசாத் ஆறுமுகத்தின் கேமரா, கன்னியாகுமரியின் பசுமை மற்றும் அருவி, ஆறு, கடல், சர்ச் ஆகியவற்றை அட்டகாசமாகப் பதிவு செய்துள்ளது. ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி ஆகியோரின் இசையில், குமரி மாவட்ட வட்டார வழக்குகளை வரிகளாக்கி ஒலிக்கவிட்டுள்ள ‘அவியே இவியே எல்லாரும் நில்லுங்க’ பாடல் கவனிக்க வைக்கிறது. ‘கும்பாரி’ என்றால் நண்பன். வழக்கமான நட்பு, பாசம், காதல் கதைகளில் இதுவும் ஒன்று. கெவின் ஜோசப் இயக்கியுள்ளார்.

The post கும்பாரி: விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: