மூத்தகுடி விமர்சனம்

குடிப்பழக்கத்தால் குடும்பத்தலைவர் இறந்ததால், இனி ஊருக்குள் யாரும் குடிக்கக்கூடாது, மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்ற கட்டுப்பாடுடன் ஊரைப் பாதுகாக்கிறார், மூத்தகுடியின் பெரிய தலைவி மூக்கம்மா (கே.ஆர்.விஜயா). அதே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் வீரய்யன் (தருண்கோபி), தம்பி அய்யாதுரை (பிரகாஷ் சந்திரா) ஆகியோர், ஒரே முறைப்பெண் ஜோதியை (அன்விஷா) காதலிக்கின்றனர். ஆனால், ஜோதிக்கு அய்யாதுரை மீது மட்டுமே காதல். இதனால் மனம் வெறுக்கும் வீரய்யன், ஊருக்குள் சாராய பேக்டரி கொண்டு வர முயற்சிக்கும் வில்லன் செந்தூரபாண்டியுடன் (ராஜ்கபூர்) கூட்டணி அமைக்கிறார். சாராய பேக்டரி திறந்து, மூத்தகுடியின் பெருமையைக் குலைக்க முயற்சிக்கிறார். அது நடந்ததா என்பது மீதி கதை.

‘மதுப்பழக்கத்தை அரசால் மட்டும் ஒழிக்க முடியாது. ஒவ்வொரு ஊரும் சுயக்கட்டுப்பாடு கொண்டு வந்து ஒழிக்க வேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்தி படத்தை இயக்கியுள்ளார், ரவி பார்கவன். கருத்து சரியானதாக இருந்தாலும், திரையில் சொன்னவிதம் நாடகத்தன்மையுடன் இருக்கிறது. தருண்கோபி ஓவர் ஆக்டிங் செய்துள்ளார். பிரகாஷ் சந்திரா கேரக்டரை உணர்ந்து இயல்பாக நடித்துள்ளார். அன்விஷா கிராமத்து அழகான பெண்ணாக வந்து செல்கிறார். கே.ஆர்.விஜயாவுக்கு அதிக வேலை இல்லை. யார் கண்ணன் சொன்னதைச் செய்திருக்கிறார். ஆர்.சுந்தர்ராஜனும், சிங்கம்புலியும் காமெடி என்ற பெயரில் அலப்பறை செய்கின்றனர். கந்தா ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவு பளிச். ஜே.ஆர்.முருகானந்தத்தின் இசை அதிக கவனம் பெறவில்லை.

வில்லன் ராஜ்கபூர், மூத்தகுடியில் மதுக்கடை திறக்க நினைக்கிறாரா? மது பேக்டரி கொண்டு வர முயற்சிக்கிறாரா என்பதில் குழப்பம். இரண்டையும் தனி நபரால் கொண்டு வர முடியாது என்பது யதார்த்தம். கிளைமாக்சில் நடக்கும் சம்பவங்களில் லாஜிக் இல்லை. நல்ல கருத்தைப் படமாக்கியவர்கள், அதை இன்னும் நல்லவிதமாக உருவாக்கி இருக்கலாம்.

 

The post மூத்தகுடி விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: