பிறந்ததில் இருந்து கஷ்டத்தையே சந்தித்து வருகிறேன். பெற்றோருக்கும் உடன்பிறந்தோருக்கும் என்னால் முடிந்த உதவியைச் செய்து வந்தேன்.45வது வயதில் திருமணம் என்ற பெயரில் ஒரு கயவனிடம் என் வாழ்க்கை ஒப்படைக்கப்பட்டது.3 மாதங்களில் பிரிந்து வந்த என்னை என் ஊதியத்தில் உயிர் வாழ்ந்த சொந்தங்கள் உதாசீனப்படுத்துகிறார்கள்.என் மனநிம்மதிக்கு உரியபரிகாரம் சொல்லுங்கள். வசந்தா, தாராபுரம்.
பூரட்டாதிநட்சத்திரம், கும்பராசி, சிம்மலக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது கேது தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் நீங்கள் சுற்றியுள்ள எல்லோரும் நம் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறுதான் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு.செய்த உதவிகளைச் சொல்லிக்காட்டுவது அதைவிட தவறு. அது நீங்கள் செய்த உதவியை நீங்களே கொச்சைப்படுத்துவது போல் ஆகிவிடும். பிறந்ததில் இருந்தே சிரமத்தை அனுபவிப்பதாக எழுதியுள்ளீர்கள்.2021ம் ஆண்டு மே மாதம் முதல் உங்கள்வாழ்வினில் சுகமான சூழலைக் காணத் துவங்குவீர்கள்.
பிறரிடம் கையேந்தும் நிலை என்பது உங்கள் வாழ்வினில் எப்போதுமே வராது. கவலைப் படாதீர்கள். வருகின்ற 27.05.2018க்கு மேல் நீங்கள்எதிர்பார்க்கின்ற இடத்தில் உங்களுக்கு உத்யோகம் கிடைத்துவிடும். நீங்கள் மீண்டும் உங்கள் சொந்தக்காலிலேயேநிற்க இயலும். கணவரை விட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தினைமறுபரிசீலனை செய்யுங்கள். அவசரப்படாது சிறிது காலம் பொறுத்திருங்கள்.செவ்வாய்க்கிழமை நாளில் பழனிமலையை கால்நடையாக கிரி பிரதட்சிணம் செய்து வழிபடுங்கள்.உங்கள் கஷ்டங்கள் காணாமல் போவதோடு மனநிம்மதியும் கிடைக்கக் காண்பீர்கள்.
சாதாரண வேலையில் இருக்கும் என் மகன் ஒரு பெண்ணை காதலிக்கிறான்.பெண்ணின் பெற்றோர் இன்னும் 2 வருடம் கழித்து பார்க்கலாம் என்கிறார்கள். பிள்ளைகள் இருவரும் விரும்புகிறார்கள்.பெண்ணின் தாய்தடுப்பதாகத் தோன்றுகிறது. இவனது திருமணம் நல்லபடியாக முடியவும், நல்ல வேலை கிடைக்கவும் உரியபரிகாரம் சொல்லுங்கள். ஒரு வாசகி, வில்லிவாக்கம்.மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மேஷலக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் உத்யோகத்தைப்பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன் மற்றும் ராகு இணைந்திருப்பது நல்லநிலையே. 22.06.2018ற்குப் பின் உத்யோக ரீதியாக உயர்வடைவதற்கான நேரம் என்பதால் உங்கள் பிள்ளையை அதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தச் சொல்லுங்கள். பெண் வீட்டார் கூறுவது போல் இன்னும் இரண்டு ஆண்டுகள் பொறுத்திருப்பது நல்லது. 22.07.2020 முதல் இவருடைய ஜாதகத்தில் திருமண யோகம் என்பது கூடி வருகிறது. அந்த நேரத்தில் திருமணத்தை நடத்தினால் போதுமானது.உங்கள் பிள்ளையின் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீடு எந்தவிதமான தோஷமும் இன்றி குருவின் பார்வையையும் பெற்றுள்ளது. ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் பத்தாம் வீட்டில் சந்திரனின் சாரம் பெற்றும், சந்திரன் ஐந்திலும் அமர்ந்திருப்பதால் அவர் மனதிற்குப் பிடித்தமான வகையில் மணமகள்அமைவார். நடந்து கொண்டிருக்கும் சந்திரதசையும் அதற்குத் துணைபுரியும். அவருடைய திருமணத்தைப்பற்றிக் கவலைப்படாமல் உத்யோக முன்னேற்றத்தில் கவனம் கொள்வது நல்லது. வெள்ளிக்கிழமை நாளில் உங்கள்ஊரில் இருக்கும் பெருமாள் கோவில் தாயார் சந்நதியில் நெய்விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்ய உங்கள் விருப்பம் நிறைவேறும்.
என் பெண் வயிற்று பேத்திகள் மூவர். மூத்தவளுக்கு 28 வயது ஆகப் போகிறது.இன்னும் திருமணம் ஆகவில்லை. மூவரும் பெண் பிள்ளைகள் என்பதால் பயமாக இருக்கிறது. எம்.எஸ்.சி.,பி.எட் படித்திருக்கும் என் பேத்தியின் வாழ்வு சிறக்க உரிய பரிகாரம் சொல்லுங்கள். லட்சுமி, பெத்தநாயக்கன்பாளையம்.உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பேத்தியின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடக்கிறது. உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் புதன் திருமணத்தைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தற்போது திருமணத்திற்கான நேரமே நடக்கிறது. நீங்கள் உங்கள் பேத்தியின் உத்யோகத்திற்காக காத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. பேத்திக்கு அரசு உத்யோகம் கிடைத்து விடும் என்ற எண்ணத்தில் அதற்கு ஏற்றார்போல் அரசு உத்யோகத்தில் உள்ள மாப்பிள்ளையாகத் தேடிக்கொண்டு இருக்காதீர்கள். உங்கள் பேத்தியின் ஜாதகப்படி அவருக்கு அந்நிய தேசத்திற்குச் செல்லும் வாய்ப்புள்ளதால் அமெரிக்கா போன்ற வெளிநாட்டில் பணிபுரியும் மாப்பிள்ளையாக இருந்தாலும் பயமின்றி பார்க்கலாம். திருமணத்திற்குப் பிறகு அவர் உத்யோகத்திற்குச் செல்லும் வாய்ப்பு உண்டு.அவரது ஜாதகப்படி திருமண ரீதியாக எந்த விதமான தோஷமும் இல்லை. உங்கள் எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொண்டு வரனைத் தேடுங்கள். திருமண யோகம் நடந்து கொண்டிருப்பதால் தேடி வரும் வரன்களுக்கு முக்கியத்துவம் அளித்துப் பாருங்கள். தற்போது நடந்து வரும் ஏழரைச் சனி அவரது திருமணத்தை எந்த விதத்திலும் தடை செய்யாது. பிரதிவாரந்தோறும் புதன்கிழமை நாளில் அருகில் உள்ள சிவன் கோவில் பிராகாரத்தை 5 முறை வலம் வந்து வணங்கச் சொல்லுங்கள். அவரது மனதிற்குப் பிடித்தமான வரன் தேடி வருவார்.
பி.காம்.இறுதி ஆண்டில் படித்து வரும் என் மகள்கடந்த எட்டு வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வருகிறாள். மருந்தை நிறுத்திவிட்டால் மீண்டும் பிரச்சினை வந்து விடுகிறது.ஆயுர்வேதம், சித்தவைத்தியம் பலன் தராததால் மீண்டும் அலோபதிக்கு மாறிவிட்டோம். அவள்பூரணமாக குணமடையவழி வகுத்துக் கொடுக்கவும். மீனாக்ஷி, டெல்லி.ரோகிணிநட்சத்திரம், ரிஷபராசி, கடகலக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள்மகளின் ஜாதகப்படி தற்போது ராகுதசையில் புதன் புக்தி நடக்கிறது. அவரது ஜாதகத்தில் ஜென்மலக்னத்திலேயே புதன் அமர்ந்துள்ளார். ராகு தசை துவங்கியகாலம் முதலாகஅவர் இந்த நோயினால் அவதிப்பட்டு வருவதாகத் தோன்றுகிறது. எனினும் தற்போது நடந்து வரும் புதன் புக்தி காலத்திற்குள்அவர் குணமடைந்து விடுவதற்கான வாய்ப்பு உண்டு. நரம்புமண்டலத்தைக் கட்டுப்படுத்தும் கோள்ஆகிய புதன், தன் சொந்த நட்சத்திரக்காலில் ஜென்மலக்னத்திலேயே அமர்ந்திருப்பதால் கவலையை விடுத்து முழு நம்பிக்கையுடன் மருந்து சாப்பிட்டு வரச் சொல்லுங்கள். தற்போது ஒரு மிகச்சிறந்தநியூராலஜி மருத்துவரை அணுகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவரது ஆலோசனைப்படி செயல்பட்டு வாருங்கள். முளைகட்டிய பச்சைப்பயிறு, கருந்துளசி சிறிதளவு ஆகியவற்றைஅடிக்கடி சாப்பிட்டு வருவது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். குடும்ப சாஸ்திரிகளின் உதவியோடு ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமைநாளில் வீட்டினில் சர்ப்பபலி சாந்தி எனும் பூஜையைச் செய்யுங்கள். ராகுவினால் உண்டாகும் தோஷம் நீங்கும். புதன்கிழமை தோறும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்து வருவது நல்லது. உங்கள் மகளிடம் தினமும் காலை, மாலை இருவேளையும் கீழ்க்கண்டஸ்லோகத்தைச் சொல்லி பெருமாளை வணங்கிவரச்சொல்லுங்கள். நோய்நீங்கி நலம் பெறுவார்.
“ஸ்ராகாரஸஹிதம் மந்த்ரம் வததாம் சத்ரு நிக்ரஹம்ஸர்வரோகப்ரசமநம் ப்ரபத்யே அஹம் ஜநார்த்தனம்.”+2வில் நல்லமதிப்பெண் எடுத்த என் மகள் நீட் தேர்விலும் வெற்றி பெற்றாள். ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. தனியாரில் கிடைத்தும் பணம் இல்லாததால் அவளை பொறியியலில் சேர்த்துவிட்டேன்.உறவினர் சிலர் மறுபடியும் நீட் தேர்வு எழுதச் சொல்கிறார்கள். குழப்பத்துடன் இருக்கும் எனக்கு நல்லபதில் கூறுங்கள். கார்த்திகைச்செல்வி, திருச்சி.ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, தனுசுலக்னத்தில் பிறந்துள்ள உங்கள்மகளின் ஜாதகத்தில் தற்போது ராகுதசையில் ராகு புக்தி நடக்கிறது. அவருடைய ஜாதகத்தில் ராகு எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தற்போதையசூழலில் எந்த ஒரு விஷயத்திலும் அத்தனைஎளிதாக வெற்றி பெறஇயலாது. மேலும் அவருடைய ஜாதகத்தில் குரு, சுக்கிரன், சனிஆகிய முக்கியமான மூன்று கிரஹங்கள்வக்ரகதியில் சஞ்சரிக்கின்றன.மீண்டும் ஒரு முறை நீட் தேர்வு எழுதும் மனநிலையில் உங்கள்மகள் இல்லை. அவரை வற்புறுத்தாதீர்கள். பொறியியல் படிப்பதால் உத்யோகம் கிடைக்குமா என்றுஅவர் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவரது ஜாதகத்தில் உத்யோகத்தைப்பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் உச்சபலம் பெற்ற புதனுடன், சந்திரன் இணைந்திருப்பது நல்லநிலையே. பி.ஈ., முடித்த கையோடு எம்.பி.ஏ., போன்ற மேற்படிப்புகளைப்படிக்கும் வாய்ப்பு நன்றாக உள்ளது. அதோடு உயர்ந்த உத்யோகமும் கிடைத்துவிடும். எதிர்காலம் பற்றியோ, உத்யோகத்தினைப்பற்றியோ உங்கள்மகள்கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அந்நிய தேசம் சென்றுபணியாற்றும் வாய்ப்பும் அவருடைய ஜாதகத்தில் நன்றாக உள்ளது.ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் ராகு கால வேளையில் சமயபுரம் சென்றுஅம்மனை மனமுருகி தாயும் மகளும் வழிபடுங்கள். சமயபுரத்தாளின் கருணைப் பார்வை பட்டாலே மனதில் உள்ள குழப்பம் நீங்கி தெளிவடைவீர்கள்.
எங்களுடைய பெண் குழந்தை பிறந்து 2 வருடம் நன்றாக இருந்தாள். திடீரென்று ஒரு நாள்காய்ச்சல் வந்து இழுப்பு வந்தது. அதிலிருந்து மூளை செயல்படவில்லை. எவ்வளவோ செலவு செய்தும் குழந்தை சுயநினைவு இல்லாமல் உள்ளாள். உடல்வளர்ச்சி நன்றாகஉள்ளது.குழந்தை நலம் பெற ஒரு நல்லபரிகாரம் சொல்லுங்கள். கிரிஜா ஹரிகிருஷ்ணன், குடியாத்தம்.பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள்மகளின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி செவ்வாயுடன், சுக்கிரன், சனி ஆகியோர் இணைந்து ஆறாம் பாவத்தில் அமர்ந்திருப்பது பிரச்னையைத் தோற்றுவித்திருக்கிறது. ஒன்பதாம் இடத்து ராகு பரம்பரையில் உள்ள குறையையும் காட்டுகிறது. உங்கள் பரம்பரையில் இதற்கு முன்பு உண்டான பிரச்னைகளை வயதில் மூத்த உறவினர்கள் மூலமாக அறிந்து கொண்டு அதனை சரி செய்யப் பாருங்கள். குலதெய்வம் கோயிலுக்கு குழந்தையை அழைத்துச் சென்று சந்நதியில் குழந்தையை கிடத்தி வேண்டிக் கொள்ளுங்கள். குலதெய்வத்தின் சந்நதியில் பெற்றோராகிய நீங்கள் ஈர உடையுடன் அங்கப் பிரதட்சிணம் செய்வதும் நல்லது. சீர்காழிக்கு அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்கு குழந்தையை அழைத்துச் சென்று உப்பு மிளகு காணிக்கை செலுத்தி முத்துக்குமார ஸ்வாமியை வழிபடுங்கள். தினமும் மாலையில் குழந்தையின் காதுகளில் கந்தசஷ்டி கவசம் ஒலிக்கின்ற வகையில் அதற்குரிய ஏற்பாட்டினைச் செய்யுங்கள். இறைச் சக்தியால் மட்டுமே உங்கள் பிள்ளையை நல்லபடியாக வாழவைக்க இயலும் என்ற முழுநம்பிக்கையுடன் செயல்படுங்கள். குழந்தை விரைவில் நலம் பெற வாழ்த்துகள்.
வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மாவாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.