கந்தனின் அருளிருக்க கவலை எதற்கு?

ஐந்து வருடங்களாக பதட்டம்,  பயம், நிம்மதியின்மை, தூக்கமின்மை ஆகியவற்றால் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் வயது 73. எனது கடமைகளில் பலவற்றை செய்ய முடியவில்லை. சொத்துக்களை என்னால் பராமரிக்க இயலவில்லை. எனது  இறுதிக்காலம் எவ்வாறு அமையும்?- சேஷப்பிள்ளை, விழுப்புரம் மாவட்டம்.

‘பரணியில் பிறந்தார் தரணி ஆள்வார்’ என்ற கூற்றுக்கு ஏற்ப தரணி ஆளும் திறனைக் கொண்டிருக்கும் நீங்கள் எதைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. பரணி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி செவ்வாய், கிரஹங்களின் தலைவனான சூரியனுடன் இணைந்து ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருப்பது உங்கள் பலத்தினைக் கூட்டுகிறது. தற்போது உங்கள் ஜாதகத்தில் சனி தசையில் சனி புக்தி நடந்து வருகிறது.

தசாநாதன் சனி பகவான் வக்கிரம் பெற்று எட்டாம் வீட்டில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் உங்கள் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. நாம் செய்கின்ற காரியம் தவறாகப் போய்விடுமோ என்ற எண்ணமும், நமக்கு யாரும் துணையாக இருக்கமாட்டார்கள் என்கிற அவநம்பிக்கையும் உங்களை வாட்டிக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு இக்கட்டான சூழலிலும் உங்களுடைய ராசிக்கும், லக்னத்திற்கும் அதிபதியான செவ்வாய் உங்களைக் காப்பாற்றுவார்.

நீங்கள் செய்கின்ற செயல் தோல்வியில் முடிந்தால்தான் என்ன? இந்த வயதில் நீங்கள் யாருக்கு பதில் சொல்ல வேண்டும்? யாரையும் சார்ந்து நீங்கள் இல்லை எனும்போது யாரைக் கண்டு பயப்பட வேண்டும்? நானே ராஜா, நானே மந்திரி என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். நவகிரஹங்களில் செவ்வாயின் பலத்தினைப் பெற்றிருக்கும் நீங்கள் செவ்வாய்க்கு உரிய தேவதையான முருகப்பெருமானின் பரிபூரண அருளினைப் பெற்றிருக்கிறீர்கள். மனதில் பயமும், அதனால் பதட்டமும் உண்டாகும் போது ‘முருகா, முருகா’ என்று உச்சரியுங்கள். ‘காக்க காக்க கனகவேல் காக்க’ என்ற வரியை மனதாற சொல்லுங்கள்.

பயமும், பதட்டமும் காணாமல் போகும். சம்பந்திகள் உட்பட உறவினர்கள் யாருக்கும் நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் ஜாதகப்படி உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை சிறப்பானதாகவே அமையும். அவர்களைப் பற்றி நீங்கள் அநாவசியமாகக் கவலைப்பட வேண்டியதும் இல்லை. தவறாமல் மாதந்தோறும் கிருத்திகை நாளில் சங்கராபுரத்தை அடுத்த ராவுத்தநல்லூர் சக்திமலைக்குச் சென்று அங்கே அருள்பாலிக்கும் சுப்ரமணிய ஸ்வாமியின் கண்களை நேருக்கு நேராக தரிசியுங்கள். முருகப்பெருமானின் கண்களில் இருந்து வெளிப்படும் சக்தி உங்களுக்குள் ஊடுருவுவதை அனுபவபூர்வமாக உணர்வீர்கள். இறுதிக்காலத்தினை எந்தவிதமான பதட்டமும், பயமுமின்றி நிம்மதியாகக் கழிப்பீர்கள். கந்தனின் அருள் கூடவே இருக்கும்போது கவலை எதற்கு? அந்திமக்காலம் வரை நலமுடன் வாழ்வீர்கள்.

என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்குமா? படிப்பு முடித்து மூன்று வருடங்கள் ஆகியும் நிலையான வேலை அமையவில்லை. அவனை வெளிநாடு அனுப்ப தயார் செய்தும் ஒவ்வொரு முறையும் தள்ளிப் போகிறது. அவனது வேலைவாய்ப்பு மற்றும் திருமணம் குறித்து சொல்லுங்கள். - செல்வி, பட்டுக்கோட்டை.

ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் உத்யோக ஸ்தானம் வலிமையாகவே உள்ளது. தற்போது அவருடைய ஜாதகக் கணக்கின்படி சுக்கிர தசையில் ராகு புக்தி நடக்கிறது. ராகு, சுக்கிரன் இருவரும் ஒன்பதாம் இடத்தில் இணைந்திருப்பதால் அந்நிய தேசப் பிரயாணம் சாத்தியமே. அவருடைய ஜாதகத்தில் உத்யோக ஸ்தானத்திற்கு அதிபதி குரு ஏழாம் வீட்டில் அமர்ந்திருப்பதும், உத்யோக ஸ்தானம் செவ்வாயின் பார்வையைப் பெற்றிருப்பதும் பலமான நிலையே.

இவருக்கு முன்னதாக வெளிநாடு சென்று வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர் ஒருவர் மூலமாக இவர் தனக்கான வாய்ப்பினைப் பெறுவார். மேற்கத்திய நாடுகளை விடுத்து சிங்கப்பூர், மலேசியா போன்ற கிழக்கத்திய நாடுகளில் வேலைக்கு முயற்சிக்கச் சொல்லுங்கள். அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்களை அடையாளம் கண்டு அவர்கள் மூலமாக முயற்சிக்கச் சொல்லுங்கள்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் இவருடைய ஜாதகத்தில் எந்த தோஷமும் இல்லை. 29வது வயதில் இவருடைய திருமணம் நல்லபடியாக நடந்தேறும். திருமணத்திற்குப் பின் உத்யோகம் மேலும் உயர்வடையும். வெள்ளிக்கிழமைதோறும் ராகுகாலத்தில், அருகில் உள்ள அம்மன் கோயிலில் விளக்கேற்றி வைத்து ராகுகால பூஜையில் கலந்துகொண்டு மனதாற வேண்டிக்கொள்ளுங்கள். சுகமான எதிர்காலம் அவருக்காகக் காத்திருக்கிறது.

என் தம்பிக்கு அடிக்கடி உடம்பிற்கு சுகமில்லாமல் போகிறது. நெஞ்சுவலி வேறு இருக்கிறது. தம்பியின் ஜாதகம் எப்படி உள்ளது? ஒரு நல்ல வழி சொல்லவும். அவன் எதிர்காலம் எப்படி இருக்கிறது? - ஜெயந்தி, பெங்களூரு.

 47 வயதாகும் உங்கள் தம்பியின் ஜாதகத்தை ஆராய்ந்ததில் அவருடைய உடல்நிலையில் நீங்கள் அதிக கவனம் கொள்ள வேண்டியதன் அவசியம் புரிகிறது. பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி புதன் எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி புதனோடு ஆயுள்காரகன் சனியும், சுகாதிபதி சுக்கிரனும் இணைந்துள்ளனர்.

எட்டாம் வீடு என்பது ஆயுள் ஸ்தானத்தைக் குறிக்கும். தற்போது நடந்து வரும் கேது தசை முடிந்து சுக்கிர தசை துவங்கும்போது, அதாவது அவருடைய 52வது வயது துவங்கும்போது நீங்கள் அவருடைய உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஐந்தாம் வீட்டில் இணைந்திருக்கும் செவ்வாயும், ராகுவும் அதிகமாக உணர்ச்சிவசப்படக் கூடிய தன்மையைத் தருவார்கள்.

டென்ஷனைக் குறைத்துக் கொண்டாலே உடல் ஆரோக்யம் மேம்படும். ரத்த அழுத்தப் பரிசோதனையை அவ்வப்போது செய்துகொண்டு உடல்நிலையை பராமரிக்க வேண்டியது அவசியம். முடிந்தால் வீட்டுப் புரோஹிதரின் ஆலோசனையின் பேரில் ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்துகொள்ளச் சொல்லுங்கள். தினசரி காலை, மாலை இரு வேளையும் வீட்டுப் பூஜையறையில் கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி பரமேஸ்வரனை வணங்கி வாருங்கள், நன்மை உண்டாகும்.

“ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே

அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ”

எனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. கல்யாணம் ஆகி 12 வருடம் ஆகிவிட்டது. ஆறாம் வகுப்பு படிக்கும் பெண் இருக்கிறாள். என் தாயாரை நான் வைத்துக் காப்பாற்றுவேனா? என் அக்காவிற்கு இரண்டு கால்கள் ஊனம். இவருக்கு என்னால் உதவி செய்ய முடியுமா? எதிர்காலம் எப்படி இருக்கும்? - வாசுதேவன், ஈரோடு.

நாற்பத்தைந்து வயதாகியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளீர்கள். நினைத்த வேலை கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த வேலையைச் செய்ய வேண்டாமா? உங்கள் ஜாதகத்தில் தொழிலைப் பற்றிச் சொல்லும் ஜீவன ஸ்தானம் வலிமையாகத்தான் உள்ளது.

அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் 10ம் வீட்டில் சூரியன், புதன், குரு ஆகிய கிரஹங்கள் இணைந்துள்ளன. அரசு உத்யோகத்தை எதிர்பார்த்து அநாவசியமாக காலத்தை கடத்தியுள்ளீர்கள். வலிமையான ஜீவன ஸ்தான அமைப்பினைக் கொண்டிருக்கும் நீங்கள் ஏதேனும் ஒரு சுயதொழிலை செய்ய முடியும். தாயாரை வைத்துக் காப்பாற்ற வேண்டும், மாற்றுத் திறனாளியான தமக்கைக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதுமா?

அதற்கான முயற்சியில் இறங்க வேண்டாமா? தற்போதைய சூழலில் உங்கள் ஜாதகக் கணக்கின்படி சுக்கிர தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. உங்கள் தந்தையார் என்ன உத்யோகத்தைச் செய்தாரோ அல்லது உங்கள் பரம்பரையில் என்ன தொழில் தொடர்ந்து வருகிறதோ, அதனை எடுத்துக் கொள்ளுங்கள். அத்தொழிலையே நீங்கள் இன்னும் விரிவாகச் செய்ய இயலும். அடுத்தவருக்குக் கீழே கைகட்டி பணி செய்ய வேண்டிய நிலையினை மறந்து சொந்தமாக தொழில் செய்ய முயற்சியுங்கள். உங்களுக்கு முன்னால் பலபேர் கைகட்டி வேலை செய்யத் தயாராக இருப்பார்கள். ஏழரை சனி நடக்கிறது, 12ல் குரு இருக்கிறது என்று எப்போதும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, நல்ல வாய்ப்புகளைத் தட்டிக் கழிப்பதில் அர்த்தம் இல்லை.

 நீங்கள் உழைக்கத் தயாராக இருந்தால் உங்களுக்கு உதவி செய்ய கிரஹங்களும் தயாராக உள்ளன. ஜீவன ஸ்தானாதிபதி சனி வக்ர கதியில் அமர்ந்திருந்தாலும் தன ஸ்தானத்தில் உள்ளார். உங்கள் பேச்சுத் திறமையின் மூலம் நீங்கள் வெற்றிபெற இயலும். நேரம் வரும் என்று காத்திருக்காமல் இன்றே முயற்சியில் இறங்குங்கள். சுப்ரமணிய ஸ்வாமியை வழிபட்டு உங்கள் பணியைத் துவக்குங்கள். வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.

உயர்ந்த நிலையில் இருந்த என் தகப்பனார் எங்களுடைய சிறு வயதிலேயே சொத்துகளையும், பொருள்களையும் அழித்துவிட்டார். சாப்பாட்டிற்கே வழியில்லாமல் அடுத்தவரை எதிர்பார்த்து பலபேரிடம் ஏச்சும், பேச்சும் வாங்கி, செய்யக்கூடாத செயல்களை செய்து அன்றாடம் சாப்பிட்டோம். பத்தாம் வகுப்பு படிக்கும் என் மகள் நல்ல நிலையை அடைவாரா? என் குடும்பத்தார்க்கு என்னால் என்ன பயன்? - சிவபாலன், மதுரை மாவட்டம்.

செய்த தவறை நினைத்து வருந்தினாலே இறைவன் அதனை மன்னித்து விடுவார். உண்மையான பக்தி இருந்தால் கள்வர்களுக்கும் பெருமாள் அருள் செய்வார். என்பதனை கள்ளழகரின் கதைகள் மூலமாக அறிந்திருப்பீர்கள். நீங்கள் அறிந்தும், அறியாமலும் செய்யக்கூடாத செயல்களை வேறுவழியின்றி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதுவும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டி என்று எழுதியிருக்கிறீர்கள். அவை எல்லாவற்றிற்கும் இந்த ஜென்மத்திலேயே நீங்கள் பிராயச்சித்தம் செய்ய இயலும். மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தை ஆராயும்போது ஜென்ம லக்னத்திலேயே சூரியன், புதனின் இணைவும், இரண்டாம் வீட்டில் உச்ச பலம் பெற்ற குருவும் வலிமையாக அமர்ந்திருக்கிறார்கள்.

புத்திசாதுர்யமும், வாக்குவன்மையும் கொண்டிருக்கும் நீங்கள் அதனை சரியான வழியில் பயன்படுத்துங்கள். அரசியல்வாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். அரசியலுக்காக நீங்கள் அதிகம் செலவழிக்காமல் உங்களுடைய பேச்சுத்திறமையை நம்பி செயல்படுங்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி அரசியல் தலைவர்களின் ஆதரவு உங்களுக்கு எளிதாகக் கிடைக்கும். அதனைக் கொண்டு பொதுமக்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வாருங்கள். நான்கு பேரின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை வாழவைக்கும். உங்களுடைய ஜாதகக் கணக்கின்படி தற்போது சனி தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது.

சனி பகவான் உங்கள் ஜாதகத்தில் தொழிற் ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். இந்த நேரத்தில் உங்களுடைய சம்பாத்தியத்தை பெருக்கிக் கொள்ள இயலும். நன்றாக சம்பாதிக்கும் பொழுது குலதெய்வத்திற்கு ஒன்றுக்கு பத்தாக பொருட்களை வாங்கித் தாருங்கள். அடிப்படையில் உங்களுடைய ஜாதகம் கடனில் மூழ்கித் தத்தளிக்கக் கூடிய சூழலில் இல்லை. அஷ்டமத்துச் சனி என்ற சிரமமான சூழல் தற்போது நிலவினாலும், புத்திகூர்மை மிக்க உங்களால் எந்த ஒரு கஷ்டத்தையும் லாவகமாக சமாளிக்க இயலும்.

பத்தாம் வகுப்பு படிக்கும் உங்கள் பெண்ணிற்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தர வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. செய்த தவறுகளை நினைத்து வருந்திக் கொண்டே காலத்தைக் கழிப்பதைவிட அதற்கான பிராயச்சித்தம் என்ன என்பதையும், இனி செய்ய வேண்டியது என்ன என்பதையும் உணர்ந்து செயல்படுங்கள். 50 வயதைக் கடந்த நிலையில் என்னால் என்ன செய்ய இயலும் என்று எண்ணாமல், சுறுசுறுப்புடன் செயல்படுங்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி 74 வயது வரை உங்களால் நன்றாக சம்பாதிக்க இயலும். உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான நேரம் துவங்கி உள்ளது.

 நேரத்தினைப் பயன்படுத்திக் கொண்டு செயல்படுங்கள். உங்களுடைய புத்திகூர்மையும், சொல்வன்மையும் மற்றவர்களை எந்த பாதிப்பும் ஏற்படுத்திவிடாதபடி இருக்கட்டும். தெய்வத்தை நம்பி செயலில் இறங்குங்கள். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை நாளன்றும், திருப்பரங்குன்றம் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். சனிக்கிழமை தோறும் ஆதரவற்ற மாற்றுத் திறனாளி ஒருவருக்கு அன்னதானம் செய்து வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகளில் ஏறத் துவங்கிவிட்டீர்கள். வளமான எதிர்காலத்தை நிச்சயம் காண்பீர்கள்.

எனக்கு ஜாதகம் எழுதி வைக்கவில்லை. இப்போது என் வயது 69. பிறந்த தேதி, நேரம் குறிப்பிட்டுள்ளேன். என்னுடைய நட்சத்திரம், ராசி, லக்னம் ஆகியவற்றோடு நான் வணங்க வேண்டிய தெய்வம், அதிர்ஷ்டக்கல், நிறம், அதிர்ஷ்டமான நாள் ஆகியவற்றைத் தெரியப்படுத்துங்கள். - ராஜேந்திரன், வீரபத்திர நகர்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதி, நேரத்தை வைத்து ஜாதகம் கணித்துப் பார்த்ததில் புனர்பூசம் நட்சத்திரம் முதல் பாதம், மிதுன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ளீர்கள் என்பது தெளிவாகிறது.  உங்களுடைய ஜாதகக் கணக்கின்படி தற்போது 02.04.2021 வரை சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. சுக்கிர தசையில் குரு புக்தி என்பது நல்ல நேரமே. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான நேரம் இது. உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள். அதிர்ஷ்டக்கல் கனக புஷ்பராகம். அதிர்ஷ்டமான நாட்கள் வியாழன், வெள்ளி, ஞாயிறு. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் ஞான தக்ஷிணாமூர்த்தி. உங்களுடைய ஜாதகம் அடிப்படையில் நல்ல ஜாதகமே. ஆயுள் உள்ளவரை எந்த சிரமும் இன்றி வாழ்வீர்கள்.

சுபஸ்ரீ சங்கரன்

Related Stories: