ஜப்பான் – திரைவிமர்சனம்

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இமானுவேல், ஜித்தன் ரமேஷ், கே எஸ் ரவிக்குமார், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர் , உள்ளிட்ட கலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் கார்த்தியின் 25வது திரைப்படம் ஜப்பான்.

பிரபல நகை கடையின் வளாகத்தில் ஓட்டை போட்டு உள்ளே இருக்கும் நகைகள் , பணம் என அத்தனையும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இதை யார் செய்திருப்பார் என்னும் விசாரணையும் தேடலும் சாட்சிகளும் மொத்த தென்னிந்தியாவும் தேடிக் கொண்டிருக்கும் ஜப்பானை( கார்த்தி) அடையாளம் காட்டுகிறது. ஆனால் விசாரணையின் ஒரு பகுதியாக மற்ற திருட்டுகளை செய்தது நான் தான் ஆனால் இந்தத் திருட்டை என் அடையாளத்தை பயன்படுத்தி யாரோ செய்திருக்கிறார் என்பது ஜப்பானின் வாதமாக இருக்கிறது. எனில் உண்மையான திருடர் யார் இதில் ஏன் ஜப்பான் சிக்க வைக்கப்பட்டார் முடிவு என்ன என்பது மீதி கதை.

தனது 25வது படம் என்பதால் தன்னுடைய கேரக்டரிலும், தோற்றத்திலும் முடி முதல் வசன உச்சரிப்பு வரை எப்படி எல்லாம் மாற்றிக் காட்ட முடியுமோ காட்டுவதற்கு முயற்சி செய்திருக்கிறார் கார்த்தி. ஆனால் ஒரு இருபத்தி ஐந்தாவது படம் கொடுக்கும் நாயகனுக்கு இது மட்டும் போதுமா என்னும் கேள்வி நமக்கு எழுகிறது.

படத்தின் கதை பொருத்தமட்டில் கதை என்றே ஒன்று இல்லாமல் தான் படப்பிடிப்பிற்கு சென்றது போல் தெரிகிறது. அல்லது இடையில் ஏதேனும் குழப்பங்கள் நேர்ந்ததா என்று தெரியவில்லை. படம் முழுக்க திருட்டுதான் மைய புள்ளி என் கையில் நம்மை சுவாரசியமாக்கி உட்கார வைக்கும் ஒரு திருட்டு சம்பவமும் படத்தில் கிடையாது. அங்கேயே படம் பாதி உயிரை இழந்து விட்டது. இதற்கிடையில் தேவையில்லாமல் இன்னொரு உணர்வுபூர்வமான கதை சொல்கிறேன் பேர் வழியாக இரண்டாவது கதை டிராக், இதற்கிடையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் கார்த்தி. ஹீரோயின் அனு இம்மானுவேல், கால்ஷீட் வாங்கி தேர்வு செய்து விட்டோமே என்பதற்காகவே ரொமான்ஸ் காட்சிகளும், பாடல் காட்சிகளிலும் திணிக்கப்பட்டு கதைக்களம் இன்னும் நம்மை சலிப்படையச் செய்கிறது.

படம் நடுகவே அம்மாவின் கதை பற்றி அங்கும் இங்குமாக சொல்லிக் கொண்டிருக்கும் கார்த்திக்கு படத்தின் இறுதியில் முழு அம்மாவின் கதையையும் சொல்லும் பொறுப்பு கொடுக்கப்பட இதற்கு தான் இவ்வளவு பில்டப்பா என்பது போல் படம் முடிகிறது. தென்னிந்திய அளவில் தேடப்படும் ஒரு திருடன் என்றால் படம் எந்த அளவிற்கு வேகமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்திருக்க வேண்டும். அதை இயக்குனர் ராஜமுருகன் கொடுக்கத் தவறி இருக்கிறார். குறைந்தபட்சம் 25 வது படம் செய்யும் நாயகனுக்கான கமர்சியல் கலகலப்பாவது இருந்திருக்க வேண்டும். இதில் உண்மையில் கார்த்தி என்ன செய்கிறார் என்பது அவருக்கே தெரியவில்லை. ஆனால் அவர் மிகப்பெரிய கொள்ளையனாகவும் அதனால் ஊரே திரும்பிப் பார்க்கும் பணக்காரனாக மாறியதாகவும் காட்டப்படுகிறது.

இதில் நான்கு மாநிலங்கள் தேடும் திருடன் தேமே என்று அங்கும் இங்கும் சுற்றித் திரிவதை எப்படி காவல்துறை மட்டும் கண்டு கொள்ளவில்லை என்பது தான் புரியவில்லை.
அனு இம்மானுவேல்… என்ன சொல்வது பாவம் என்று மட்டும் தான் சொல்ல வேண்டும் கால் சீட் கொடுத்து விட்டேன் என இரண்டு காட்சிகளும் அதில் ஒரு கிளாமர் நடனம் ஆகவும் அவரது காட்சிகள் கடந்து சென்று விடுகின்றன. கடையில் ஓட்டை போட்டு திருடும் கான்செப்ட்டை கொண்டு ஏற்கனவே ராஜதந்திரம் என்னும் மிகப்பெரிய வெற்றி தமிழ் சினிமாவில் இருப்பதும் இந்த படத்திற்கு இன்னொரு மைனஸ்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு அருமை என்றாலும் கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயமாக மாயமாய் மறைந்து நிற்கிறது. ஒன்றுக்கு இரண்டு முறை திரும்பத் திரும்ப இது ஜிவி பிரகாஷ் குமார் இசையா என்னும் சந்தேகம் எழும் அளவிற்கு இந்த படத்தில் இசையும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.

மொத்தத்தில் ஜப்பான் கார்த்தியின் 25வது படமாக இருக்கும் தருவாயில் கதையை இன்னும் ஆழமாக கேட்டு அறிந்து நடித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

The post ஜப்பான் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: