சென்னை: ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை காட்டுக்குள் வீசுவதால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க மாற்றுத் திட்டத்தை வரும் 25ம் தேதிக்குள் தயாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் மலைப் பகுதிகளில் மதுக்கடைகளை மூட ஆணை பிறப்பிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது.காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் யோசனையை டாஸ்மாக்கிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தெரிவித்ததே நீலகிரி மாவட்ட நிர்வாகம்தான். ஆனால், அந்தத் திட்டம் நடைமுறைக்கு ஏற்றது அல்ல என்று அதே மாவட்ட நிர்வாகம் இப்போது தெரிவித்துள்ளது. இத்திட்டம் தொடர்பான உயர் நீதிமன்ற வினாவுக்கும் பதில் அளிக்கும் போது இந்த விஷயங்களை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.காட்டுப் பகுதிகளில் காலி பாட்டில்கள் வீசப்படுவதை தடுப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் பயனளிக்காது என்ற சூழலில், அந்த பகுதிகளில் மதுக்கடைகளை மூடுவதுதான் சரியான தீர்வாக இருக்கும். அதனால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படப்போவதில்லை. அதனால், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளிலும், சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதிகளிலும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, அப்பகுதிகளுக்கு வெளியிலிருந்து மது பாட்டில்கள் கொண்டு செல்லப்படுவதையும் தமிழக அரசு தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….
The post மாற்று திட்டங்கள் பயனளிக்காது மலைகளில் மதுக்கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.