காஞ்சிபுரத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி: பேரவையில் எம்எல்ஏ ஏழிலரசன் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பக்தர்கள் தங்கும் விடுதியை அரசு ஏற்படுத்துமா என சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது, காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் பேசியதாவது:பல்வேறு கோயில்க ளைப் பற்றி இந்த மன்றத்தில் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில்,  காஞ்சிபுரம்தான் ஒட்டு மொத்த கோயில்களின் நகரமாக இருக்கிறது. 1000க்கும் மேற்பட்ட கோயில்களை கொண்ட காஞ்சி மாநகரத்தில், வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாட் டவர்கள் எல்லாம் வந்து செல்கிறார்கள். அவர்கள் தங்குவதற்கு ஏதுவாக, தங்கும் விடுதி அங்கே அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.அதன்படி, கட்டப்பட்டு இருக்கும் யாத்திரி நிவாஸ் என சொல்லக் கூடிய பயணியர் தங்கும் விடுதி, பெருமளவில் பக்தர்கள் தங்குவதற்கான வசதியை ஏற்படுத்தித் தருவதற்கும், அதனை ஒட்டியுள்ள பகுதியில் வாகனங் களை நிறுத்துவதற்கும் இடம் இருக்கிறது. அதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து பேசுகையில், பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், அந்த மாவட்ட செயலாளர், மாவட்ட அமைச் சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, நானும் துறை செயலாளர், ஆணையாளர் ஆகியோருடன் அந்த கட்டிடத்தில் முழுமையாக ஆய்வு செய்தோம். அங்கு கட்டுமான ஒப்பந்தத்துக்கு தேவையான அனைத்து நிதியையும் ஏற்கனவே வழங்கி விட்டார்கள். ஆனால், கழிவுநீர், குடிநீர் இணைப்பு வழங்கவில்லை என தெரிந்தது.இதனை, முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, இப்போது ரூ.2.20 கோடி செலவில், அங்கு பூங்காக்கள் அமைப்பது, வாகனங்களுக்கு இடவசதி ஏற்படுத்தி தரு வது என அனைத்துப் பணிகளுக்கும் திட்டமிட்டுள்ளோம்.  இந்தப் பணி முடிந்தபிறகு, அது சுற்றுலா வளர்ச்சித் துறை மூலமாக, பக்தர்கள் தங்கும் விடுதி பயன்பாட்டுக்கு கொண்டு வருவதா அல்லது இந்து சமய அற நிலையத் துறையே அதை பயன்படுத்தி கொள்வதா என முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று முடிவு எடுக்கப்படும். இந்தாண்டு இறுதிக்குள், அந்த பக்தர்கள் தங்கும் விடுதி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்பதை தெரிவித்து கொள்ளுகிறேன் என பதில் அளித்தார்….

The post காஞ்சிபுரத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி: பேரவையில் எம்எல்ஏ ஏழிலரசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: