திருவண்ணாமலை கொள்முதல் நிலையங்களில் அதிமுக நிர்வாகிகள் உடந்தையுடன் கோடிக்கணக்கில் முறைகேடு: சிபிசிஐடியிடம் சிக்கியவர் திடுக் வாக்குமூலம்; மேலும் பலர் சிக்க வாய்ப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், அதிமுக நிர்வாகிகள் உடந்தையுடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல கோடி முறைகேடு நடந்துள்ளதாக கைதான இடைத்தரகர் சிபிசிஐடி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்துவந்து, அதனை இங்குள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பெயரில் கூடுதல் விலைக்கு விற்றது கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது. மேலும், நெல் விளைச்சல குறைந்திருந்த பகுதிகளில், பல மடங்கு நெல் கொள்முதல் எப்படி நடந்தது என்ற கேள்வியும் எழுந்தது. எனவே, திமுக ஆட்சிக்கு வந்ததும் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. அப்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.8.57 கோடி வரை முறைகேடு நடந்தது தெரிந்தது.எனவே, இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 1.10.2020 முதல் 30.9.2021 வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், எந்தெந்த விவசாயிகளிடம் கொள்முதல் நடந்தது, அதற்கான அடங்கல் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளதா, வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்களிடம் நெல் கொள்முதல் நடந்ததா என விசாரித்தனர். அதன் எதிரொலியாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 பேரையும், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா படவேடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரையும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதில் இடைத்தரகரான சக்திவேல் மட்டும் ஆந்திராவில் இருந்து நெல்மூட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து கூடுதல் விலை வைத்து ரூ.57.82 லட்சத்துக்கு விற்றிருப்பது தெரியவந்துள்ளது. கைதான சக்திவேல் சிபிசிஐடி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஆந்திராவிலும், தமிழக விவசாயிகளிடமும் குறைந்த விலைக்கு நெல் வாங்கி, அதனை அதிகாரிகள் உதவியுடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்றதாக தெரிவித்துள்ளார். அதோடு, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் செயல்பட்ட 20க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதிகபட்சமாக, போளூர் மற்றும் செய்யாறு தாலுகாவில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடந்ததாகவும் அவர் தெரிவித்திருப்பதாக சிபிசிஐடி போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த முறைகேடுக்கு அதிமுக நிர்வாகிகள் சிலரும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், விபரங்களை வெளியிட்டால் சம்மந்தப்பட்டவர்கள் தப்பிவிட வாய்ப்பு இருப்பதால், மேலும் சிலர் கைது செய்யப்பட்டதும் உரிய விபரங்கள் வெளியிடப்படும் என்றும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்….

The post திருவண்ணாமலை கொள்முதல் நிலையங்களில் அதிமுக நிர்வாகிகள் உடந்தையுடன் கோடிக்கணக்கில் முறைகேடு: சிபிசிஐடியிடம் சிக்கியவர் திடுக் வாக்குமூலம்; மேலும் பலர் சிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: