கும்பகோணம் அருகே ஓடும் பஸ்சில் டிரைவர், கண்டக்டருக்கு அரிவாள் வெட்டு: வீடியோ வைரல்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஓடும் பஸ்சில் டிரைவர், கண்டக்டருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து தாராசுரம் அடுத்த எலுமிச்சங்கா பாளையத்துக்கு நேற்றுமுன்தினம் மாலை மினிபஸ் புறப்பட்டு சென்றது. டிரைவராக உடையார்பாளையம் கூத்தங்குடியை சேர்ந்த மனோகரன் மகன் வசந்த் (24), கண்டக்டராக கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி உடையார்தெருவை சேர்ந்த முருகானந்தம் மகன் வினோத் (25)இருந்தனர். அப்போது பஸ்சில் இருந்த நபர் ஒருவர், தாராசுரம் பேருந்து நிலையத்திற்கு முன்னதாக இறங்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த இடத்தில் பஸ் நிற்காது என டிரைவரும், கண்டக்டரும் தெரிவித்துள்ளனர்.இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், திடீரென டிரைவரின் இருக்கைக்கு சென்று ஸ்டியரிங்கை திருப்பி விட்டார். அப்போது சாமர்த்தியாக செயல்பட்டு பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பின்னர் பஸ் சாவியை எடுத்து வீசி விட்டு அந்த மர்மநபர் பஸ்சில் இருந்து இறங்கி சென்றார்.இதையடுத்து அந்த சாவியை எடுத்து பஸ்சை தாராசுரம் நோக்கி டிரைவர் ஓட்டி சென்றார். அப்போது எலுமிச்சங்கா பாளையத்துக்கு பஸ் வருவதற்குள் அந்த மர்ம நபர், நண்பர்கள் உதவியுடன் பஸ்சை தடுத்து நிறுத்தி ஏறினார்.பின்னர் நண்பர்கள் கொண்டுவந்த அரிவாளால் டிரைவர், கண்டக்டரை வெட்டினார். பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி அலறியடித்து ஓடினர். பின்னர் அந்த மர்ம நபர், அங்கிருந்து நண்பர்களுடன் தப்பி சென்றார். அரிவாள் வெட்டில் காயமடைந்த டிரைவர், கண்டக்டர் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் முழுவதும் பஸ்சில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்ததால் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. இந்த வீடியோ பதிவை கொண்டு கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அந்த மர்ம நபர் கும்பகோணம் கர்ணக்கொல்லை தெருவை சேர்ந்த ஹரி (22) என தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள ஹரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்….

The post கும்பகோணம் அருகே ஓடும் பஸ்சில் டிரைவர், கண்டக்டருக்கு அரிவாள் வெட்டு: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: