‘சென்னை உலக சினிமா விழா’வில் கலைஞரின் திரைப்படங்கள் வெளியீடு: செப்.1 முதல் 3ம் தேதி வரை நடக்கிறது

சென்னை: ‘சென்னை உலக சினிமா விழா’ வரும் செப்டம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில், வளசரவாக்கம் தேவி கருமாரி திரையரங்கில் நடக்கிறது. இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், விழா ஏற்பாட்டாளர்கள் உலக சினிமா பாஸ்கரன், இயக்குனர் ராசி அழகப்பன், செந்தில் குமரன் சண்முகம் கலந்துகொண்டனர். அப்போது உலக சினிமா பாஸ்கரன் பேசியதாவது: ‘இவ்விழாவில் 15 படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழ் சினிமாவின் தந்தை நடராஜ முதலியார் நினைவைப் போற்றும் வகையில், வேல்முருகன் பெரியவன் உருவாக்கிய ‘அடவி’ என்ற மவுனப்படம் திரையிடப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.

தமிழ் விண்டேஜ் உலக சினிமா, தமிழ் பெஸ்டிவல் வெர்ஷன் திரைப்படங்கள், தமிழ் சிறுவர் சினிமாக்கள் உள்பட பல்வேறு பிரிவுகளில் படங்கள் திரையிடப்படுகின்றன. தவிர, கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவுடன் இணைந்து, சென்னை உலக சினிமா விழாவில் அவரது திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. விழாவில் படைப்பாளிகள் தங்கள் படங்களை விண்ணப்பிக்க கட்டணம் வாங்கப்படவில்லை. திரைப்பட விழாவில் படங்களை பார்க்க வரும் ரசிகர்களுக்கும் கட்டணம் கிடையாது. ‘வெள்ளிமலை’, ‘இராவண கோட்டம்’ ஆகிய படங்களும் பெஸ்டிவல் வெர்ஷன் என்ற பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தது. அதிலிருந்து 15 படங்களை தேர்வு செய்து திரையிடுகிறோம். கலைஞர் கருணாநிதி கதை, வசனம் எழுதிய ‘பராசக்தி’ படமும் திரையிடப்படுகிறது’ என்றார். குறைந்த செலவில் உலக சினிமாவை உருவாக்குவது எப்படி என்ற பயிற்சி பட்டறையை ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விக்னேஷ் குமுளை, நேரடி ஒலிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத் ஆகிய இருவரும் இணைந்து நடத்துகின்றனர். சிறுவர்களுக்கான படங்களை திரையிடும்போது சிறுவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற படங்களைப் பார்க்க சிறுவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

The post ‘சென்னை உலக சினிமா விழா’வில் கலைஞரின் திரைப்படங்கள் வெளியீடு: செப்.1 முதல் 3ம் தேதி வரை நடக்கிறது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: