தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியை சமூக ஊடகம் வலுப்படுத்தாது: வீரப்ப மொய்லி குற்றச்சாட்டு

புதுடெல்லி: தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியை சமூக ஊடகம் வலுப்படுத்தாது என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது குறித்து நேற்று நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி கூறுகையில், ‘செயல்படாத தலைவர்களை மாற்ற ேவண்டும். சோனியா காந்தி கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் தனது கையில் எடுக்க வேண்டும். டுவிட்டர் பதிவு மற்றும் இணைய ஊடக அறிக்கைகளால் மட்டுமே கட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியாது. சில சந்தர்ப்பவாதிகள் கட்சியில் கால் பதித்து உள்ளதால், கட்சியின் உண்மையான விசுவாசிகள் பாதிக்கப்பட்டுகின்றனர். தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும். இக்கட்டான இந்த நேரத்தில் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஒற்றுமை தேவை; எந்தவொரு காங்கிரஸ் தொண்டரும் மனம் தளர வேண்டாம்’ என்றார். இவர் கடந்த 2020ல் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்களில் ஒருவராவார். தற்போது இவர், அதிருப்தி தலைவர்களிடம் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், ‘சமீபத்திய சட்டசபை தேர்தல் தோல்விக்கு, காந்தி குடும்பத்தினர் மட்டும் காரணம் அல்ல; கட்சியின் எம்பிக்கள் மற்றும் மாநில தலைவர்கள் தான் காரணம். ஆர்எஸ்எஸ், பிஜேபி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் காந்தி குடும்பத்தை தாக்கியே பேசி வருகின்றனர். இந்த நேரத்தில் சோனியா காந்தியின் குடும்பத்துடன் நிற்காதவர்கள் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் ஆவர். கட்சிக்காக சோனியா காந்தி பல தியாகங்களைச் செய்துள்ளார். நீண்ட காலமாக அவரது குடும்பத்தில் இருந்து யாரும் ஆட்சி, அதிகாரத்தில் இருந்ததில்லை’ என்றார்….

The post தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியை சமூக ஊடகம் வலுப்படுத்தாது: வீரப்ப மொய்லி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: