நன்றி குங்குமம் டாக்டர்
மருத்துவப் பேராசிரியர் முத்தையா
எனக்கு கடந்த ஆறு மாதங்களாக வாய்ப்புண் தொல்லை உள்ளது. இந்த ஊருக்கு புதிதாக வந்ததில் இருந்து இப்பிரச்னை இருக்கிறது. சில நேரம் நாக்கில்கூட புண் வருகிறது. உணவுப் பழக்கத்தில் மாற்றமில்லை. ஆனால் சமயங்களில் ஹோட்டலில் சாப்பிட நேரிடுகிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?
– ச.மாணிக்க விநாயகம், தேனி.
வாய்ப்புண்ணை ஏற்படுத்தும் பொதுவான காரணங்களை முதலில் பார்ப்போம். ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு, இரைப்பையில் புண், குடலில் அழற்சி நோய்கள் (IBD, IBS), ரத்தச்சோகை, நீரிழிவு, பல் ஈறு கோளாறுகள், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வருகிற சாத்தியம் அதிகம். வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடும் பழக்கம் இருந்தாலும், புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களாலும் வாய்ப்புண் வரலாம்.
எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும். இதில் நீங்கள் எந்த ரகம் என முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கான காரணத்தைக் களைந்தால், வாய்ப்புண் வருவது தடுக்கப்படும்.நீங்கள் ஊர் மாறி வந்திருக்கிறீர்கள். அங்குள்ள சுற்றுப்புறத்திலிருந்து சாயக் கழிவுகள், உலோகக் கழிவுகள், அமிலம் கலந்த புகைகள், தொழிற்சாலை நுண்துகள்கள் போன்றவற்றில் ஏதாவது ஒன்று தாக்கும் வாய்ப்பிருந்தாலும் வாயில் புண் வர வாய்ப்பிருக்கிறது.
சரியான உறக்கம் இல்லையென்றாலும், அதிகமாகக் கவலைப்பட்டாலும் வாய்ப்புண் வரும். கவலை, இரைப்பையில் அமிலச் சுரப்பை அதிகப்படுத்தும். அந்த அதீத அமிலம் உறக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.வாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும் ஒரு காரணம்தான். உணவு ஒவ்வாமை – குறிப்பாக, செயற்கை வண்ண உணவுகள், மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள்கன்னத்தைக் குத்திப் புண் உண்டாக்கும்.
அடிக்கடி ‘ஆன்டிபயாட்டிக்’ மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கும் அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கும் இது நிரந்தரத் தொந்தரவாகிவிடும். வலிப்பு நோய் மாத்திரைகள் போன்ற சில மருந்துகளின் பக்கவிளைவு காரணமாகவும் வாய்ப்புண் வருவது உண்டு. திடீரென உடல் எடையைக் குறைத்தாலும் வாய்ப்புண் வர வாய்ப்பிருக்கிறது. மூட்டுவலி, சுயத்தடுப்பாற்றல் நோய் (Autoimmune disease), ஹார்மோன்களின் மாற்றம் ஆகிய காரணங்களாலும் வாய்ப்புண் ஏற்படுவது உண்டு.
உங்களுக்கு எந்தக் காரணத்தால் வாயில் புண் வருகிறது என்று தெரிந்து சிகிச்சை பெறுங்கள். வாய்ப்புண்ணில் சில வகைகள் உள்ளன. அதன் வடிவத்தைப் பார்த்தே பெரும்பாலான வாய்ப்புண்களுக்குக் காரணத்தைச் சொல்லிவிடலாம். இதற்கு மருத்துவரின் நேரடிப் பரிசோதனைதான் உதவ முடியும்.பெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு மூலமே குணமாகிவிடும். அதேநேரத்தில் வாய்ப்புண் வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால் அது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே, வாய்ப்புண்தானே என்று
அலட்சியமாக இருக்க வேண்டாம்.
என்ன சிகிச்சை?
மருத்துவர் ஆலோசனைப்படி ஆன்டிசெப்டிக் திரவத்தை உபயோகித்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் சீக்கிரத்தில் குணமாகும். ஸ்டீராய்டு, வலி மரத்துப் போகச் செய்யும் களிம்புகளை வாய்ப்புண்ணில் தடவலாம். இவற்றோடு வலிநிவாரணி மாத்திரைகளையும் ஒரு வாரம் உட்கொள்ள வேண்டும்.
வாயில் புண் அடிக்கடி வந்தால், லேக்டோபேசில்லஸ் (Lactobacillus) மருந்து கலந்த மல்ட்டி வைட்டமின் மாத்திரை, இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் உள்ள மாத்திரைகளை ஒரு மாதத்துக்குச் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வாய்ப்புண் மீண்டும் வராது. பூஞ்சையால் வரும் வாய்ப்புண்ணுக்குக் காளான் கொல்லி மருந்தைத் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். தடுப்பது எப்படி?
வாய்ச்சுத்தம் காப்பது வாய்ப்புண்ணைத் தடுப்பதற்கான முதல் படி. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் காண்பித்து ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கூரான பற்களைச் சரிசெய்ய வேண்டும். ‘சோடியம் லாரில் சல்பேட்’ (Sodium lauryl sulphate) கலந்திருக்கும் பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது. புகைப்பிடிக்கக் கூடாது. வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடக் கூடாது. மது ஆகாது. நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஒவ்வாமை/மருந்து ஒவ்வாமை இருந்தால் தவிர்க்க வேண்டும்.
பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல்லம், தேன், பேரீச்சை, முளைகட்டிய பயறுகள், கொண்டைக்கடலை, பச்சைப்பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படுவதை நிச்சயம் தடுக்கலாம்.
என் மகனுக்கு ஆறு வயது. அவனுக்குச் சிறுநீர் சொட்டுச் சொட்டாக வெளியேறுகிறது. பரிசோதித்துப் பார்த்ததில் எந்தக் குறையும் இல்லை என்கிறார்கள். இப்பிரச்னை தீர என்ன வழி?
– ஜானகி செல்வா, செங்கல்பட்டு.
ஆணுறுப்பின் முன்தோல் மூடியிருந்தாலும், சிறுநீர்ப் பாதையில் புண் இருந்தாலும், சிறுநீர் நோய்த்தொற்று இருந்தாலும், சிறுநீர்ப் பாதையில் சதை அடைப்பு இருந்தாலும், மூத்திரப்பை, சிறுநீர் குழாய் – பாதையில் கற்கள் இருந்தாலும், தொற்றுநோய் கிருமிகளாலும் சிறுநீரானது சொட்டு சொட்டாக இறங்கலாம். இந்த அறிகுறிகளை உறுதிசெய்த பின் சிறுநீர் பெருக்கிகளான நண்டுக்கல், சிலாசத்து, குங்கிலியம் சேர்ந்த மருந்துகளை மருத்துவர் பரிந்துரையோடு வழங்கலாம்.
சிறுநீர் பெருக்கும் காய்களான வாழைப்பூ, வாழைத்தண்டு, வெள்ளரி, சுரை, இளநீர், மோர் போன்றவற்றை அதிகம் சாப்பிடக் கொடுக்க வேண்டும். சிறுபீளை, நெருஞ்சில் கலந்த குடிநீர் 30 மி.லி. தினமும் இரண்டு வேளை எடுத்துக்கொண்டு வந்தால் சிறுநீர் சொட்டுசொட்டாக வெளியேறும் பிரச்னை தீரும். ஒரு வேளை ஆணுறுப்பின் முன்தோல் மூடியிருந்தால் அறுவைசிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.
எனக்குக் கடந்த இரு மாதங்களாக வலது தோள்பட்டையில் வலி இருந்துகொண்டே இருக்கிறது. நான் ஒரு தைலத்தைத் தினமும் இரண்டு முறை தடவிவருகிறேன், ஆனாலும் நிவாரணம் இல்லை. இதற்கு என்ன தீர்வு?
– ஜி.எஸ்.ஜலாலுதீன், சென்னை.
தோள்பட்டையில் வலி என்பது தோளில் உள்ள நோயின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் அல்லது உடலின் வேறு பாகத்தில் இருக்கும் பிரச்னை தோள்பட்டை வலியாகவும் வெளிப்படலாம். உதாரணமாக, இதய நோய் அல்லது நெஞ்சு எரிச்சல் இருந்தால், அது தோள்பட்டை வலியாக வெளிப்படும் சாத்தியம் இருக்கிறது.
தோள்பட்டையில் பலவகையான கோளாறுகள் ஏற்படலாம். ஃபுரோசன் ஷோல்டர், டெண்டினிடிஸ் (Tendinitis) முதலானவை அப்படிப்பட்டவைதான். சரியான தீர்வு காண மருத்துவப் பரிசோதனை அவசியம்.ஆயுர்வேதம் உள்ளிட்ட பூர்வீக மருத்துவத்தில் தோள்பட்டை வலி பல முறைகளில் கையாளப்படுகிறது. வெந்தயம், மஞ்சள் போன்ற பல மூலிகைகள் சேர்த்துச் சிகிச்சை அளிப்பது ஒரு முறை. இதை நாரங்கக் கிழி என்றும் கூறுவார்கள்.
நஸ்யம் என்று மற்றொரு சிகிச்சையும் உள்ளது, இது மூக்கு வழியாக உடல் நாளங்களைச் சுத்திகரிக்கும் சிகிச்சை. இப்படிப் பல்வேறு மேம்பட்ட சிகிச்சைகள் தேவைப்படும் நிலையில், வெறும் தைலத்தை மட்டும் தடவிவருவது முழு பலனை அளிக்காமல் போகலாம். மேலும் உங்கள் பிரச்னையைப் பொறுத்துப் பிரசாரிணி போன்ற கஷாயங்களும் அருந்த வேண்டி இருக்கலாம். மருத்துவரை நேரில் அணுகிச் சிகிச்சை விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
The post கவுன்சலிங் ரூம் appeared first on Dinakaran.
