மண்டபம் : மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் வலுவிழந்து சேதம் அடைந்த மீன்கள் இறங்கும் தளத்திற்கு அமைக்கப்பட்ட நடைமேடை பாலத்தை அகற்றி அந்த பகுதியில் புதிய பாலம் அமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இந்திய கடலோர காவல் படை முகாம் அருகே கடலில் மீன்கள் இறங்கும் தளம் நடை மேடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இறங்கும் தளம் பாலத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்வதற்கும், பிடித்து வந்த மீன்களை இறக்குவதற்கும், பின்பு மீன்களை வாகனங்கள் சென்று ஏற்றி வரவும், விசைப்படகுகளுக்கு டீசல் எரிபொருள்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களை வாகனங்களில் கொண்டு செல்லும் வகையில் இந்த டி வடிவில் இறங்கும் தளம் பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளை கடந்து விட்டது.
இந்நிலையில் இந்த பாலம் கடலில் கடல் அலை தாக்கத்தில் சிக்கி கடலுக்குள் அமைக்கப்பட்ட தூண்கள் மற்றும் மேல் சிலாப்பு பாலம் பகுதிகளில் சிமெண்ட் கான்கிரீட் சேதம் அடைந்து கடந்த 2ம் தேதி கடலுக்குள் விழுந்தது. இதனால் நடைமேடை பாலத்தில் பெரிய பள்ளம் விழுந்தது. இதில் குடிதண்ணீர் லாரியும் சிக்கி சேதம் அடைந்தது.
இந்த பாலத்தை மறுசீரமைக்க முடியாது. ஆதலால் சேதம் அடைந்த பாலத்தை அப்பகுதியில் இருந்து முழுவதும் அகற்றி புதிய மீன்கள் இறங்கும் தளம் பாலம் அமைக்க மாவட்ட மீன்வளத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மீன்கள் இறங்கு தளம் பாலம் சேதம் appeared first on Dinakaran.
