சென்னை மாநகராட்சி 417 பள்ளிகளை நிர்வகித்தாலும், 3,146 ஆசிரியர்கள், 316 தலைமை ஆசிரியர்கள் (தலைமை ஆசிரியை) மட்டுமே உள்ளனர். ஜூன் மாத நிலவரப்படி, 1,152 ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு சில பழைய பள்ளிகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. உதாரணமாக கொரட்டூரில் உள்ள மாநகராட்சி பள்ளி பத்து ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட போதிலும், பல வசதிகள் இல்லை என கூறப்படுகிறது.
இந்த பள்ளியில் இயற்பியல், வேதியியல், கணினி ஆய்வகங்கள் உள்ளன. ஆனால், 4 ஆய்வகங்கள் வகுப்பறைகளாக மாற்றப்பட உள்ளன. “வகுப்பறை பற்றாக்குறையால், ஒரே அறையில் மரப்பலகை மூலம் பிரித்து இரு வேறு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், நடுநிலை மற்றும் ஆரம்ப வகுப்புகளுக்கு இருக்கைகள் இல்லாததால், மாணவர்கள் தரையில் அமர வேண்டியுள்ளது. பள்ளியில் உள்ள 12 காலி பணியிடங்களில் 7 பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்பட்டாலும், தமிழ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.
இதனிடையே, மாநகராட்சி துணை ஆணையர் இந்த பள்ளியை பார்வையிட்டு, புதிய வகுப்பறைகள் கட்டுவதை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால், தற்போது மதிப்பீடு மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
பல பள்ளிகளில் நிரந்தர தூய்மை பணியாளர்கள், ஆங்கில ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் காவலாளிகள் இல்லாததால், மாணவர்கள் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர். போதுமான நிதி இருந்தும், திட்டமிடல் மற்றும் ஆலோசனை இல்லாதது இந்த பிரச்னைகளுக்கு காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் கூறுகையில், ‘‘பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் காலியிடங்கள் குறித்து மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் ஆள் சேர்ப்பு வாரியம் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கும். மேலும், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்திடம் மேசைகள் மற்றும் மரச்சாமான்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது, அவசர தேவைக்கு கவுன்சிலர்கள் வார்டு மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தலாம்,’’ என்றார்.
The post மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதி, வகுப்பறை பற்றாக்குறை 1,152 ஆசிரியர்கள், நிர்வாக பணியிடங்கள் காலி: மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
