திருமணத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை கோரிய மனு தள்ளுபடி

மதுரை: திருமணத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்வதை கட்டாயமாக்க சிறப்புச் சட்டம் கொண்டுவர தாக்கலான வழக்கை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. இந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருமணத்திற்கு பின் தம்பதியரிடையே கருத்து வேறுபாட்டால், விவாகரத்து வழக்குகள் அதிகம் தாக்கலாகின்றன. இதற்கு பாலியல்ரீதியான குறைபாடுகளே காரணம்.

இதனால் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. ஐரோப்பா மற்றும் சில அரபு நாடுகளில் திருமணத்திற்கு முன் ஆண், பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, இதுபோல மருத்துவப் பரிசோதனை செய்வதை கட்டாயமாக்க சிறப்புச் சட்டம் கொண்டு வர தமிழக அரசு பரிசீலிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஸ்ரீமதி ஆகியோர், ‘‘மனுதாரர் குறிப்பிடுவது போல சட்டம் இயற்றுமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது. இதுபோன்ற சட்டங்கள் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் உள்ளது. நீதிமன்றம் இவ்வாறெல்லாம் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது’’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post திருமணத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: