பாலியல் வன்கொடுமை தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் புலன் விசாரணையை விரைந்து முடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடையாளங்கள் இடம்பெற்றுள்ளது தெரிய வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை புலன் விசாரணை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும். இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என்று காவல் துறையினருக்கு, டிஜிபியும், சென்னை மாநகர காவல் ஆணையரும் அறிவுறுத்தல்கள் பிறப்பிக்க வேண்டும். மீறினால் ஒட்டுமொத்த காவல் துறையினரும் அதற்கு பொறுப்பாக்கப்படுவார்கள். அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் நீக்க வேண்டும். இந்த வழக்கில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
The post பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை எந்த வடிவிலும் வெளிப்படுத்த கூடாது: போலீசாருக்கு அறிவுறுத்த டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
