திருத்தணி அருகே அரக்கோணம் புறவழிச் சாலை மேம்பாலம்ப் பகுதியில் செல்லும் மின்சார ரயிலின் உயர் அழுத்த மின்கம்பியில் தார்பாய் சுற்றி தொங்கிக் கொண்டிருந்தது. இதை பார்த்ததும் மின்சார ரயிலை இன்ஜின் டிரைவர் அப்படியே நிறுத்திவிட்டார். இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருத்தணி ரயில் நிலையம் அருகே புறநகர் மின்சார ரயில் நின்றதை தொடர்ந்து, அதன் பின்னால் விஜயவாடா நோக்கி சென்ற வந்தேபாரத் அதிவிரைவு ரயிலும் நிறுத்தப்பட்டது.
புறநகர் மின்சார ரயிலில் வந்த பயணிகள் இறங்கி, உயர் அழுத்த மின்கம்பியில் சுற்றி தொங்கி கொண்டிருந்த தார்பாயை உயரமான கொம்பின் மூலமாக அகற்றினர். இதைத் தொடர்ந்து, சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக வந்தேபாரத் அதிவிரைவு ரயில் விஜயவாடாவுக்கு புறப்பட்டு சென்றது. இதுகுறித்து ரயில்நிலைய அதிகாரிகள் விசாரிக்கையில், அவ்வழியாக வந்த சரக்கு ரயில் பெட்டியில் மூடப்படும் தார்பாய் காற்றில் பறந்து, உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி தொங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அரக்கோணம் ரயில்வே போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
The post திருத்தணி ரயில் நிலையம் அருகே வந்தேபாரத் ரயில்சேவை பாதிப்பு உயர் அழுத்த மின்கம்பியில் தார்பாய் சுற்றியதால் பரபரப்பு appeared first on Dinakaran.
