பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களுக்கு பாட நோட்டுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

ஈரோடு, மே 22: கோடை விடுமுறை முடிந்து வருகிற 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், ஈரோட்டில் மாணவ-மாணவிகளுக்கு பாட நோட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு, முழு ஆண்டு தேர்வு நிறைவு பெற்று கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தும் வருகிற ஜூன் மாதம் 2ம் தேதி திறக்கப்பட உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், அரசு பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாட புத்தகத்தோடு, நோட்டுகளையும் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் தனியார் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்களை வாங்க ஸ்டேஷனரி கடைகளில் அலைமோதுவர்.

சில பள்ளிகளில் வெளியில் நோட்டுகள் தயாரித்து அதனை கொள்முதல் செய்து மாணவ-மாணவிகளுக்கு வழங்குவார்கள். இந்நிலையில், பள்ளிகள் திறக்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தற்போது ஸ்டேஷனரி கடைக்காரர்கள், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் நோட்டு தயாரிக்கும் நிறுவனங்களில் ஆர்டர் கொடுத்துள்ளனர். இதனால், ஈரோடு மரப்பாலம், சின்ன மாரியம்மன் கோயில் பகுதி, காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் பகுதி, மண்டப வீதி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் பாட நோட்டுகள் தயாரிக்கும் நிறுவனங்களில் நோட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து பாட நோட்டுகள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரான ஜாகீர் உசேன் கூறியதாவது: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதும், எங்களுக்கு வேலை துவங்கி விடும். ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை தான் அதிகப்படியான வேலை இருக்கும். அதன்பிறகு எங்கள் தொழில் டல் அடிக்க ஆரம்பித்து விடும். பெரிய அளவிலான தனியார் பள்ளிகள் அவர்களுக்கான நோட்டுகளை தயாரிக்க சிவகாசி, மதுரை போன்ற மாவட்டங்களில் ஆர்டர் கொடுத்து மொத்தமாக வாங்கி கொள்கின்றனர். சிறிய அளவிலான பள்ளிகளும், ஸ்டேஷனரி கடை உரிமையாளர்களும் தான் நோட்டுகள் தயாரிக்க ஆர்டர்கள் வழங்குவார்கள். ஆர்டர் கொடுப்பவர்கள் பெரும்பாலும் அவர்களது பள்ளி மற்றும் கடையின் பெயர் போட்டு தான் நோட்டுக்களை தயாரித்து வழங்குகிறோம்.

இதன்காரணமாக நாங்கள் ஒரு நோட்டு புத்தகத்திற்கு கூலி நிர்ணயித்து, தயாரித்து கொடுக்கிறோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஸ்டேஷனரி கடைகளில் இருந்து ஆர்டர் அதிகளவில் வரவில்லை. தனியார் பள்ளிகளில் இருந்து போதுமான அளவு ஆர்டர் கிடைக்கப்பெற்று, நோட்டுகள் தயாரித்து வழங்குகிறோம். சில பள்ளிகள் அவர்களது பள்ளியின் பெயர் பதித்த பேப்பர்களை வழங்கி நோட்டுகளாக தயாரித்து தர ஆர்டர் கொடுத்துள்ளனர்.
அவர்களுக்கு ஒரு நோட்டுக்கு குறிப்பிட்ட தொகையை கூலியாக பெற்றும் செய்து தருகிறோம். இந்த மாத இறுதிக்குள் நோட்டுகள் தயாரிக்கப்பட்டு ஆர்டர் பெற்ற பள்ளிகளுக்கும், ஸ்டேஷனரி கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களுக்கு பாட நோட்டுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: