ஈரோடு, ஜன. 1: ஈரோடு மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என ஆணையர் அர்பித் ஜெயின் தெரிவித்துள்ளார். ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டரங்களில் நேற்று சாதாரண மற்றும் சிறப்பு கூட்டம் நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணைமேயர் செல்வராஜ், ஆணையர் அர்பித் ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாநகராட்சியில் 1வது வார்டுக்கு உட்பட்ட பாரதி பெருமாள்நகரில் ரூ.19 லட்சம் மதிப்பில் தார் மற்றும் கான்கிரீட் சாலை அமைத்தல், ராயபாளையம்புதூரில் ரூ.19 லட்சத்தில் தார் சாலை, சாணார்பாளையத்தில் ரூ.45 லட்சத்தில் சமுதாய கூடம், ராஜீவ் நகரில் ரூ.20 லட்சத்தில் மழைநீர் வடிகால், 2வது வார்டு ராமன் பாலக்காடு பகுதியில் ரூ.49 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால், 3வது வார்டு குறிஞ்சி நகரில் ரூ.30 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, 24வது வார்டு பகுதிகளில் ரூ.15 லட்சம் மதிப்பில் சிசிடிவி கேமரா பொருத்துதல், 19வது வார்டு வெட்டுக்காட்டு வலசு பிரிவு முதல் வீரப்பம்பாளையம் வரை உள்ள பிரதான சாலையில் ரூ.26 லட்சம் மதிப்பில், 55 தெரு விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட 51 தீர்மானங்களில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: மாநகராட்சிக்கு சொந்தமான போர்வெல்கள் பெரும்பாலானவை பழுதடைந்து காணப்படுகிறது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
48வது வார்டு பகுதியில் கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மாநகராட்சியில் குறிப்பிட்ட சில வார்டுகளில், ஊராட்சிக்கோட்டை தனி குடிநீர் திட்டத்தின் மூலம் இதுவரை முறையாக குடிநீர் விநியோகிக்கவில்லை எனவே, அனைத்து வார்டுகளிலும் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்வேறு பகுதிகளில் உடைந்து காணப்படும் பாதாள சாக்கடை மேன் ஹோல்களுக்கு மாற்றாக, புதிய மேன்ஹோல்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருநாய்களை மாநகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு- பவானி சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சாலையின் நடுவே செல்லும் குடிநீர் குழாய்களை ஓரமாக பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்களை தடுக்கும் வகையிலும், சாக்கடை கால்வாய்களை தூய்மைப்படுத்தும் விதமாகவும், மாஸ் கிளினீங் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். 60 வார்டுகளிலும் பழுதடைந்து காணப்படும் தெருவிளக்குகள் அகற்றி புதிய விளக்குகளை பொருத்த வேண்டும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.
இதற்கு பதிலளித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சியில் ஊராட்சிக்கோட்டை தனி குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படாத பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை மேன் ஹோல்கள் சேதமடைந்த பகுதிகள் குறித்து கவுன்சிலர்கள், பொதுமக்கள் தகவலளித்தால், புதிய மேன்ஹோல்கள் உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாஸ் கிளினீங் பணிகள் துரிதப்படுத்த வேண்டும். தெருவிளக்குகள் குறித்த புகார்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உடனடியாக பழுது நீக்கப்பட்டும், புதிய விளக்குகள் பொருத்தப்பட்டும் வருகிறது. இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு ஆணையர் அர்பித் ஜெயின் பதிலளித்து கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, சம்பத் நகரில் சமையற்கூடம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடையும். அதே நேரத்தில், தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பை அடுத்த வாரத்தில் தமிழ்நாடு அரசு வெளியிடும். தொடர்ந்து, அத்திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். இத்திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னோட்டமாக 1வது மண்டலத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கால் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் கவுன்சிலர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், மாநகராட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லாத லக்காபுரம் ஊராட்சி பகுதிகளில் இருந்து, தினசரி 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து வெண்டிபாளையம் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. எனவே, அக்கிடங்கை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு துணை ஆணையர் தனலட்சுமி பதிலளித்து கூறியதாவது: ‘‘வெண்டிப்பாளையம் குப்பைக்கிடங்கில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்தெடுக்கப்பட்டு, அவை சாலை அமைக்கும் பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக, வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் இருந்து 20 சதவீத்திற்கு மேல் குப்பை கொட்டுவது குறைக்கப்பட்டுள்ளது” என்றார்.
ஆணையர் தகவல்; போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சட்ட ஒழுங்கையும், சாலை விபத்து மற்றும் குற்றச்செயல்கள் தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. ஈரோடு மாவட்ட எல்லை மற்றும் மாநில எல்லை சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகள் பொதுமக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்றவற்றில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது.
