×

59வது லீக் ஐபிஎல் போட்டி: வேகம் இழந்த ராஜஸ்தானை விவேகமாக வீழ்த்திய பஞ்சாப்: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்

ஜெய்ப்பூர்: ஐபிஎல்லில் நேற்று, ராஜஸ்தான் அணியை, பஞ்சாப் அணி 10 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஐபிஎல் 18வது தொடரின் 59வது லீக் போட்டி, ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில், பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக, பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பவர்பிளே ஓவர்களில் இவர்கள் தடுமாற்றத்துடன் ஆடியதால், பிரியன்ஸ் ஆர்யா (9 ரன்), மிட்செல் ஓவன் (0 ரன்), பிரப்சிம்ரன் சிங் (21 ரன்), என அடுத்தடுத்து அவுட்டாகினர்.

இருப்பினும் அதன் பின் வந்த நேஹல் வதேராவும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ரியான் பராக் வீசிய 11வது ஓவரில், ஷ்ரேயாஸ் (30 ரன்), ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் தந்து அவுட்டானார். அதன் பின் வந்த ஷசாங்க் சிங்கும், வதேராவும் அடித்து ஆடி ரன்களை மளமளவென உயர்த்தினர். இந்த இணை 58 ரன்கள் விளாசியிருந்த சமயத்தில், ஆகாஷ் மத்வால் வீசிய பந்தில் ஹெட்மயரிடம் கேட்ச் தந்து வதேரா (37 பந்து, 5 சிக்சர், 5 பவுண்டரி, 70 ரன்), ஆட்டமிழந்தார்.

பின் வந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ராஜஸ்தான் வீரர்களின் பந்துகளை வெளுத்து வாங்கினார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. சஷாங்க் சிங் 59 ரன், அஸ்மதுல்லா 21 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில், தேஷ்பாண்டே 2, மபாகா, ரியான் பராக், மத்வால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 220 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

துவக்க வீரர்களாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், வைபவ் சூர்யவன்ஷியும் பவர்பிளே ஓவர்களில் அபாரமாக அடித்து ஆடத் துவங்கினர். இவர்களின் அதிரடியால், 3 ஓவர் முடிவதற்குள் ராஜஸ்தான் 50 ரன்களை கடந்தது. 4.5 ஓவரில் அணியின் ஸ்கோர் 76 ஆக இருந்தபோது, ஹர்ப்ரீத் பிரார் வீசிய பந்தில், பார்லெட்டிடம் கேட்ச் தந்து வைபவ் (15 பந்து, 4 சிக்சர், 4 பவுண்டரி, 40 ரன்), ஆட்டமிழந்தார். அதன் பின், கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார்.

சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் (25 பந்து, ஒரு சிக்சர், 9 பவுண்டரி, 50 ரன்), ஹர்ப்ரீத் பந்தில் அவுட்டானார். அதன் பின் ரன் வேகம் வெகுவாக குறைந்தது. சஞ்சு சாம்சன் (20 ரன்), ரியான் பராக் (13 ரன்), ஷிம்ரன் ஹெட்மயர் (11 ரன்) ஆகியோர் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின் வந்தோரில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த துருவ் ஜுரெல் (31 பந்து, 53 ரன்), மார்கோ யான்சன் பந்தில் வீழ்ந்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான், 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன் மட்டுமே எடுத்தது. அதனால், 10 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் யுஸ்வேந்திர சஹல் 3, அஸ்மதுல்லா ஒமர்சாய், யான்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியை அடுத்து, பஞ்சாப் அணி 17 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் 2ம் இடத்துக்கு உயர்ந்தது.

The post 59வது லீக் ஐபிஎல் போட்டி: வேகம் இழந்த ராஜஸ்தானை விவேகமாக வீழ்த்திய பஞ்சாப்: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : 59th League IPL Match ,Punjab ,Rajasthan ,Jaipur ,IPL ,59th league match ,season ,Punjab Kings ,Rajasthan Royals ,59th League IPL ,Dinakaran ,
× RELATED குவீன்ஸ் கிளப் டென்னிஸ்; லெஹெக்காவை...