சிட்னி: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 211 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா 3ல் வென்று, 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. 4வது டெஸ்ட் போட்டியில் மட்டும் இங்கிலாந்து வரலாற்றுச் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்நிலையில், இந்த அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நேற்று துவங்கியது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பென் டக்கெட் 27 ரன்னிலும், ஜாக் கிராவ்லி 16 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
பின் வந்த ஜேகப் பெத்தேல் 10 ரன்னில் வீழ்ந்தார். அதன் பின் இணை சேர்ந்த ஜோ ரூட், ஹேரி புரூக் அட்டகாசமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அவர்களை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் திணறினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் மட்டும் இழந்து 211 ரன்கள் குவித்திருந்தது. ஜோ ரூட் 103 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 72 ரன்கள், ஹேரி புரூக் 92 பந்துகளில் ஒரு சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 4வது விக்கெட்டுக்கு இந்த இணை 154 ரன் விளாசி அசத்தியது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், மைக்கேல் நெஸர், ஸ்காட் போலண்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 2ம் நாளான இன்று, இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடர்கிறது.
