ரபாட்: ஆப்கோன் கால்பந்து போட்டியில் நேற்று, செனகல் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் சூடான் அணியை அபாரமாக வென்று காலிறுதிக்கு முன்னேறியது. ஆப்ரிக்காவை சேர்ந்த நாடுகள் பங்கேற்கும் ஆப்கோன் கால்பந்து போட்டிகள் மொராக்கோவின் ரபாட் நகரில் நடந்து வருகின்றன. டாப் 16 இடங்களை பெற்ற அணிகள் மோதும், ரவுண்ட் ஆப் 16 போட்டிகள் நேற்று நடந்தன. முதல் போட்டியில் செனகல் – சூடான் அணிகள் மோதின. விறுவிறுப்பாக துவங்கிய இப்போட்டியின் 6வது நிமிடத்தில் சூடான் அணியின் ஆமிர் அப்தல்லா யூனிஸ் முதல் கோல் போட்டு அசத்தினார். அதன் பின் ஆக்ரோஷமாக ஆடிய செனகல் அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல் வேட்டையாடினர்.
அந்த அணியின் பாபே குயே, போட்டியின் 29வது நிமிடத்திலும், 45+3வது நிமிடத்திலும் இரு கோல்கள் போட்டு அணியை முன்னிலைப்படுத்தினார். போட்டியின் கடைசி கட்டத்தில், 77வது நிமிடத்தில் செனகல் அணியின் இப்ராகிம் எம்பாயே ஒரு கோல் போட்டார். அதன் பின் இரு அணி வீரர்களால் வேறு கோல் போட முடியவில்லை. எனவே, 3-1 என்ற கோல் கணக்கில் செனகல் அணி அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் மாலி-துனீஷியா அணிகள் மோதின. இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால், தலா ஒரு கோலுடன் போட்டி டையில் முடிந்தது. அதையடுத்து நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில் மாலி அணி, 3-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
