- விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட்
- விதர்பா
- பரோடா
- பாண்டிய
- ராஜ்கோட்
- விஜய் ஹசாரே டிராபி போட்டி
- விஜய் ஹசாரே டிராபி
ராஜ்கோட்: பரோடா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் விதர்பா அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது.
விஜய் ஹசாரே கோப்பைக்காக ராஜ்கோட்டில் நேற்று நடந்த போட்டியில் பரோடா – விதர்பா அணிகள் மோதின. முதலில் ஆடிய பரோடா அணியின் துவக்க வீரர்கள் சொதப்பியதால், 71 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இருப்பினும் பின் வந்த ஹர்திக் பாண்ட்யா 92 பந்துகளில் 11 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் ரன் மழை பொழிந்து, 92 பந்துகளில் 133 ரன் குவித்தார். குறிப்பாக, பார்த் ரெகாடே வீசிய ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார் பாண்ட்யா. 50 ஓவர் முடிவில் பரோடா 9 விக்கெட் இழப்புக்கு 293 ரன் குவித்தது. பின்னர் களமிறங்கிய விதர்பா அணியின் துவக்க வீரர்கள் அதர்வா டெய்டே (65 ரன்), அமான் மொகாடே (ஆட்டமிழக்காமல் 150 ரன்), முதல் விக்கெட்டுக்கு 127 ரன் விளாசினர். பின் வந்த துருவ் ஷோரி ஆட்டமிழக்காமல் 65 ரன் குவித்தார். அதனால், 41.4 ஓவரில் விதர்பா ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, 296 ரன் குவித்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது.
* ராஜஸ்தானிடம் வீழ்ந்த தமிழ்நாடு
அகமதாபாத்தில் நேற்று நடந்த விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில், தமிழ்நாடு-ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் ஆதித்ய ரத்தோர் 34, ராம்நிவாஸ் கொலாடா 28 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். பின் வந்தோரில் தீபக் ஹூடா சிறப்பாக ஆடி, 69 பந்துளில் 70 ரன் குவித்தார். கேப்டன் மானவ் சுதர் 93 பந்துகளில் 43 ரன் எடுத்தார். 46.5 ஓவரில் ராஜஸ்தான், 225 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதையடுத்து, 226 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தமிழ்நாடு அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஆதீஷ் (54 ரன்), கேப்டன் நாராயண் ஜெகதீசன் (67 ரன்), அட்டகாசமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த நிலையில், ஆதீஷ் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ஜெகதீசனும் வீழ்ந்தார். பின் வந்த வீரர்கள், ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களின் துல்லிய பந்துகளில் சொற்ப ரன்களுக்கு இரையாகினர். அதனால், 41.4 ஓவரில், தமிழ்நாடு, 215 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 10 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் தரப்பில் 5 விக்கெட் வீழ்த்திய அசோக் சர்மா ஆட்ட நாயகன்.
