தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு: மொத்த தேர்ச்சி 92.09%; மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி

சென்னை: மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்1 வகுப்பில் படிக்கும் மாணவ மாணவரின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 7லட்சத்து 43 ஆயிரத்து 232 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 92.09 சதவீதம். மாணவர்களை விட மாணவியர் 6.43 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர். இந்நிலையில், மாநிலத்தில் அரியலூர் மாவட்டம் 97.76% தேர்ச்சியை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. அரசுப் பள்ளிகளிலும் அரியலூர் மாவட்டம் 96.94% தேர்ச்சியை பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் படித்த மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 5ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 7558 மேனிலைப் பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 7 ஆயிரத்து 98 மாணவ மாணவியர் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள், சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில், அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி பள்ளிகளில் இருந்து மொத்தம் 8,07,098 மாணவ மாணவியர் தேர்வு எழுதினர். அவர்களில் 4 லட்சத்து 24 ஆயிரத்து 610 பேர் மாணவியர். 3 லட்சத்து 82 ஆயிரத்து 488 பேர் மாணவர்கள். மேற்கண்ட தேர்வு எழுதியோரில் 7,43,232 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 92.09%. மாணவியர் 4.03,949 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் தேர்ச்சி வீதம் 95.13%. மாணவர்கள் 3,39,283 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் மொத்த தேர்ச்சி வீதம் 88.70%. மாணவர்களை விட மாணவியர் 6.43% கூதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாற்றுத்திறன் கொண்டு மாணவ மாணவியர் 9,205 பேர் தேர்வு எழுதியதில் 8,460 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 91.91%. சிறைவாசிகள் 125 பேர் தேர்வு எழுதியதில், 113 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 90.40%. தனித் தேர்வர்களாக 4,326 பேர் தேர்வு எழுதி 950 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சிவீதம் 21.96%. மேற்கண்ட பிளஸ் 1 தேர்வில் பதிவு செய்தவர்களில் 11,025 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1 தேர்வில் 8,11,172 பேர் தேர்வு எழுதியதில், 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். மொத்த தேர்ச்சி வீதம் 91.17%. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பிளஸ்1 தேர்வில் 0.92% கூடுதலாக தேர்ச்சி உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இயங்கி வரும் 7558 மேனிலைப் பள்ளிகளில் 2042 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 282 அரசு மேனிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன.

* பள்ளிகள் நிர்வாக வாரியான தேர்ச்சி வீதத்தை பொருத்தவரையில் அரசுப் பள்ளிகள் 87.34%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.09%, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.03% தேர்ச்சியை எட்டியுள்ளன.
* பள்ளிகளின் வகைப்பாடு வாரியாக பார்த்தால், இருபாலர் பள்ளிகள் 92.40%, பெண்கள் பள்ளிகள் 95.02%, ஆண்கள் பள்ளிகள் 83.66% தேர்ச்சியை எட்டியுள்ளன. பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 11.36% கூடுதலாகவும், இருபாலர் படிக்கும் பள்ளிகளில் ஆண்கள் பள்ளிகளை விட 8.74% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளன.

கடந்த 4 ஆண்டில் பிளஸ் 1 வகுப்பு
தேர்ச்சி வீதம்
2021 100%
2022 90.07%
2023 90.93%
2024 91.17%

* அரியலூர் மாவட்டம் முதலிடம்
பிளஸ் 1 வகுப்பில் அரியலூர் மாவட்டம் 97.76 சதவீதம் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 96.97% பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது. விருதுநகர் 96.23% பெற்று 3ம் இடமும், கோவை மாவட்டம் 95.77% பெற்று நான்காம் இடமும், தூத்துக்குடி மாவட்டம் 95.07% பெற்று ஐந்தாம் இடமும் பிடித்துள்ளன.

அதிக தேர்ச்சி வீதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்
1. அரியலூர் 96.94%
2. ஈரோடு 95.37%
3. நாகப்பட்டினம் 93.07%
4. விருதுநகர் 92.07%
5. சிவகங்கை 91.97%

* முக்கியப் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்ச்சி வீதம்
பாடங்கள் தேர்ச்சி வீதம்
தமிழ் 97.20% 41
ஆங்கிலம் 98.41% 39
இயற்பியல் 98.00% 390
வேதியியல் 97.54% 593
உயிரியல் 98.05% 91
கணக்கு 97.74% 1338
தாவரவியல் 95.63% 4
விலங்கியல் 97.09% 2
கணினி
அறிவியல் 99.75% 3535
வரலாறு 94.35% 35
வணிகவியல் 95.22% 806
கணக்குப்
பதிவியல் 94.04% 111
பொருளியல் 93.48% 254
கணினி
பயன்பாடு 98.48% 761
வணிக கணிதம் மற்றும் புவியியல் 94.39% 117

* 8446 ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்
* 582 ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை

* பாடப்பிரிவுகள் வாரியான தேர்ச்சி வீதம்
அறிவியல் பாடப்பிரிவுகள் 95.08%
வணிகவியல் பாடப்பிரிவுகள் 87.33%
கலைப் பிரிவுகள் 77.94%
தொழிற்பாடப்பிரிவுகள் 78.31%

* 10 மற்றும் பிளஸ் 1 தற்காலிக மதிப்பெண் பட்டியல்கள் 19ம் தேதி முதல் பதிவிறக்கலாம்
பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் அடுத்து, பிளஸ்1 வகுப்பில் சேர்வதற்கு வசதியாக தற்காலிக மதிப்பெண் பட்டியல்கள், மற்றும் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல்கள் 19ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதேபோல மேற்கண்ட இரண்டு வகுப்பு தேர்வின் விடைத்தாள் நகல் கோரி 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை தாங்கள் படித்த பள்ளிகளின் மூலம் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவ மாணவியர் மீண்டும் தேர்வு எழுத வசதியாக ஜூலை 4ம் தேதி முதல் துணைத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. துணைத் தேர்வு எழுத விரும்புவோர் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களிலும் 22ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

The post தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு: மொத்த தேர்ச்சி 92.09%; மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: