கோவை : கோவை மாநகராட்சிக்கு சொந்தமான எம்ஜிஆர் காய்கறி மொத்த மார்க்கெட் மேட்டுப்பாளையம் ரோடு சாயிபாபாகாலனி அரசு போக்குவரத்து கழக கோட்ட அலுவலகம் அருகே உள்ளது. இங்கு, 112 கடைகள் உள்ளன. இங்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் லாரி லாரியாக வந்து இறங்குகின்றன.
அன்றாடம் 300க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறி வரத்து உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உருளைக்கிழங்கு, நீலகிரி மாவட்டம ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் இருந்து முட்டைகோஸ், கேரட், பீட்ருட், பீன்ஸ், காளிபிளவர், நூல்கோல் உள்ளிட்ட பல்வேறு வகையான இங்கிலீஸ் காய்கறிகள் அதிகளவில் வருகின்றன. தற்போது இம்மார்க்கெட் மாநகராட்சி சார்பில் ரூ.3 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதில், சிமெண்ட் சாலையும் அடங்கும். புரனமைப்பு காரணமாக ஆங்காங்கே குழி தோண்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக, இந்த மார்க்கெட்டில் மழைநீர் குளம்போல் தேங்கியது. சீரமைப்பு காரணமாக போதிய வடிகால் வசதி இல்லை. இதனால், தண்ணீர் வெளியேற வாய்ப்பு இல்லாமல் அங்கேயே தேங்கி கிடக்கிறது.
இதனால், நேற்று காலை இம்மார்க்கெட்டில் மொத்த வியாபாரமும் பாதிக்கப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சிறு வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்ய முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.
இதுபற்றி இங்குள்ள வியாபாரிகள் கூறுகையில், ‘‘புனரமைப்பு பணி காரணமாக இங்கு இடப்பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, இப்பணி முடியும் வரை மாற்று இடம் ஒதுக்கி கொடுத்தால், காய்கறி வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். தற்போதுள்ள இடம் போதுமானதாக இல்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் நல்லது’’ என்றனர்.
The post எம்ஜிஆர் மார்க்கெட்டில் குளம்போல் தேங்கிய மழைநீர் appeared first on Dinakaran.
