தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 மாத பயிரான பொங்கல் கரும்பு நடவு பணிகள் தீவிரம்

* நிலத்தில் பார் அமைக்கும் விவசாயிகள்

* விதை கரும்பு விற்பனையும் அதிகரிப்பு

தஞ்சாவூர் : தஞ்சையை அடுத்த வரவுக்கோட்டை பகுதியில் பொங்கல் கரும்பு நடவு செய்வதற்கு விதைக் கரும்புகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கரும்பு, வாழை, வெற்றிலை, வெள்ளரிக்காய், உளுந்து, எள், மக்காச்சோளம், பூக்கள் போன்றவையும் சாகு படி செய்யப்பட்டு வருகின்றன.

இது தவிர பொங்கல் கரும்பும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருக்காட்டுப்பள்ளி, திருவோணம், வெட்டிக்காடு, மாரியம்மன்கோவில், சாலியமங்கலம், கம்பர்நத்தம், குளிச்சப்பட்டு, ராராமுத்திரைக்கோட்டை, வாளமரக்கோட்டை, சூரக்கோட்டை என மாவட்டத்தில் பல பகுதிகளில் பொங்கல் கரும்புகள் நடவு செய்யப்படுவது வழக்கம்.

இந்த கரும்புகள் நடவு செய்யப்பட்டு 10 மாதங்கள் கழித்து அறுவடைக்கு தயாராகும். பொங்கல் கரும்புகள் வழக்கமாக ஏப்ரல் கடைசி வாரம் மற்றும் மே மாதங்களில் நடவு செய்யப்படும். காரணம் இந்த காலக் கட்டத்தில் நடவு செய்தால் தான் ஜனவரி மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதனால் தற்போது பொங்கல் கரும்பு நடவுப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.அந்த வகையில் தஞ்சை அருகே வரவுக்கோட்டையில் விதைக்கரும்புகள் தயார் செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இப்போது நடவு செய்தால் தான் பொங்கல் பண்டிகை தினத்திற்கு விற்பனை செய்ய தயாராக இருக்கும். 1 ஏக்கர் பரப்பளவுக்கு 15 ஆயிரம் துண்டு விதைக்கரும்பு தேவைப்படும். ஓராண்டு பயிரான கரும்பின் வேர்கள் நன்றாக வளர்ந்து நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை மண்ணில் இருந்து பெற வேண்டுமானால் வயலில் குறைந்தது 30 செ.மீ. ஆழம் வரை மண் மிருதுவாக இருக்க வேண்டும். இதற்காக நிலத்தை சமன் செய்து பார்கள் அமைக்க வேண்டும்.

அதன் பின்னர் விதை கரும்புகளை நடவு செய்ய வேண்டும். தற்போது தஞ்சை அருகே சூரக்கோட்டை, காட்டூர், வரவுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விதைக் கரும்புகள் நடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பொங்கல் கரும்பு நடவு பணிகள் தொடங்கியுள்ளதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் விதைக்கரும்பு விற்பனையும் களைகட்டியுள்ளது. ஒரு விதைக்கரும்பு 2 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ”பொங்கல் கரும்பு சாகுபடி செய்யும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த கரும்பு 10 மாத பயிராகும். விதைக்கரும்பு, உரம், உழவு, பார் அமைப்பது, தோகை உரிப்பது என ஒரு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு ஆகும்.

இப்போது நடவு செய்தால் தான் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அறுவடை செய்யப்படும். கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு முழு கரும்பு வழங்கப்பட்டது. அதனால் இந்தாண்டு பொங்கல் கரும்பு சாகுபடி கூடுதலாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆயிரம் ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி

தமிழ்நாட்டில் காவிரி படுகை பகுதிகளான ஈரோடு, கோவை, நாமக்கல், திருச்சி மற்றும் தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பு அதிகமாக பயிரிடப்படுகிறது. இந்த மாவட்டங்களில் சுமார் 2லட்சம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

இந்தியாவில் அதிகம் கரும்பு சாகுபடி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 110 மெட்ரிக்டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ஆயிரம் ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 மாத பயிரான பொங்கல் கரும்பு நடவு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: