நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஹால்டிக்கெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி தரப்படும். தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பின் வருபவருக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி தரப்படாது. இதுதவிர தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும். வழக்கம்போல் தேர்வறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுச் செல்ல அனுமதியில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது.
தலை முடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் உட்பட இதர வழிமுறைகளையும் மாணவ, மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை //neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் என்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மற்றும் சிறிய பரப்பளவு கொண்ட தேனி, பெரம்பலூர், தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் வழக்கம்போல் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. அதன் மாணவர்கள் அருகே உள்ள நகரங்களில் தேர்வு எழுதுகிறார்கள். எனவே, மாணவர்கள் நலன் கருதி இந்த 7 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்க என்டிஏ முன்வர வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
The post இளநிலை நீட் தேர்வு நாளை தொடங்குகிறது புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் இல்லை: தேர்வு எழுதுவோர் வருத்தம் appeared first on Dinakaran.
