பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியதால் இந்திய விமான நிறுவனங்களுக்கு மாதம் ரூ.306 கோடி கூடுதல் செலவு: இழப்பீடு கேட்டு ஒன்றிய அரசிடம் மனு

புதுடெல்லி: பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியதால் இந்திய விமான நிறுவனங்களுக்கு மாதம் ரூ.306 கோடி கூடுதல் செலவாகிறது என்றும், அதற்கான இழப்பீடு வழங்கிடும்படி ஒன்றிய அரசிடம் விமான நிறுவனங்கள் மனு அளித்துள்ளன. கடந்த 22ம் தேதி பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த பிறகு, பாகிஸ்தான் வழியாக இந்திய விமானங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதேபோல் பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

இதனால் பெரும் பொருளாதார இழப்புகளை ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் சந்தித்துள்ளன. அந்த விமான நிறுவனங்கள் ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளன. அதில், ‘பாகிஸ்தான் தனது வான்வெளியை கடந்த 24ம் தேதி மூடியது. இதேநிலை ஓராண்டுக்கு நீடித்தால் இந்திய விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு கூடுதல் செலவாக சுமார் 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 5,081 கோடி) இழப்பு ஏற்படும். விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க ஒன்றிய அரசு நிதி உதவி வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட விவகாரம் தொடர்பான புள்ளி விபரங்களையும், பரிந்துரைகளையும் விமான நிறுவனங்கள் ஒன்றிய அமைச்சகத்திடம் அளித்துள்ள நிலையில், இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கான சாத்தியமான தீர்வுகளைப் பரிசீலித்து வருவதாக ஒன்றிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. பாகிஸ்தான் வான்வெளியை மூடியதால், இந்திய விமான நிறுவனங்களுக்கு எரிபொருள் நுகர்வு அதிகரிப்பததாகவும், நீண்ட தூரம் பயண நேரம் தேவைப்படுவதாகவும் கூறின.

வடமாநில நகரங்களில் இருந்து இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு கூடுதல் வாராந்திர செலவுகள் ரூ.77 கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விமான போக்குவரத்து நேரம் அதிகரிப்பு மற்றும் தோராயமான செலவுகளின் அடிப்படையில் வெளிநாட்டு விமானங்களின் எண்ணிக்கை கணக்கீடுகளின்படி, இந்திய விமான நிறுவனங்களுக்கான கூடுதல் மாதாந்திர செலவுகள் ரூ.306 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று விமான நிறுவனங்கள் ஒன்றிய அரசிடம் புள்ளி விபரங்களை சமர்ப்பித்துள்ளன.

The post பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியதால் இந்திய விமான நிறுவனங்களுக்கு மாதம் ரூ.306 கோடி கூடுதல் செலவு: இழப்பீடு கேட்டு ஒன்றிய அரசிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: