அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகளுக்கு உறுப்பினர்கள் புகழாரம்: கடும் நிதி நெருக்கடியிலும் முதல்வர் நிறைவேற்றி இருக்கிறார்


சென்னை: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 9 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வருக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நன்றி தெரிவித்து பேசினர்.

நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு: எத்தனையோ நிதி சவால்கள் இருந்தாலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடைய நலனுக்கு திராவிட மாடல் அரசு என்றைக்கும் அரணாக இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்துக் காட்டியிருக்கக்கூடிய முதல்வருக்கு துறையின் சார்பில் இரு கரம் கூப்பி நெஞ்சார்ந்த வணக்கத்தையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி: வாரி வழங்கக்கூடிய வள்ளல் என்று கடந்த 25ம் தேதி அன்று காலை 10 மணிக்குத்தான் சொன்னேன். இன்று 28ம் தேதி காலை 10 மணிக்கு அந்த வாரி வழங்கக்கூடிய வள்ளல் 9 விதமான அறிவிப்புகளை இன்றைக்கு அறிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக, ஆசிரியர்களுடைய நலன் சார்ந்திருக்கின்ற அந்த அறிவிப்புகளுக்கு உள்ளபடியே நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கிறார். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று ஈட்டிய விடுப்பை சரண் செய்வது 1-10-2025 முதல் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அகவிலைப்படி இரண்டு சதவீதம் உயர்த்தியும், கல்வி முன்பணம், திருமண முன்பணம், ஓய்வூதியதாரர்களுக்கான தொகையை உயர்த்தியும், குறிப்பாக மகளிருக்கு அவர்களுடைய தகுதிகாண் பருவத்தை முடித்து அவர்களுடைய முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு மனிதவள மேலாண்மைத் துறை சார்பாக எனது பணிவார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செ.ராஜேஷ் குமார் (காங்கிரஸ்): தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தபோதிலும், அரசு ஊழியர்கள், அரசு அலுவலர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கைத்தரம், வாழ்வாதாரம் உயர்வதற்கு, தமிழ்நாடு முதல்வர் கொண்டு வந்துள்ள அந்த அறிவிப்புகளை மனதார காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

ஜி.கே.மணி (பாமக): அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கைகள் வைத்து வந்தார்கள். அந்த கோரிக்கைகளை முதல்வர் முழு மனதோடு ஏற்றுக்கொண்டு 9 அறிவிப்புகளை அறிவித்திருக்கிறார். அதனை நெஞ்சார வரவேற்கிறேன். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முதல்வரை, அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

ம.சிந்தனை செல்வன் (விசிக): ஒன்றிய பாஜ அரசு பல்வேறு நெருக்கடிகளை தந்தாலும்கூட, அறம் நிறைந்த பெருமகனாராய் தமிழக முதல்வர் இருக்கிற காரணத்தால், இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவரது கையில் இருக்கிற இந்த அமுதசுரபியிலிருந்து அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு வந்துகொண்டேயிருக்கிறது என்பதை வியந்து பார்க்கிறேன். அவர் அறிவித்திருக்கும் அத்தனை அறிவிப்புகளையும் மனம் நிறைந்து வாழ்த்தவும், பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட்): அரசு ஊழியர்களின் நலனில் எப்பொழுதும் அக்கறை செலுத்துவது திமுக அரசுதான் என்பதை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். முதல்வர் விதி 110ன்கீழ் சொன்னதைப்போல, அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச்செல்லக்கூடியவர்கள் அரசு ஊழியர்கள்தான். ஆகவே, அவர்களுடைய நலனைப் பேணுகிற வகையில், அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துகிற வகையில், முதல்வர் அறிவித்திருக்கிற இந்த 9 அறிவிப்புகளையும் மனதார பாராட்டுகிறேன். அதேநேரத்தில், அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஒரு கண்ணியமான, கவுரவமான ஓய்வூதியம் கிடைக்கிற வகையில், அந்த குழுவினுடைய பரிந்துரைகளை முதல்வர் அமலாக்க வேண்டும்.

தி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): அரசின் கடுமையான நிதி நெருக்கடியிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கின்ற முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அரசுக்கு பாலமாக இருந்து அரசினுடைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அமைக்கப்பட்டிருக்கிற குழுவினுடைய அறிக்கையை செப்டம்பர் மாத இறுதிக்குள் பெற்று, நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்று, முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

சதன் திருமலைக்குமார் (மதிமுக): முதல்வர் அறிவித்த சலுகைகள் மிக முத்தான 9 நவரத்தின சலுகைகள். இதில், அவர்களுக்கு ஊதிய உயர்வு, பண்டிகை கால உதவி, உயர் கல்வி கற்பதற்கு அவர்களுடைய குழந்தைகளுக்கு கடனுதவி, சலுகை உதவு போன்றவை பாராட்டத்தக்கதாக இருக்கின்றது.

ப.அப்துல் சமது (மமக): அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் இன்றைக்கு பெருமைப்படுத்தக்கூடிய வகையில் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட முதல்வருக்கு நன்றி. அந்த 9 மாத காலம் என்பதை மிக விரைவாக அவர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் அந்த அறிக்கையைப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈ.ஆர்.ஈஸ்வரன்(கொமதேக): நிதி சுமை எவ்வளவு இருந்தாலும், ஒன்றிய அரசு நமக்கு தேவையான நிதியைக் கொடுக்காமல், அந்த நிதி எல்லாம் மாநில நிதியிலிருந்து நாம் செலவழித்தாலும், அரசு ஊழியர்களுக்கு, பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் இன்றைக்கு செய்து, அவர்களை எல்லாம் மகிழ்ச்சியடைய செய்திருக்கிறார். இந்த அறிவிப்புகளுக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.வேல்முருகன் (தவாக): நிதி சுமைகளில் தமிழக அரசு இருந்தாலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணையோடு நம்முடைய அரசு என்று சொன்னால், அரசுக்கு முதுகெலும்பாக இருக்கக்கூடிய அரசு ஊழியர்களுடைய கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் சட்டப் பேரவை வரலாற்றில், ஒரே நேரத்தில் 9 தலைப்புகளில் இவ்வளவு பெரிய அறிவிப்புகளை வெளியிட்டு, அரசு ஊழியர்களின் நெஞ்சங்களில் பால்வார்த்துள்ளார்.

The post அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகளுக்கு உறுப்பினர்கள் புகழாரம்: கடும் நிதி நெருக்கடியிலும் முதல்வர் நிறைவேற்றி இருக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: