போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் கடும் போக்குவரத்து நெரிசல்

போச்சம்பள்ளி, ஏப்28: போச்சம்பள்ளியில் பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்து, கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளால் போக்குவரத்து அடிக்கடி ஸ்தம்பித்து வருகிறது. இதனால், கடும் அவதிப்படும் டிரைவர்கள் மற்றும் பயணிகள், இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட், பிரதான போக்குவரத்து மையமாக விளங்கி வருகிறது.

போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி, சுற்றுப்புற பகுதிகளான மத்தூர், பாரூர், அரசம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களும், போச்சம்பள்ளிக்கு வந்து விட்டு, அங்கிருந்து வெளியிடங்களுக்கு செல்வதால் போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கிருந்து சென்னை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், காரிமங்கலம், திருவண்ணாமலை, ஒகேனக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள், பொதுமக்கள் பஸ் ஸ்டாண்டில் குவிவது வழக்கம்.

குறிப்பாக பஸ் ஸ்டாண்டையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சந்தை களை கட்டும். சந்தை நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடுவர். இதனால், பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். போச்சம்பள்ளி சந்தை ஏக்கர் கணக்கில் பரப்பளவு கொண்டாலும், வியாபாரிகள் சந்தையில் கடை வைக்காமல் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து கடை விரிப்பது வாடிக்கையாக உள்ளது. பயணிகளுக்கான நடைமேடையை முழுவதுமாக ஆக்கிரமித்து, கடை போட்டு வருகின்றனர். மேலும், பஸ்கள் நிறுத்த வேண்டிய இடத்தில் தள்ளுவண்டிகள், சரக்கு வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்வதும், இருசக்கர வாகனங்களை விட்டுச் செல்வதுமாக உள்ளனர். இதனால், கூட்ட நெரிசல் அதிகரிக்கும் சமயங்களில், பஸ்களை இயக்க முடியாமல் டிரைவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

பஸ் ஸ்டாண்டிற்குள் இருந்து பஸ்சை எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்படுவதால், போய் சேரக்கூடிய இடத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றடைய முடியாத நிலை உள்ளதாக டிரைவர், கண்டக்டர்கள் புலம்பி தவிக்கின்றனர். மேலும், பஸ் ஸ்டாண்டில் கார், டெம்போ, இருசக்கர வாகனங்களையும் தாறுமாறாக நிறுத்தி வைத்திருப்பதால் போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது. இதன் காரணமாக, சந்தைக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பஸ் ஸ்டாண்ைட ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை அப்புறப்படுத்தி, காலியாக உள்ள சந்தையில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: