ஈரோடு மாவட்டம் பவானி வட்டம், குறிச்சி மலை பகுதியில் கிராவல் மண் வெட்டிக் கடத்தப்படுவதாகவும்,அரசு புறம்போக்கு நிலத்தை சமப்படுத்தி,வீட்டுமனைகளாக பிரித்தும், கான்கிரீட் ரோடுகள் அமைத்தும், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வருவாய் மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர். இது தொடர்பான விவகாரத்தில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு, அந்தியூர், பச்சாம்பாளையத்தைச் சேர்ந்த மோகனைக் (47) கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, ஈரோடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் திருடி எடுக்கப்பட்ட மண்ணின் அளவு மற்றும் மதிப்பினை ஆய்வு செய்ததில் அரசு கரடு புறம்போக்கு மற்றும் பூமிதான போர்டு நிலங்களில் மண் அள்ளப்பட்டது உறுதியானது.
அரசு கரடு புறம்போக்கு நிலத்தில் இருந்து 4365.6 கன மீட்டர் கிராவல் மண் அனுமதியின்றி வெட்டி எடுத்துள்ளது உறுதியானதைத் தொடர்ந்து, ஈரோடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநரின் அறிக்கையின் பேரில், கோபி சப்.கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற விசாரணைக்கு ஆஜராகுமாறு மோகனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், இந்த விசாரணையில் மோகன் ஆஜராகவில்லை.
எனவே, கனிமங்கள் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1957-ன் பிரிவு 4(1) மற்றும் 4(1)(ஏ) சட்டப்படியும், 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் சட்டப்படியும் கிராவல் மண் அனுமதியின்றி வெட்டி கடத்திச் சென்ற மோகனுக்கு, ரூ.33,87,710 அபராதம் விதித்து கோபி சப்.கலெக்டர் சிவானந்தம் உத்தரவிட்டார். மேலும், இத்தொகையை முழுவதும் வசூலித்து அறிக்கை அனுப்புமாறு பவானி வட்டாட்சியருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post குறிச்சி மலை பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியவருக்கு ரூ.33.87 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.