அமைச்சர் பொன்முடியை பதவி நீக்க கோரிய வழக்கு; தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த 8ம் தேதி நடந்த உள்அரங்க கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இந்நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெகன்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் பிரதிநிதி என்ற முறையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

பொன்முடியின் பேச்சு கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது, குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல. மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொன்முடிக்கு உள்ளது. அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்கள் அளித்தும், காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதவி பிரமாணத்தை மீறி செயல்பட்ட அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், வழக்குக்கு தொடர்பில்லாத முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும் அவற்றை நீக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார். இதை மனுதாரர் ஜெகன்நாத் ஏற்றுக் கொண்டதை அடுத்து, அரசு தலைமை வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய பகுதிகளை நீக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக ஜூன் 5ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

The post அமைச்சர் பொன்முடியை பதவி நீக்க கோரிய வழக்கு; தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: