அவனியாபுரம்: நான்காம் காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் இன்று (டிச. 30) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து நேற்றிரவு மதுரை வந்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழ் மொழி மிகவும் பழமையானது. நமது கலாசாரத்தின் தொன்மையான மொழி தமிழ். வட இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இங்கு வந்து தமிழ் கற்றுக்கொள்கிறார்கள்.
தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் வட இந்தியாவிற்கு சென்று, மாணவர்கள் பலருக்கும் தமிழ் கற்றுக்கொடுக்கிறார்கள். தமிழ் மொழி என்பது தேசிய ஒருங்கிணைப்பின் அடையாளம்’’ என்றார். தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு தரப்பில் கல்வி நிதியை வழங்காதது குறித்த குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு, ‘‘நமது கலாசாரத்தில் தமிழ் மொழி மிகவும் சிறந்தது. பிரதமர் மோடியும் அதே கருத்தில் இருப்பதால், தமிழ் மொழியை கொண்டாடுகிறார். இந்த மொழியில் திருக்குறள் வழியாக பல நல்ல கருத்துக்களை திருவள்ளுவர் கூறியுள்ளார். இது அனைவருக்கும் பெருமை தருவதாகும். புதிய கல்விக் கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழக அரசும் சில நாட்களில் அதனை ஏற்கும்’’ என்றார்.
