* மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை
சென்னை: பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது சட்ட விரோதம், அதிகார அத்துமீறலில் ஈடுபடும் ஆளுநரை பதவி விலக்க வேண்டும். ஆளுநர் கூட்டும் கூட்டத்தில் துணைவேந்தர்கள் பங்கேற்கக் கூடாது, அப்படி கலந்து கொள்வோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாணவர் இயக்கங்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: கடந்த சில ஆண்டுகளாக, வேந்தர் என்ற பெயரில் மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளில் தலையிட்டு, மாணவர்கள் நலனுக்கும், பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கும் தடையாக இருந்து வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் அத்துமீறல்களுக்கு, அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று தீர்ப்பு, தக்க நீதியை வழங்கியுள்ளது. இது தமிழ்நாட்டின் மாநில உரிமைக்கும், மாணவர்களின் உயர்கல்வி உரிமைக்கும் கிடைத்த விடுதலை ஆகும்.
இதற்காக வழக்காடி, உரிமையை மீட்டுள்ள தமிழ்நாடு அரசுக்கும், முதல்வருக்கும், அரசமைப்பு சட்டத்தை காத்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். துணைவேந்தர்கள் நியமனம் முதல் பல்கலைக்கழகத்தின் கல்வி செயல்பாடுகள் வரை காவிக் கறையைப் படிய வைக்கும் ஆர்.எஸ்.எஸ், சங் பரிவாரின் சதி இதன் மூலம் சட்ட ரீதியாக முறியடிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசமைப்பு சட்டப்படியான இந்த தீர்ப்பையும் மதிக்காதவராகவே ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னைக் காட்டத் தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு, தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு, தனியார், மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அழைத்து மாநாடு கூட்ட, உரையாட, அறிவுரை வழங்க சட்ட ரீதியாக ஆளுநருக்கு என்ன உரிமை உள்ளது.
தான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு, ஆளுநர் என்ற பெயரில் அதிகார அத்துமீறல்களில் ஈடுபடும் ஆர்.என்.ரவி உடனடியாக பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும்.சட்டப்படி சரியில்லாத ஒரு நிகழ்வில் இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பது பொருத்தமற்றதும், தமிழ்நாட்டின் உரிமையையும், சட்டத்தையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காததுமான செயலாகும். அவர் வகிக்கும் பொறுப்புக்கு உகந்த மாண்பை அவர் மீறுவதாகவே பொருள். தமிழ்நாட்டின் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும், நிர்வாக அலுவலர்களும் ஆளுநரின் இந்த அத்துமீறலுக்கு இடம் தரக் கூடாது.
அவர் கூட்டும் சட்டத்திற்கு புறம்பான கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது. அப்படி கலந்து கொள்வோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவர் நலனையும், கல்வி உரிமையையும் பறிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசமைப்புச் சட்ட அவமதிப்பு செயல்பாடுகளையும், அத்துமீறலையும் எதிர்த்துக் களம் காண்போம், உரிமை மீட்போம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post பல்கலை நிர்வாகத்தில் தலையிடுவது சட்ட விரோதம்; ஆளுநர் கூட்டும் கூட்டத்தில் துணைவேந்தர்கள் பங்கேற்க கூடாது: பங்கேற்பவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை appeared first on Dinakaran.