* சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன?
கடந்த 1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை மீட்டெடுக்க கையெழுத்தான மிக முக்கிய ஒப்பந்தம், சிம்லா ஒப்பந்தம். 1972ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. கிழக்கு பாகிஸ்தானுக்கான போரில் இந்தியா தலையிட்டதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இதில் இந்தியாவின் வெற்றியை தொடர்ந்து வங்கதேசம் என்ற புதிய நாடு உருவானது. போருக்கு பின் அமைதி சூழலை கொண்டு வர இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திராகாந்திக்கும், பாகிஸ்தான் பிரதமர் ஜூல்பிகார் அலி பூட்டோவுக்கும் இடையே இமாச்சல பிரதேசம் சிம்லாவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்: ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை நிர்வகிக்கும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இரு நாடுகளும் தங்கள் பிரச்னையை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமாகவோ, தங்களுக்கு இடையே பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட எந்த அமைதி வழி மூலமாகவோ தீர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் இறுதி தீர்வு நிலுவையில் உள்ளது. எனவே அதில் இரு தரப்பும் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றக் கூடாது. அமைதியான, இணக்கமான உறவுகளை பாதிக்கும் எந்தவொரு செயல்களையும் செய்தல், உதவுதல் அல்லது ஊக்குவிப்பதை இருநாடுகளும் தவிர்க்க வேண்டும். எப்போதும் ஒருவருக்கொருவர் தேசிய ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் மற்றும் இறையாண்மை சமத்துவத்தை மதிக்க வேண்டும். பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அரசியல் சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தல் அல்லது சக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
* என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
இருதரப்பு பிரச்னையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இருப்பதை சிம்லா ஒப்பந்தம் தடுக்கிறது. குறிப்பாக, காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச தலையீட்டை எதிர்ப்பதில் இந்தியா தொடர்ந்து தீவிரமாக இருக்கிறது. அதே சமயம், 2019ல் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் ஐநா மன்றத்தில் தொடர்ந்து முறையிட்டு வருகிறது. சிம்லா ஒப்பந்தம் இருப்பதால் மட்டுமே காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தானால் சர்வதேச பிரச்னையாக்க முடியவில்லை. தற்போது இந்த ஒப்பந்தம் நிறுத்தப்படுவதால், காஷ்மீர் விவகாரத்தை மூன்றாம் நாட்டிடம் அதாவது ஐநா, சீனா, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) போன்றவைகளின் உதவியை பாகிஸ்தான் நாட முடியும். இதன் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் தேவையில்லாமல் மற்ற நாடுகள் மூக்கை நுழைக்கும் சூழல் ஏற்படும்.
மேலும், போரின் போது கைப்பற்றப்பட்ட 13,000 கிமீ நிலத்தை இந்தியா திருப்பி கொடுத்தாலும், சோர்பத் பள்ளத்தாக்கில் துர்டுக் மற்றும் சாலுங்கா போன்ற பகுதிகளை தக்க வைத்துக் கொண்டது. வங்கதேசத்தை பாகிஸ்தான் அங்கீகாரத்ததற்கும் சிம்லா ஒப்பந்தம் மறைமுக காரணமாக அமைந்தது. தற்போது இவை அனைத்திற்கும் சிக்கல்கள் ஏற்படலாம். குறிப்பாக எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் ஏற்கனவே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது துப்பாக்கி சண்டையில் ஈடுபடுகிறது. தற்போது இவை அதிகரித்து பகை தீவிரமடைய வழிவகுக்கும். சிம்லா ஒப்பந்தம் நிறுத்தியதால், உடனடி பாதிப்புகள் இல்லாவிட்டாலும் இருதரப்பு உறவிலும் ராணுவ உறவிலும் நீண்டகால சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மேலும், காஷ்மீர் பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதிக்கும். அமைதி பேச்சுவார்த்தைக்கான எஞ்சியிருக்கும் சிறிய வாய்ப்பையும் ஒட்டுமொத்தமாக காலி செய்யும்.
The post சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? பாக். நிறுத்தி வைத்ததால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? appeared first on Dinakaran.