லண்டன்: விஜய் மல்லையாவுடன் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் இந்தியாவின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாக லலித் மோடி கூறி இருக்கிறார். இந்தியாவின் லலித் மோடி, விஜய் மல்லையா இருவரும் நிதி முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கி வெளிநாடு தப்பி உள்ளனர். ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் வழங்கியதில் ரூ.125 கோடி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். இவர்கள் இருவரும் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் மீது பணமோசடி மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிமீறல் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து லலித் மோடி, மல்லையா இருவரையும் இந்தியாவுக்கு அழைத்து வர சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், லண்டனில் சமீபத்தில் நடந்த மல்லையாவின் 70வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற லலித் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், இந்தியாவின் 2 மிகப்பெரிய தப்பியோடிவர்களாக தன்னையும், மல்லையாவையும் குறிப்பிட்ட அவர் இதைப் பார்த்து வயிறு எரியுங்கள் என கூறியிருந்தார். இதற்கு வெளியுறவு அமைச்சகம், ‘வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய பொருளாதாரக் குற்றவாளிகளை திரும்பக் கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது’ எனக் கூறியது.
இதைத் தொடர்ந்து வீடியோவை சமூக ஊடகத்தில் இருந்து நீக்கிய லலித் மோடி நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், ‘‘நான் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால், குறிப்பாக இந்திய அரசின் உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். இந்திய அரசு மீது எனக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டு. எனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. அது சித்தரிக்கப்பட்ட அர்த்தத்தில் நான் பேசவில்லை’’ என கூறி உள்ளார்.
