போராடி கல்வி சாலைக்குள் காலடி எடுத்து வைத்து உயர்கல்வியில் நாம் உயர பறக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

சென்னை: கும்பகோணத்தில் அமைகிறது கலைஞர் பல்கலைக்கழகம், போராடிக் கல்விச் சாலைக்குள் காலடி எடுத்து வைத்த நாம், உயர்கல்வியில் உயர உயரப் பறக்கிறோம், நானிலமெங்கும் தமிழ்நாட்டினர் உயர் பொறுப்புகளில் பணியாற்றுகிறோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்தது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: கும்பகோணத்தில் அமைகிறது கலைஞர் பல்கலைக்கழகம், போராடிக் கல்விச் சாலைக்குள் காலடி எடுத்து வைத்த நாம், உயர்கல்வியில் உயர உயரப் பறக்கிறோம், நானிலமெங்கும் தமிழ்நாட்டினர் உயர் பொறுப்புகளில் பணியாற்றுகிறோம்.

இந்த பெருமைகளுக்கு அடித்தளமிட்ட கலைஞர் செய்த சாதனைகளில் சில பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம், ஆரம்பப் பள்ளிகளில் பெண் ஆசிரியைகள் நியமனம், வாரத்தில் 5 நாட்கள் முட்டை என உண்மையான சத்துணவு, தமிழில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை, தேர்வு முறையில் செமஸ்டர் முறை அறிமுகம், தமிழ் வழியில் பொறியியல் படிப்பு, இலவச பஸ் பாஸ், இந்தியாவிலேயே முதன்முதலாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கணினிப் பாடம் அறிமுகம், பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நீக்கம், மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரிகள், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கு தனித்தனி துறைகள் மற்றும் அமைச்சகங்கள், அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை உருவாக்கினார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், கோவை வேளாண்மை அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை அண்ணா தொழில்நுட்ப அறிவியல் பல்கலைக்கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், ஒன்றிய அரசை வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் என நீளும் இந்த பட்டியலால் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞர் தமிழ்நாட்டு மக்களின் உயர்வில் என்றும் வாழ்வார். இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.

The post போராடி கல்வி சாலைக்குள் காலடி எடுத்து வைத்து உயர்கல்வியில் நாம் உயர பறக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு appeared first on Dinakaran.

Related Stories: