காஷ்மீருக்கு செல்ல மக்கள் அச்சம்: 90 சதவீத முன்பதிவுகள் ரத்து

ஸ்ரீநகர்: தீவிரவாத தாக்குதலை அடுத்து காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இதனால் 90 சதவீத முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக டெல்லியில் உள்ள பல பயண நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கோடை காலத்தையொட்டி அடுத்த மாதம் காஷ்மீருக்கு சுற்றுலா பலரும் ஓட்டல், பேருந்து, விமான டிக்கெட்களை முன்பதிவு செய்திருந்தனர். தற்போது பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அவற்றை உடனடியாக ரத்து செய்யுமாறு கூறியிருப்பதாக பயண நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஓட்டல், விமான முன்பதிவு கட்டணங்கள் திரும்ப கிடைக்காது என்றாலும் அவற்றை ரத்து செய்ய மக்கள் தயாராக இருப்பதாக ஏஜென்டுகள் கூறி உள்ளனர்.

காஷ்மீர் மட்டுமல்ல, பாதுகாப்பான ஜம்முவுக்கும் லடாக்கிற்கும் செல்லக் கூட மக்கள் பயப்படுவதாக அவர்கள் கூறி உள்ளனர். வைஷ்ணோதேவி கோயிலுக்கான கத்ரா பயணத்திற்கான முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டு வருவதாக சிலர் கூறி உள்ளனர். ஸ்ரீநகர் பயண சங்கம் அனைத்து போக்குவரத்து மற்றும் முன்பதிவுகளை நிறுத்துமாறு அறிவுறுத்தி உள்ளதாக சில டிராவல்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ‘‘எனவே மறு அறிவிப்பு வரும் வரை காஷ்மீருக்கான எந்த புதிய முன்பதிவுகளையும் நாங்கள் ஏற்க மாட்டோம்’’ என்றும் டெல்லியின் சில பயண நிறுவனங்கள் கூறியிருக்கின்றன.

ஏற்கனவே காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 15,000க்கும் மேற்பட்ட மக்களுக்கும் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக காஷ்மீர் சுற்றுலா துறை வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் தற்போது பஹல்காம் தாக்குதலால் மீண்டும் காஷ்மீர் மீது மக்களுக்கு பயம் ஏற்படத் தொடங்கி இருக்கிறது.

The post காஷ்மீருக்கு செல்ல மக்கள் அச்சம்: 90 சதவீத முன்பதிவுகள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: